கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மக்கள் கற்றுக்கொள்வதற்கு உதவ ஒரு புதிய கருவி
“அதன் எளிய, நேரடியான, அன்பான அணுகுமுறை, எதிர்பார்ப்புகளுக்கும் விஞ்சிய பலனைத் தரும். உண்மை மனமுள்ள, துருவி ஆராய்கிற எந்தவொரு நபரும் ‘தேவன் மெய்யாகவே உங்கள் மத்தியில் இருக்கிறாரென்று’ சொல்லத் தூண்டுமளவுக்கு அதன் பொருள்கள் சிக்கலில்லாத, ரம்மியமான முறையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” (1 கொரிந்தியர் 14:25) கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற புதிய சிற்றேட்டை விவரிக்கையில் தாய்லாந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இவ்விதமாய் சொன்னார். இது, 1996/97 “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டில், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த 32-பக்க, முழுவர்ண சிற்றேடு ஒரு பைபிள் படிப்பு பாடத்திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பைபிளின் அடிப்படை போதனைகளை சிந்திக்கிறது. வார்த்தை அமைப்பு எளிமையாகவும் சுருக்கமாகவும், கடவுள் நம்மிடம் தேவைப்படுத்துவதை தெளிவாக விளக்குவதாகவும் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வதில் வாசகருக்கு எந்தவித பிரச்சினையும் இருக்க வேண்டியதில்லை. இந்தப் புதிய சிற்றேட்டில் நீங்கள் எவ்வாறு ஒரு பைபிள் படிப்பை நடத்தலாம்?
கேள்விகளைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பத்திலும் கேள்விகள் உள்ளன. ஒவ்வொரு கேள்விக்குப் பிறகு வரும் அடைப்புக் குறிகளுக்குள், பதில்கள் காணப்படுகிற பத்திகளின் எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். முன்னதாக பார்வையிடுவதற்கும் மறுபடியும் பார்வையிடுவதற்குமான போதனா கருவியாக இந்தக் கேள்விகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, வீட்டு பைபிள் படிப்பின் ஆரம்பத்தில், மாணாக்கருடைய குறிப்புகளைப் பெறுவதற்காக நீங்கள் அவரிடம் அந்தக் கேள்விகளைக் கேட்கலாம். தவறான எந்தப் பதில்களையும் உடனடியாக திருத்துவதற்குப் பதிலாக, நீங்கள் அந்தப் படிப்பைத் தொடரலாம். பாடத்தின் முடிவில், மாணாக்கரால் இப்பொழுது பைபிளுக்கு இசைவாக பதிலளிக்க முடிகிறதா என்பதை காண்பதற்கு நீங்கள் மறுபடியும் அந்தக் கேள்விகளுக்குத் திரும்பலாம்.
வேதவசனங்களை எடுத்துப்பாருங்கள். ஒவ்வொரு பாடத்திலும், பைபிள் சத்தியங்களின் சுருக்கமான கூற்றுகள் வேதவசன ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான வேதவசனங்கள் மேற்கோள் காட்டப்படாமல் இடக்குறிப்பு செய்யப்பட்டிருப்பதால், மாணாக்கர் தன்னுடைய சொந்த பைபிளில் அந்த வசனங்களை எடுத்துப்பார்ப்பதற்கு அவரை உற்சாகப்படுத்துவது முக்கியம். கடவுளுடைய வார்த்தையை அவர் வாழ்க்கையில் பொருத்துவதற்கு முன்பாக, அதை வாசித்து அதன்பேரில் தியானிப்பது அவசியம்.—யோசுவா 1:8.
படங்களை சிறப்பித்துக் காண்பியுங்கள். இந்தச் சிற்றேடு புகைப்படங்களாலும் வண்ண ஓவியங்களாலும் தாராளமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது—மொத்தத்தில் 50-க்கும் மேலான படங்கள் இதில் அடங்கியுள்ளன. இவை கண்ணுக்கு விருந்தளிப்பவையாக இருப்பது மட்டுமல்லாமல், கூடுதலான போதனா கருவிகளாகவும் இருக்கின்றன. உதாரணமாக, கடைசி இரண்டு பாடங்கள் (எதிரெதிர் பக்கங்களை நோக்கியவாறு, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பாடம்) “கடவுளுடைய சித்தத்தைச் செய்ய மற்றவர்களுக்கு உதவி செய்தல்” மற்றும் “கடவுளுக்குச் சேவை செய்வதற்கான உங்கள் தீர்மானம்” என்பதாக தலைப்பிடப்பட்டிருக்கின்றன. இரண்டு பக்கங்களுக்கும் பரந்து காணப்படும் அந்தப் புகைப்படங்கள், சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல், வீட்டுக்கு வீடு வேலையில் பங்குகொள்ளுதல், ஒப்புக்கொடுத்தல், கடைசியாக முழுக்காட்டப்படுதல் போன்றவற்றை காண்பிப்பதன் மூலம் ஒரே நபரின் ஆவிக்குரிய வளர்ச்சியைப் படிப்படியாக கொண்டுசெல்கின்றன. மாணாக்கருடைய கவனத்தை இந்தப் படங்களுக்குத் திருப்பி, கடவுளை சேவிப்பதற்கு தேவைப்படுகிற படிகளை உணர்ந்துகொள்ளும்படி நீங்கள் அவருக்கு உதவிசெய்கிறீர்கள்.
