‘அவர்கள் மற்றவர்களுக்கு உதவிசெய்ய ஆவலாய் இருக்கின்றனர்’
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நியூ யார்க் நகர போலீஸ்காரர் ஒருவர் அப்படித்தான் சொன்னார். நியூ யார்க், புரூக்லினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அலுவலகத்தில் சேவை செய்துகொண்டிருக்கும் காத்லென் என்ற முழுநேர வாலண்டியர் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
சூரிய ஒளி வீசிய மிதவெப்பமான இலையுதிர் காலத்தில் ஒரு நாள் காத்லென் மதிய உணவு இடைவேளையின்போது அருகிலிருந்த உலாவும் நடைபாதையின் மீதிருந்த பெஞ்சில் உட்கார்ந்தாள். அவள் ஹெட்ஃபோன் அணிந்து ஒரு ஆடியோகேசட்டை கேட்டுக்கொண்டிருந்தாள். ஈஸ்ட் ரிவரின் குறுக்கே அமைந்திருந்த ஹெலிகாப்டர் தளத்தில் போப் புறப்படுவதற்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தன; அவர் அந்த நகருக்கு விஜயம் செய்திருந்தார். எல்லா இடங்களிலும் பலத்த பாதுகாப்பு இருந்தது; அநேக போலீஸ்காரர்கள் அந்த உலாவும் இடத்தில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் காத்லெனை அணுகி அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று கேட்டார். காத்லென் இவ்வாறு பதிலளித்தாள்: “நான் ரஷ்ய மொழி டேப் ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருக்கிறேன். இந்த நகரில் வசிக்க வந்திருக்கும் ரஷ்ய மொழி பேசும் ஆட்களோடு கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பகிர்ந்துகொள்வதற்காக நான் ரஷ்ய மொழி கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.”
நியூ யார்க் நகரில் சுற்றுக்காவல் அதிகாரியாக கடந்த 15 வருடங்களாக வேலை செய்கையில் அவர் யெகோவாவின் சாட்சிகளை பார்த்து வியந்து பாராட்ட ஆரம்பித்ததாக அந்த போலீஸ்காரர் கூறினார். அவர் சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகளை ஒழுங்கமைக்கப்பட்ட மதமாக நான் கருதுகிறேன், சமுதாயத்திலுள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் அதன் அங்கத்தினர்கள் உண்மையாகவே ஆவலாய் இருக்கின்றனர்.”
யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலை செய்பவர்கள் என்று உலகமுழுவதுமாக நன்கு அறியப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:20) மனிதவர்க்கத்தை தொல்லைப்படுத்தும் பிரச்சினைகளுக்கு கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே ஒரே தீர்வு என்பதை அவர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர்; அதே சமயத்தில் ஜனங்கள் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்துவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலமும்கூட அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகின்றனர். உதாரணமாக, கற்றுக்கொள்வதற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை வீட்டில் உருவாக்கித் தர வேண்டும் என்று சாட்சிகள் பெற்றோரை ஊக்குவிக்கின்றனர். நேர்மையானவர்களாகவும் சட்டத்துக்கு கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் தனிப்பட்ட நபர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர்; வேலைக்கு அமர்த்துபவர் மதிப்புமிக்கதாய் காணும் பண்புகளையும் திறமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
ஆம், யெகோவாவின் சாட்சிகள், சமுதாயத்திலுள்ள ஜனங்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதில் மிகவும் ஆவலாய் இருக்கின்றனர். பின்வரும் அழைப்புக்கு பதிலளிக்கும்படி நீங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.