யெகோவாவின் சாட்சிகள் சந்திக்கும்போது
கத்தோலிக்கர்கள், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தங்களுடைய வீட்டுக்கு வந்து சந்திக்கும்போது என்ன செய்யவேண்டும்? இத்தாலி நாட்டு பிஷப்களின் மாநாட்டின் தேசிய திருச்சபை போதகர் செய்தி அலுவலகம் அண்மையில் தயாரித்த ஒரு பிரசுரம் இவ்வாறு சொல்கிறது: “அவர்களிடம் பேச்சுக்கொடுக்க தயவாக ஆனால் உறுதியாக மறுப்பது, இந்த விஷயத்தில் தயவற்ற செயலாக இல்லை.”
எல்லா கத்தோலிக்கர்களும் இதை ஒப்புக்கொள்வதில்லை என்பதை இத்தாலியில் உள்ள ஃபோக்கியாவில் வாழ்ந்துவரும் ஒரு மனிதன் கெசட்டா டெல் மெசோகியோர்னோ என்ற செய்தித்தாளுக்கு அனுப்பிய ஒரு கடிதம் காண்பிக்கிறது:
“நான் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை. நான் ஒரு கத்தோலிக்கன். ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்கு தங்கள் வீடுகளில் அனுமதியில்லை என்பதைக் குறிப்பிடும் அறிவிப்புகளைக் கதவுகளின்மீது ஒட்டும்படியாக கத்தோலிக்க சர்ச்சின் அங்கத்தினர்களை வற்புறுத்தும் சர்ச்சின் சில சட்டங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றன. இந்த ஜனங்கள் வெறுமனே கடவுளுடைய வார்த்தையை எடுத்துச்சென்று, பைபிளின் ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ளவே மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இத்தாலியை காலரா தாக்கியபோது அந்த நோயை எவ்வாறு தவிர்ப்பது என்பதாக எங்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்ட அந்தச் சமயமே எனக்கு நினைவுக்கு வருகிறது.
“என்னுடைய கருத்துப்படி, கத்தோலிக்க அங்கத்தினர்களின் விருப்பங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலே சர்ச் தன்னுடைய சொந்த சட்டங்களை வற்புறுத்துவதையே இது காட்டுகிறது. ஆனால் இப்பொழுது சில வருடங்களாக, கத்தோலிக்கரும்கூட வீட்டுக்கு வீடு செல்வதை நான் கவனிக்கிறேன்; அவர்கள் யெகோவாவின் சாட்சிகளையும்கூட சந்திக்கிறார்கள்; சாட்சிகள் இவர்களை உள்ளே அழைத்து யாரையும் ஒதுக்கிவிடாமல் அவர்களோடு பேசுகிறார்கள்.”
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி மக்களை வற்புறுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, கஷ்டங்கள் நிறைந்த இந்தக் காலங்களில் தங்களுக்கு ஆறுதலளிப்பதாக அவர்கள் கண்ட கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவே அவர்கள் முயற்சிசெய்கிறார்கள். வீட்டுக்கு வீடு செல்வதன் மூலமும் தெருவில் அவர்கள் சந்திக்கும் ஆட்களிடம் பேசுவதன் மூலமும் செவிகொடுக்க மனமுள்ளவர்களோடு கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை யெகோவாவின் சாட்சிகள் பகிர்ந்துகொள்கிறார்கள்.—மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 5:42; 17:17.