‘கடவுளிடம் நான் அடைக்கலம் புகுவேன்’
‘கையாளுவதற்கு கடினமான [இந்த] கொடியக் காலங்களில்’ சோதனைகளும் அழுத்தங்களும் அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றன. உதாரணமாக, வேலைசெய்யுமிடத்தில் நம்முடைய நேர்மை சோதிக்கப்படலாம். நம்முடைய கற்பு பள்ளிசகாக்கள் மத்தியில் சோதிக்கப்படலாம். மேலும், ஒழுக்கத்தில் சீர்கெட்டிருக்கும் உலகத்தால் நம்முடைய உத்தமம் அடிக்கடி சோதிக்கப்படுகிறது.—2 தீமோத்தேயு 3:1-5, NW.
பைபிள் எழுத்தாளரான ஆசாப்பும்கூட அக்கிரமம் தழைத்தோங்கியிருந்த ஒரு சமயத்தில் வாழ்ந்துவந்தார். அவர் காலத்தில் வாழ்ந்த சிலர் தங்களுடைய தேவபக்தியற்ற நடத்தையைப் பற்றி பெருமையடித்தும் கொண்டனர். “பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றி”க்கொண்டது என்று ஆசாப் எழுதினார். “கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.” (சங்கீதம் 73:6, 8) இந்த மனநிலை உங்களுக்கு பழக்கப்பட்டது போல தொனிக்கிறதா?
சரியானதைச் செய்ய விரும்புகிறவர்களுக்கு இப்படிப்பட்ட நடத்தை மிகவும் வேதனையளிப்பதாகவும் சோர்வூட்டுவதாகவும்கூட இருக்கிறது. ‘நாள்தோறும் நான் வாதிக்கப்படுகிறேன்’ என்று ஆசாப் புலம்பினார். “அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.” (சங்கீதம் 73:14, 17) நீங்களும் அதேவிதமாக நினைக்கக்கூடும், ஆனால் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! ஆசாப்பால் அவருடைய நாளிலிருந்த அக்கிரமத்தை சமாளிக்க முடிந்தது; உங்களாலும் முடியும். ஆனால் எப்படி?
அபூரணமான மனிதரின் ஆட்சியில் உண்மையான நீதியை கண்டுபிடிப்பது ஏறக்குறைய சாத்தியமில்லாதது என்பதை ஆசாப் உணர்ந்துகொண்டார். (சங்கீதம் 146:3, 4; நீதிமொழிகள் 17:23) ஆகவே, தன்னைச் சுற்றியுள்ள அக்கிரமத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதற்கு முயன்று மதிப்புமிக்க தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் வள ஆதாரங்களையும் வீணாக்குவதற்குப் பதிலாக, அவர் கடவுளோடு தனக்கிருந்த உறவின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினார். ஆசாப் அறிவித்தார்: “எனக்கோ கடவுளை அண்டிக்கொண்டிருப்பதே நலம், யெகோவாவாகிய ஆண்டவரில் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.”—சங்கீதம் 73:28, தி.மொ.
இன்று, நேர்மையற்ற வியாபார பழக்கங்களில் ஈடுபடுகிறவர்கள் அநேக சமயங்களில் பொருளாதார அனுகூலங்களை அனுபவித்து மகிழுகிறார்கள். கடவுளுடைய ஒழுக்கசட்டங்களை அவமதிப்பதைக்குறித்து அநேகர் பெருமையடித்துக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் அவர்கள் என்றுமே வெற்றியடைந்துகொண்டிருக்க முடியாது. “நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்” என்று ஆசாப் குறிப்பிட்டார்.—சங்கீதம் 73:18.
ஆம், கடவுளுடைய குறித்த நேரத்தில், உண்மைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டிய சூழ்ச்சி, வன்முறை, ஊழல், தேவபக்கியற்ற இன்னும் மற்ற எல்லா பழக்கங்களும் ஒழிக்கப்பட்டுவிடும். பைபிள் இவ்வாறு வாக்களிக்கிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.” (சங்கீதம் 37:9) இதற்கிடையில் பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரனின் வார்த்தைகளை நாம் எதிரொலிப்போமாக: “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.”—சங்கீதம் 18:2.