“கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாட்டுக்கு வருக!
உலகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் பல லட்சக்கணக்கானோர் ஆஜராயிருப்பார்கள். இந்தியாவில் மட்டுமே, 16 மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கின்றன. முதல் மாநாடு அக்டோபர் 10-12-வரையிலும் கடைசி மாநாடு ஜனவரி 2-4 வரையிலும் நடைபெறும். இந்த மூன்று நாள் கூட்டங்களில் ஒன்று—வெள்ளி முதல் ஞாயிறு வரை—நடைபெறும் இடம் உங்கள் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருக்காது.
நடைமுறையில் பயனுள்ள அபரிமிதமான பைபிள் போதனையிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள். பெரும்பாலான இடங்களில் நிகழ்ச்சிநிரல் ஒவ்வொரு நாள் காலையும் 9:30 மணிக்கு இசையோடு ஆரம்பமாகும். கடவுளுடைய வார்த்தையில் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக வாழ்க்கையில் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆட்களோடு 25 நிமிட பேட்டிகள் வெள்ளி காலை இடம்பெறும். அந்த முதல் நிகழ்ச்சிநிரல் “தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடத்தல்” என்ற முக்கிய பேச்சோடு நிறைவுபெறும்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் முதல் பேச்சில், கிறிஸ்தவ சபையில் இளைஞர் கொண்டிருக்கும் இன்றியமையாத பங்கைப்பற்றி சிந்திக்கப்படும். அதைத் தொடர்ந்துவரும் மூன்றுபாக தொடர்பேச்சு, பேச்சிலும், நடத்தையிலும், தனிப்பட்ட தோற்றத்திலும் கிறிஸ்தவ நடத்தைக்குரிய பைபிள் தராதரங்களைக் கலந்தாலோசிக்கிறது. “விசுவாசக் குறைவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்,” “கடவுளுடைய வார்த்தை ஜீவனுள்ளது” ஆகிய அடுத்துவரும் பேச்சுகள் எபிரெயர் 3-ஆம் 4-ஆம் அதிகாரங்களிலுள்ள சிறந்த அறிவுரைகளின்மீது கவனத்தை ஊன்றவைக்கின்றன. வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிநிரல் “எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்” என்ற சொற்பொழிவோடு நிறைவுபெறும்.
“கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது” என்பதே சனிக்கிழமை காலையின் முதல் பேச்சு. “சத்தியத்தில் வேர்கொண்டு ஸ்திரப்படுகிறவர்களாகுங்கள்” என்ற தலைப்பில் அன்று காலையில் ஆற்றப்படும் மற்றொரு முக்கிய சொற்பொழிவு, ஆவிக்குரிய வளர்ச்சி எவ்விதமாக சாத்தியமாகும் என்பதை விளக்குகிறது. “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் முழுக்காட்டுதலுக்கு வழிநடத்துகிறது” என்ற மாநாட்டின் வழக்கமான அம்சத்தோடு அந்த நிகழ்ச்சிநிரல் நிறைவுபெறும்; அதற்குப்பின்பு புதிய சீஷர்கள் முழுக்காட்டப்படுவதற்கு ஏற்பாடு இருக்கும்.
சனிக்கிழமை பிற்பகல், “விசுவாசத்துக்காக கடினமாக போராடுங்கள்” என்ற ஆரம்ப பேச்சு பைபிள் புத்தகமாகிய யூதாவிலுள்ள புத்திமதியை கலந்தாலோசிக்கிறது. “யெகோவாவுடைய ஆலயத்துக்குப் போவோம் வாருங்கள்” என்ற ஒரு மணி நேர தொடர்பேச்சு கிறிஸ்தவ கூட்டங்களின் நன்மைகளை கலந்தாலோசிக்கும். அந்நாளின் நிகழ்ச்சிநிரல், “உங்களுடைய விசுவாசத்தின் தன்மை—இப்போது சோதிக்கப்படுகிறது” என்ற சொற்பொழிவோடு நிறைவுபெறும்.
ஞாயிறு காலை நிகழ்ச்சிநிரலில் பைபிள் புத்தகமாகிய யோவேலையும் நம்முடைய நாளுக்கு அதன் பொருத்தத்தையும் கலந்தாலோசிக்கும் மூன்றுபாக தொடர்பேச்சு இடம்பெறும். அதைத்தொடர்ந்து “கண்களை தெளிவாக வைத்திருங்கள்” என்ற தலைப்புடைய பைபிள் நாடகம் நடைபெறும். “விசுவாசமும் உங்கள் எதிர்காலமும்” என்ற பிற்பகல் பொதுப் பேச்சு மாநாட்டின் சிறப்பம்சமாக இருக்கும்.
நிச்சயமாகவே, அங்கிருப்பதன் மூலம் நீங்கள் ஆவிக்குரியபிரகாரமாய் அதிகத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நீங்கள் அன்போடு வரவேற்கப்படுவீர்கள். ஆஜராயிருப்பதற்கு இப்பொழுதே திட்டமிடுங்கள். உங்கள் வீட்டுக்கு அருகில் நடைபெறும் மாநாட்டின் இடத்தைத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்தோடு தொடர்புகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள். இனி வரவிருக்கும் விழித்தெழு! இதழிலும்கூட இந்தியாவில் மாநாடு நடைபெறும் இடங்களின் முகவரிகளையும் நீங்கள் காணலாம்.