நான்காண்டுகால போரின்போது ஆறுதல்
முன்னாள் யுகோஸ்லாவியா பிரதேசத்தில் நடந்த நான்காண்டுகால போரின்போது, அநேக மக்கள் துன்பங்களையும் கடும் தட்டுப்பாடுகளையும் அனுபவித்தார்கள். ‘சகல ஆறுதலின் தேவனை’ தொடர்ந்து உண்மையுடன் வணங்கிவந்த நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளும் அவர்களில் உட்பட்டிருந்தார்கள்.—2 கொரிந்தியர் 1:3.
சரஜெவோவில், போர்க்காலம் முழுவதும் முற்றுகையிடப்பட்டிருந்த பெரிய நகரத்தில் வாழ்ந்துவந்த காரணத்தால் மக்கள் இன்னும் கூடுதலான துன்பத்தை அனுபவித்தார்கள். அங்கு மின்சாரம், தண்ணீர், விறகு, உணவு ஆகிய தட்டுப்பாடுகள் இருந்தன. இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைமைகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய சரஜெவோ சபை எவ்வாறு செயல்பட்டது? அண்டை நாடுகளிலிருந்து வந்த கிறிஸ்தவர்கள் பெருமளவில் நிவாரண பொருட்களைக் கொண்டுவருவதற்காக தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள். (காவற்கோபுரம், நவம்பர் 1, 1994, பக்கங்கள் 23-7-ஐக் காண்க.) மேலும், சரஜெவோவிலுள்ள சகோதரர்கள் ஆவிக்குரிய காரியங்களைப் பகிர்ந்துகொள்வதன் பேரில் பிரதான முக்கியத்துவத்தைக் கொடுத்து தங்களிடம் இருந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள். முற்றுகையின்போது, அந்த நகரத்திலிருந்த கிறிஸ்தவ கண்காணி ஒருவர் பின்வரும் அறிக்கையைக் கொடுத்தார்:
“நாங்கள் எங்களுடைய கூட்டங்களை மதிப்புமிக்கவையாக கருதுகிறோம். என் மனைவியும் நானும், 30 ஆட்களுடன் சேர்ந்து, கூட்டங்களுக்காக போய்ச்சேருவதற்கு மட்டுமே 15 கிலோமீட்டர் [9 மைல்] நடக்கிறோம். கூட்டங்கள் நடத்தப்பட்ட சமயங்களில் தண்ணீர் வழங்கப்படும் என்று சிலசமயங்களில் அறிவிக்கப்பட்டது. அந்தச் சகோதரர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் வீட்டிலேயே இருந்துவிடுவார்களா அல்லது கூட்டங்களுக்கு ஆஜராவார்களா? நம்முடைய சகோதரர்கள் கூட்டங்களுக்கு ஆஜராக விரும்பினார்கள். சகோதரர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உதவிசெய்கிறார்கள்; அவர்கள் என்ன வைத்திருந்தாலும் சரி, அதை பகிர்ந்துகொள்கிறார்கள். எங்களுடைய சபையிலுள்ள ஒரு சகோதரி புறநகர் பகுதியில், காட்டுக்கு அருகில் வசிக்கிறார்; ஆகவே கொஞ்சம் விறகு கிடைப்பது அவருக்கு சற்று எளிதாக இருக்கிறது. அவர் ஒரு பேக்கரியில் வேலையும் பார்க்கிறார், மாவு அவருக்கு வருமானமாக கொடுக்கப்படுகிறது. சாத்தியமானபோது, ஒரு பெரிய ரொட்டி சுட்டு அதை கூட்டத்திற்கு கொண்டுவருகிறார். கூட்டத்திற்குப் பிறகு, போகும் வழியில் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு கொடுக்கிறார்.
“சகோதர சகோதரிகளில் எவருமே ஒருபோதும் கைவிடப்பட்டவர்களாக உணரவே இல்லை என்பது முக்கியமானது. அசெளகரியமான சூழ்நிலைமையில் அடுத்ததாக நம்மில் யாருக்கு உதவி தேவை என்பது யாருக்கும் தெரியாது. சாலைகள் பனிநிறைந்தவையாக இருந்த சமயத்தில் ஒரு சகோதரி நோய்வாய்ப்பட்டபோது, பலமுள்ள இளம் சகோதரர்கள் ஒரு சறுக்குவண்டியில் அவரை வைத்து கூட்டத்திற்கு இழுத்துவந்தார்கள்.
“நாங்கள் அனைவரும் பிரசங்க வேலையில் பங்குகொள்கிறோம், யெகோவா எங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதித்திருக்கிறார். பாஸ்னியாவில் எங்களுடைய மோசமான சூழ்நிலைமையை அவர் பார்த்திருக்கிறார், ஆனால் அதிகரிப்பினால்—போருக்கு முன்புகூட நாங்கள் பார்த்திராத அதிகரிப்பினால்—அவர் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.”
அதைப் போலவே, போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட முன்னாள் யுகோஸ்லாவியாவின் மற்ற பகுதிகளில், யெகோவாவின் சாட்சிகள் கடுமையான துன்பங்களின் மத்தியிலும் அதிகரிப்பை அனுபவித்திருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய குரோஷியா அலுவலகத்திலிருந்து சாட்சிகளுடைய ஒரு தொகுதியைப் பற்றிய இந்த அறிக்கை வருகிறது: “வெல்லிக்கா க்லாடுஷாவில் வசித்துவரும் சகோதரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு சமாளிக்கவேண்டிய கடுமையான காலங்களை எதிர்பட்டார்கள். அந்த நகரம் பல்வேறு சமயங்களில் தாக்கப்பட்டது. சகோதரர்கள் தங்களுடைய நடுநிலைமையைக் குறித்து குரோஷியர்களுக்கு, செர்பியர்களுக்கு, மற்றும் பல்வேறு முஸ்லிம் படையினருக்கு விளக்க வேண்டியதாயிருந்தது. சிறையிலடைத்தல், அடிகள், பசி, மரண அபாயம் ஆகியவற்றை அவர்கள் அதிகமாக சகிக்கவேண்டியிருந்தது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. இருப்பினும், அவர்கள் அனைவரும் உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள், அதோடு அவர்களுடைய வேலைகளில் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் காணும் குறிப்பிடத்தக்க சிலாக்கியத்தையும் பெற்றிருக்கிறார்கள்.”
இப்படிப்பட்ட துன்பங்களின் மத்தியிலும், வெல்லிக்கா க்லாடுஷாவிலும் அண்டை நகரமாகிய பீஹாக்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய அயலாருடன் கடவுளுடைய ஆறுதலின் செய்தியை வைராக்கியமாக பகிர்ந்துகொள்கையில் தொடர்ந்து அதிகரிப்பை அனுபவித்து மகிழ்கிறார்கள். மொத்தமாக 26 ராஜ்ய பிரஸ்தாபிகள் இந்த இரண்டு இடங்களிலிருந்து 39 வீட்டு பைபிள் படிப்புகளை நடத்திவருகிறார்கள்!