அக்கறை காட்டுகிற ஒரு நபருக்கு நன்றாக வாசிக்கத் தெரியவில்லை அல்லது அறவே வாசிக்கத் தெரியவில்லை என்றால் அப்போது என்ன செய்வது? அநேக மொழிகளில் இந்தப் புதிய சிற்றேடு ஆடியோ கேஸட்டுகளில் கிடைக்கும்படி சொஸைட்டி செய்துவருகிறது. அந்தக் கேஸட்டில் சிற்றேட்டின் விஷயங்களும் இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள அநேக வசனங்களும் உள்ளன. அதில் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது: முதல் கேள்வி வாசிக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து அதற்கான பதிலை அளிக்கும் பத்தி (அல்லது பத்திகள்) வாசிக்கப்படுகின்றன, அதோடுகூட இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வேதவசனங்களும் வாசிக்கப்படுகின்றன. பின்பு அடுத்த கேள்வி வாசிக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து பத்தி, அதற்கான பதிலை அளிக்கும் வேதவசனங்கள், இன்னும் பிற வாசிக்கப்படுகின்றன. படிப்புக்காக தயாரிக்கையில், மாணாக்கர் அதில் பதிவுசெய்யப்பட்டிருப்பதை செவிகொடுத்துக் கேட்கலாம். படிப்பை நடத்தும்போதுகூட அந்தக் கேஸட்டைப் பயன்படுத்தலாம்.
மாநாட்டில் ஆஜராயிருந்தவர்கள் இந்தப் புதிய சிற்றேட்டை தங்களுடைய வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு ஆவலாய் இருந்தார்கள். உதாரணமாக, அந்தச் சிற்றேட்டை பெற்ற சில நாட்களுக்குப் பின்பு, ஐக்கிய மாகாணங்களிலுள்ள இரண்டு பயனியர்கள் (முழுநேர சுவிசேஷகர்கள்) தாங்கள் மறுசந்திப்பு நடத்திவந்த ஒரு இளம் தம்பதிக்கு அதைக் கொடுத்தனர். அந்தத் தம்பதி அதிலுள்ள பொருளடக்கத்தைப் பார்த்தபோது, “கடவுள் வெறுக்கிற பழக்கங்கள்” என்ற பாடம் அவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. “கடவுள் ஒருக்காலும் வெறுக்க முடியாது—அவர் எப்போதுமே அன்பானவர்—என்பதாகவே எனக்கு எப்பொழுதும் போதிக்கப்பட்டது,” என்று அந்த இளம்பெண் சொன்னாள். “நான் முதலாவது வாசிக்கப்போவது இதுதான்.” அந்த இரண்டு பயனியர்களும் அடுத்த வாரத்தில் திரும்பவும் சென்றபோது, அந்த இளம்பெண் இவ்வாறு சொன்னாள்: “நான் அந்தப் புதிய சிற்றேட்டை வாசித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் செய்வது ரொம்ப கஷ்டம். யெகோவா எங்களைக் குறித்து பிரியப்படுவதில்லை—நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் நாங்கள் ஒரு தீர்மானத்தை செய்திருக்கிறோம். அடுத்த வெள்ளிக்கிழமையில் திருமணம் செய்துகொள்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.” அந்தப் பயனியர்களைக் கட்டித்தழுவிக்கொண்டு அவர்கள் சொன்னதாவது: “ஒழுங்கான ஒரு படிப்பை வைத்திராததற்காக நாங்கள் வருந்துகிறோம், இருந்தபோதிலும் அந்தத் தீர்மானம் எங்களுக்கு பெரிய விடுதலையை கொண்டுவந்தது.”
எப்படியாகிலும், தேவைப்படுத்துகிறார் என்ற அந்தப் புதிய சிற்றேட்டை பயன்படுத்துங்கள். கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மற்றவர்கள் கற்றுக்கொள்ளுவதற்கு உதவிசெய்ய இது ஒரு சிறந்த கருவி.
[பக்கம் 17-ன் படங்கள்]
இந்தப் புதிய சிற்றேட்டை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?