எல்லாமே தேவனிடத்திலிருந்து வந்த வெளிப்பாடுகளா?
பரிசுத்த பைபிளை எழுதும்படி ஏவிய அதே கடவுளுடைய ஆவி, பரிசுத்த புத்தகங்கள் என்று சிலர் கருதுகிற மற்ற புத்தகங்களும் ஏவப்பட்டு எழுதப்பட காரணமாயிருந்ததா? (2 தீமோத்தேயு 3:16) இத்தாலிய ஜெஸூட் ஜர்னல் (லா சிவில்ட்டா கத்தோலிக்கா) ஒன்று இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தது. “[வாடிகன்] செக்கரட்ரியேட் ஆஃப் ஸ்டேட் அதிகாரத்தின் கீழ்” இது பிரசுரிக்கப்பட்டது. அதனால் கத்தோலிக்க வட்டாரங்களில் மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடியது என்று கருதப்படுகிறது.
“கடவுள், பரிசுத்த ஆவியின் செயல்மூலம் யூதரல்லாத மற்றும் கிறிஸ்தவம் அல்லாத பாரம்பரிய பரிசுத்த புத்தகங்கள் சிலவற்றிலும் அவருடைய வார்த்தையைப் பரவச் செய்திருக்கிறார்,” என்று அந்த ஜெஸூட் ஜர்னல் சொன்னது. ஜெஸூட் மதத்தினரைப் பொருத்தவரை, பார்சி மதத்தின் அவஸ்தா அல்லது கன்ஃபூசியஸின் நான்கு புத்தகங்கள் போன்ற “பரிசுத்த” புத்தகங்கள் “ஓரளவுக்கு பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டவை; எனவே, குறைந்த அளவுக்காவது அவை ‘தேவனிடத்திலிருந்து வந்த வெளிப்பாடை’ உள்ளடக்குகின்றன.”
என்றபோதிலும், அந்தக் கட்டுரை பின்வரும் விளக்கத்தைத் தருகிறது. அது சொல்கிறது: “அப்படிப்பட்ட பரிசுத்த புத்தகங்கள் எல்லாமே கடவுளுடைய வார்த்தையை உடையவையாக இல்லை.” அப்புத்தகங்களை எழுதியவர்கள் ஒருவேளை அவர்கள் வாழ்ந்துவந்த மற்றும் செயல்பட்ட “கலப்புமத கோட்பாட்டுப் பின்னணியின் அல்லது தத்துவ கருத்துக்களின் செல்வாக்கை பெற்றிருக்கலாம்.” லா ரேப்பூப்ளிக்கா என்ற இத்தாலிய செய்தித்தாளின் வாடிகன் செய்தி நிருபர் மார்க்கோ போலீட்டின் பிரகாரம், கத்தோலிக்க சர்ச்சுக்கும் வரலாற்றுப்பூர்வ பெரிய மதங்களுக்கும் இடையே முன்பு இருந்திருக்கும் என்று கற்பனைகூட செய்திருக்க முடியாத தொடர்புகளை இப்பொழுது வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. இது இரண்டாம் ஜான் பால் என்பவரால் மிகவும் வலிமையாக ஆதரிக்கப்பட்ட, அஸிஸியில் 1986-ல் நடந்த கலப்புவிசுவாச குழுவின் போக்கை மீண்டும் ஆரம்பித்து வைக்கிறது.
யெகோவா கலகத்திற்கு, குழப்பத்திற்கு தேவனாயில்லை. (1 கொரிந்தியர் 14:33) ஆகவே அவருடைய வார்த்தையாகிய பைபிளோடு சிறிதளவுகூட ஒத்திசைவாய் இராத எந்தப் புத்தகத்தின் எந்தப் பாகத்தையும் எழுதுவதற்கு அவருடைய பரிசுத்த ஆவி அல்லது செயல் நடப்பிக்கும் சக்தி தூண்டுவிக்கும் என்று நாம் நிச்சயமாகவே தீர்மானிக்க முடியாது. பலவித ‘மத பாரம்பரியங்களுக்கு’ இடையே கிறிஸ்தவ அணுகுமுறைகளை உற்சாகப்படுத்துவதற்கு பதிலாக, கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார், “ஒரே நம்பிக்கை . . . , ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” உண்டு.—எபேசியர் 4:4, 5.
அந்த “ஒரே நம்பிக்கை” இயேசுவில் விசுவாசம் வைப்பதை அடிப்படையாய்க் கொண்டிருக்கிறது. பைபிள் பொருத்தமாகவே சொல்கிறது: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப்போஸ்தலர் 4:12) வேறு எந்தப் “பரிசுத்த புத்தகமும்” கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் இயேசுவை மைய நபராக எடுத்துக்காண்பிப்பதில்லை. பைபிளை நாம் கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே, அது நமக்கு ரட்சிப்பிற்கான யெகோவா தேவனின் அன்பான ஏற்பாட்டைப் போதிக்கும்.—யோவான் 17:3; 1 தெசலோனிக்கேயர் 2:13.