நாசி துன்புறுத்தலின் மத்தியிலும் அவர்கள் உறுதியாக நின்றார்கள்
நாசி ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளுடைய அஞ்சாத உத்தமத்தன்மை, தெளிவாகவே கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் எடுத்த நிலைநிற்கைக்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது. இதை வரலாற்று பேராசிரியர் ஜான் விஸ், ஐடியாலஜி ஆஃப் டெத் என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்:
“1934-ல் இவான்ஜலிக்கல் சர்ச், ‘நாசிக்களை’ லூதரன் மக்கள் வரவேற்கவேண்டும் என்பதாக வற்புறுத்தி ‘பக்தியுள்ளவரும் நம்பகமானவருமான ஒரு தலைவரை’ ஜெர்மானியர்களுக்கு தந்ததற்காக ‘கர்த்தராகிய ஆண்டவருக்கு’ நன்றிசெலுத்தியது. . . . ஒரு புராட்டஸ்டண்டு பிஷப், ‘கடவுளால் அனுப்பப்பட்டவரே [ஹிட்லர்]’ என்பதாக தன்னுடைய திருச்சபைக் குருமாருக்கு எழுதினார்.” விஸ் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “ஹிட்லர் உடனடியாக நடக்கவிருந்த போல்ஸ்விக் புரட்சியிலிருந்து ஜெர்மனியைக் காப்பாற்றி அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவந்திருக்கிறார் . . . என்பதை பிஷப் டெபாலியோடுகூட . . . ஜெர்மன் மெத்தடிஸ்டு சர்ச் ஒப்புக்கொண்டது. மார்மான் சர்ச், ஹிட்லரை எதிர்ப்பது மார்மான் சட்டத்தை மீறுவதாக இருக்கும் என்பதாக அதன் உறுப்பினர்களுக்கு சொன்னது.” அவர் மேலுமாகச் சொல்கிறார்: “நாசி அரசுக்குக் கீழ்ப்பட்டிருப்பது ஒரு பரிசுத்தமான கடமை என்பதாக கத்தோலிக்கர்கள் சொல்லப்பட்டார்கள். கிழக்கு ஐரோப்பாவில் இவர்கள் செய்த அட்டூழியங்களைப் பாதிரிமார் தெரிந்துகொண்டபோதிலும் இந்தக் கடமையிலிருந்து ஒருபோதும் அவர்கள் பின்வாங்கவில்லை.”
ஆனால் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி என்ன? “ஒரு மதத் தொகுதியாக, யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே நாசிக்களை எதிர்த்தனர்” என பேராசிரியர் விஸ் சுட்டிக்காட்டுகிறார். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் சிறையிலிடப்பட்டார்கள்; அவர் தொடர்ந்து சொல்லுகிறார்: “என்றபோதிலும் சித்திரவதை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படும் எந்த ஒரு சாட்சியும் அவனுடைய அல்லது அவளுடைய மதத்தைக் கைவிட்டுவிடுவதாக ஒரு தாளில் கையெழுத்துப் போடுவதன் மூலமாக விடுதலை பெற்றிருக்க முடியும்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய உத்தமத்தைக் குறித்து, பேராசிரியர் விஸ் சொல்வதாவது: “அவர்களுடைய முன்மாதிரி, கிறிஸ்தவம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பு கொண்டிருந்த ஈடு இணையற்ற திட தீர்மானத்தையும் வீர செல்வாக்கையும் காண்பிக்கிறது; சமுதாயத்தோடு அதன் ஈடுபாட்டை காட்டிலும் ஒத்திணங்கிப் போகாமல் வாழ்வதற்கான ஆசையே மேலோங்கியிருந்தது. அவர்களைப் பற்றி ஒரு புராட்டஸ்டண்டு பாதிரி இவ்வாறு எழுதினார்: ‘பெரிய சர்ச்சுகள் அல்ல, ஆனால் பழிதூற்றப்பட்டு பரிகாசம் செய்யப்பட்ட இவர்களே முதலாவதாக நாசி பேயின் சீற்றத்துக்கு எதிராக உறுதியாக எழுந்து நின்று, தங்கள் விசுவாசத்தின்படி துணிச்சலாக அதை எதிர்த்தனர்.’”