போருக்காக யாரை குற்றம்சாட்ட வேண்டும்?
மனிதனால் நடத்தப்பட்ட போர்களுக்காக கடவுளைக் குற்றம்சாட்ட வேண்டுமா? “வேண்டாம், ஏனெனில் கடவுள் போரை விரும்புவதில்லை.” இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து சிறிது காலத்திற்குப் பிறகு, இவ்விதமாகத்தான் மார்ட்டின் நீமோலர் என்ற பிரபல ஜெர்மன் புராட்டஸ்டண்ட் பாதிரி ஒருவர் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். 1946-ல், ஆக் காட் ஃபார்ம் ஹிம்மல் ஷி டாரைன்—ஸிக்ஸ் ப்ரீடிக்டன் (ஓ கடவுளே, பரலோகத்திலிருந்து பாரும்—ஆறு பிரசங்கங்கள்)a என்ற ஒரு புத்தகத்தில் அவருடைய குறிப்புகள் பிரசுரிக்கப்பட்டன. அந்தப் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“[போருக்காக] கடவுளைக் குற்றம்சாட்ட விரும்புபவர்கள் எவரும் கடவுளுடைய வார்த்தையை அறியாதவர்கள், அல்லது அறிய விரும்பாதவர்கள். உண்மையில், இடைவிடாமல் தொடர்ந்து நடத்தப்பட்ட போர்களுக்காக கிறிஸ்தவர்களாகிய நாம் அதிகமாய் குற்றம்சாட்டப்பட வேண்டுமா வேண்டாமா என்பது மற்றொரு கேள்வி. இந்தக் கேள்விக்கு நாம் எளிதில் தப்பித்துக்கொள்ள முடியாது. . . . காலம்காலமாக, போர்களையும் படைகளையும் படைக்கருவிகளையும் ஆசீர்வதிப்பதற்கு கிறிஸ்தவ சர்ச்சுகள் அடிக்கடி தங்களை மனமுவந்து அளித்திருக்கின்றன என்பதையும், போரில் தங்களுடைய எதிரிகள் அழிக்கப்படுவதற்காக மிகவும் கிறிஸ்தவமற்ற முறையில் ஜெபம் செய்திருக்கின்றன என்பதையும் துல்லியமாய் நினைவுகூர முடியும். இவையனைத்தும் நம்முடைய தவறு, நம்முடைய முன்னோர்களின் தவறு, எவ்விதத்திலும் கடவுளை குற்றம்சாட்ட முடியாது. கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று, ஓர் உட்பிரிவு என்றழைக்கப்படுகிற ஊக்கமிக்க பைபிள் மாணாக்கர்களுக்கு (Earnest Bible Students) [யெகோவாவின் சாட்சிகள்] முன்பு வெட்கத்தோடு தலைகுனிந்து நிற்கிறோம்; இராணுவ சேவை செய்ய மறுத்ததினாலும் மனிதர்களைச் சுட்டுக்கொல்லுவதற்கு மறுத்ததினாலும் அவர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கான்சன்ட்ரேஷன் முகாம்களுக்குச் சென்றனர், மரிக்க[வும்] செய்தனர்.”
இன்று, இரண்டாம் உலகப் போருக்கு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சமாதானத்தை நேசிக்கும் ஆட்களுக்கு நீமோலருடைய வார்த்தைகள் சிந்தனைக்கான ஒரு விஷயமாய் இருக்கின்றன. தேசங்கள் செய்த இரத்தம் சிந்துதலுக்கு கடவுளை நிச்சயமாகவே குற்றம்சாட்ட முடியாது! உண்மையில், இந்த உலக சண்டைகளுடன் எந்தவித பங்கும் வகிக்காத அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் மூலம், எல்லா போருக்கும் வெகு சீக்கிரத்தில் வரவிருக்கும் முடிவைக் குறித்து கடவுள் அறிவித்து வருகிறார்.—சங்கீதம் 46:9; யோவான் 17:16.
[அடிக்குறிப்புகள்]
a மார்ட்டின் நீமோலருடைய பிரசங்கங்கள், குற்றவுணர்ச்சியைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் என்ற புத்தகத்தில் பின்பு ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டன. இருப்பினும், ஆங்கில மொழிபெயர்ப்பு ஜெர்மன் மூலவாக்கியத்திலிருந்து வேறுபடுகிறது, எனவே இந்த மேற்கோள் ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
USAF photo