யெகோவாவின் சாட்சிகளுக்கு மற்றொரு வெற்றி—கிரீஸில்
யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர ஊழியரான இருவரை உட்படுத்திய சட்ட வழக்கு ஒன்று, அக்டோபர் 6, 1995-ல், ஆதன்ஸிலுள்ள மூன்று உறுப்பினரைக் கொண்ட மாஜிஸ்ட்ரேட்டுகளின் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு மதமாற்றஞ்செய்தலாக இருந்தது. சாட்சிகள் ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டைச் சந்தித்தப் பின்பு அந்த அதிகாரியால் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விசாரணை நடத்திய நீதிபதியால் கேட்கப்பட்ட கேள்விகள் அந்த அம்மாள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார்கள் என்று காட்டின. உதாரணமாக, அவர்கள் இவ்வாறு கேட்டார்கள்: “இந்த ஊழியத்தை நீங்கள் எவ்வளவு காலமாகச் செய்துவருகிறீர்கள்? பல ஆண்டுகளாக ஜனங்கள் உங்களை எவ்வாறு நடத்தி வருகிறார்கள்? உங்கள் ஊழியத்திற்கு என்ன வகையான பிரதிபலிப்பு இருந்துவந்திருக்கிறது? ஜனங்களை வீடுகளில் சந்திக்கையில் அவர்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?” கொடுக்கப்பட்ட அந்தச் சிறந்த சாட்சிக்கு, நீதிமன்றத்தில் இருந்த எல்லாரும் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டார்கள்.
சாட்சிகளுக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாக, அரசாங்க வழக்கறிஞருங்கூட அவர்கள் சார்பாகப் பேசினார். அவருடைய முடிவான பேச்சில் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகளுக்குத் தங்கள் கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கும் அவரை வணங்குவதற்கும் மட்டுமல்லாமல், வீடுவீடாகவும், பொதுவிடங்களிலும், வீதிகளிலும், தங்களுக்கு விருப்பமானால் புத்தகங்களை இலவசமாய்ப் பகிர்ந்தளித்துங்கூட தங்கள் விசுவாசத்தைப் பரப்புவதற்கும் சட்டப்படியான உரிமை உள்ளது.” நீதிமன்றங்களாலும் அரசாங்க அவைகளாலும் அளிக்கப்பட்ட முன்னாள் வழக்குகளின் விடுதலையான தீர்ப்புகளையும் அவர் குறிப்பிட்டார். மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளின் சார்பாகத் தீர்மானித்த, கோக்கினாக்கிஸ் vs. கிரீஸ் வழக்கையும் அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிட்டார்.a “இந்த வழக்கில் கிரீஸ் அரசாங்கம் தண்டமுங்கூட செலுத்தியது என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். ஆகையால் அத்தகைய வழக்குகளைத் தீர்ப்பு செய்யும்படி அழைக்கப்படுகையில் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உண்மையில், இந்த வழக்குகளை முதலாவதாக நீதிமன்றத்திற்கே ஒருபோதும் கொண்டுவந்திருக்கக்கூடாது” என்று அரசாங்க வழக்கறிஞர் எச்சரித்தார்.
அரசாங்க வழக்கறிஞரின் பேச்சுக்குப் பின், சாட்சிகளின் வழக்கறிஞருக்கு அதிகம் சொல்வதற்கில்லை. இருப்பினும், மதமாற்ற சட்டம் அரசியலமைப்புக்கு ஒத்ததாக இல்லை என்றும், கிரீஸை சர்வதேச அளவில் இக்கட்டான நிலைமையில் வைத்திருக்கிறது என்றும் அறிவுறுத்துவதற்கு இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தினார்.
தலைமை வகித்த நீதிபதி மற்ற இரண்டு நீதிபதிகளையும் வெறுமனே பார்த்தார்; அந்த சகோதரனும் சகோதரியும் குற்றமற்றவர்கள் என்று ஒருமனதாகத் தீர்ப்புசெய்யப்பட்டது. ஒரு மணி நேரமும் 10 நிமிடங்களும் நீடித்த அந்த விசாரணை, யெகோவாவின் பெயருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் வெற்றியாக இருந்தது.
மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் விசாரித்த கோக்கினாக்கிஸின் வழக்குக்குப் பின், மதமாற்றத்தை உட்படுத்திய வழக்குகளில் குற்றமில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்ட நான்காவது வழக்காக இது இருக்கிறது. கிரீஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், தங்கள் பிரசங்க ஊழியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இப்போது பெரும்பாலும் இல்லாததற்காகவும், தடங்கல் இல்லாமல் ஊழியத்தைத் தொடர்ந்து செய்வது சாத்தியமாக இருக்கிறதற்காகவும் களிகூருகின்றனர்.
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐக் காண்க.