“அவர்களை அனுப்பிவிடாதீர்கள்!”
“யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோ அல்லது இரண்டு பேரோகூட உங்கள் வீட்டின் கதவு மணியை அடித்தால், அவர்களை அனுப்பிவிடாதீர்கள்!” என்று கொரிரி டெல்லா செரா அறிவுரை கூறுகிறது. வட இத்தாலியில் ட்ரெவிசோ என்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது; அதில் ஒரு வணிகர் தன்னைக் காண வந்த இரண்டு சாட்சிகளை அனுப்பிவிட்டதால் பத்து இலட்சம் லேருக்கும் மேலான (600 ஐ.மா. டாலருக்கும் மேல்) பணத்தை இழந்துவிடக்கூடிய நிலைக்கு தன்னை ஆளாக்கினார்.
செய்தித்தாளின்படி, அந்த நபரிடம் இரண்டு சாட்சிகள் பின்வரும் வார்த்தைகளை சொல்லி தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்: “இன்று உங்களுக்கு நன்னாள். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள், உங்களிடம் கொடுப்பதற்கு நாங்கள் விலைமதிப்புள்ள ஒன்றை வைத்திருக்கிறோம்.” அப்போது, சிநேகப்பான்மையற்ற அந்த வணிகர் அவர்கள் சொல்ல வந்த செய்தியை முடிப்பதற்கு முன் கதவை மூடிவிட்டார்.
அவர்கள் சொல்ல வந்ததை அந்த மனிதர் செவிகொடுத்துக் கேட்டிருந்தால், சாட்சிகள் பூங்கா பெஞ்சில் கண்டெடுத்த அவருடைய பணப்பையை கொடுப்பதற்காக அவருடைய வீட்டுக்கு வந்ததை அவர் அறிந்திருப்பார். ஆகையால் சாட்சிகளுக்கு அந்தப் பணப்பையை அதற்குள் இருந்த பொருட்களோடு சேர்த்து அருகாமையில் இருந்த காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் காவலர்கள் அதை அந்த உரிமையாளரிடம் திரும்பக் கொடுத்தார்கள்.
“வேறு யாராவது அந்தத் தோல்வியுற்ற [சாட்சிகளின்] சூழ்நிலையில் இருந்திருந்தால், . . . அந்தப் பணப்பையிலிருந்த கணிசமான தொகையை தாங்களே வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள். யெகோவாவின் சாட்சிகளோ முற்றிலும் நேர்மையானவர்களாய் இருப்பதால் அப்படி செய்வதில்லை,” என்று இல் கெஸட்டினோ டி ட்ரிவிசோ கூறியது.
யெகோவாவின் சாட்சிகள் ‘முற்றிலும் நேர்மையாய்’ இருக்கும்படி எது அவர்களைத் தூண்டுகிறது? இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு இணக்கமாய் கடவுள் பேரிலும் அயலான் பேரிலும் அவர்கள் வைத்திருக்கும் அன்பே அதற்குக் காரணம். (மத்தேயு 22:37-39) யெகோவா தேவனால் வாக்களிக்கப்பட்டிருக்கும் மகத்தான “புதிய பூமி”யைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு செல்வதற்கும் அதுவே காரணம். அப்படிப்பட்ட நம்பிக்கையின் செய்தி எந்தப் பொருளாதார உடைமையையும்விட மதிப்புமிக்கது!—2 பேதுரு 3:13.