உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 8/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • இதே தகவல்
  • நாங்களும் உங்களோடு வருகிறோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • கர்த்தருடைய இராப் போஜனம் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • நாங்கள் “உங்களோடேகூடப் போவோம்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • ‘கடவுளுடைய சக்தி ஊர்ஜிதப்படுத்துகிறது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 8/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

நினைவுச் சின்னங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கை சிறிது அதிகரித்திருப்பதாக சில வருடங்களின் அறிக்கைகள் காண்பிக்கின்றன. அநேக புதிய நபர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதை இது குறிப்பிடுகிறதா?

பல ஆண்டுகளுக்கு முன்பே அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் 1,44,000 என்ற எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது என்பதை நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது.

எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும் அந்தத் தொகுதியில் முதலாவதாக இருப்போரைப் பற்றி நாம் அப்போஸ்தலர் 2:1-4-ல் வாசிக்கிறோம்: “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளில் பேசத்தொடங்கினார்கள்.”

அதற்குப் பிறகு, யெகோவா மற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தார். கிறிஸ்தவ மதம் ஆரம்பித்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர். நம்முடைய நாளில் நடைபெறும் நினைவு ஆசரிப்பு கொண்டாட்டத்தின்போது, ரோமர் 8:15-17-ல் காணப்படும் பவுலின் வார்த்தைகளை பேச்சாளர் அடிக்கடி கவனத்துக்கு கொண்டு வருகிறார், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் “புத்திரசுவிகாரத்தின் ஆவியை” பெறுகின்றனர் என்று அங்கு குறிப்பிடப்படுகிறது. அவர்கள் பெற்றுக்கொள்ளும் பரிசுத்த ஆவி ‘அவர்களுடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுத்து, அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்றும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரர் என்றும் சாட்சி பகருகிறது,’ என்று பவுல் கூடுதலாக சொன்னார். உண்மையிலேயே ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருப்போர் அதை நிச்சயமாய் அறிந்திருக்கின்றனர். அது வெறும் அவர்களுடைய சொந்த விருப்பமோ அல்லது தங்களைக் குறித்தே உணர்ச்சிப்பூர்வமான மற்றும் உண்மையல்லாத எண்ணத்தைக் கொண்டிருப்பதால் ஏற்படும் பிரதிபலிப்போ அல்ல.

இருண்ட காலம் என்றழைக்கப்பட்ட காலப்பகுதியின்போது அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் வெகு சிலரே இருந்த சமயங்கள் இருந்தபோதிலும், இந்தப் பரலோக அழைப்பு நூற்றாண்டுகளினூடே தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.a கடந்த நூற்றாண்டின் முடிவின் சமயத்தில் மெய் கிறிஸ்தவம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டபோது, இன்னும் கூடுதலான நபர்கள் அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1930-களின் மத்திபத்தில், 1,44,000 பேர்களின் முழு எண்ணிக்கை அடிப்படையளவில் பூர்த்திசெய்யப்பட்டதாக தோன்றுகிறது. இவ்வாறு பூமிக்குரிய நம்பிக்கையுடைய உண்மைப்பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் அடங்கிய தொகுதி ஒன்று அப்போது தோன்ற ஆரம்பித்தது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கும் அப்படிப்பட்ட “வேறே ஆடுகளை” ஒரே அங்கீகரிக்கப்பட்ட மந்தை என இயேசு குறிப்பிட்டார்.—யோவான் 10:14-16.

அபிஷேகம் செய்யப்பட்டோரின் அழைப்பு முடிவடைந்து விட்டதையும், “மிகுந்த உபத்திரவத்தை” தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடைய “திரள்கூட்டத்தார்” அதிகரிப்பதன் பேரில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பதையும் கடந்த ஆண்டுகளின்போது நடந்த உண்மைகள் எடுத்துக் காண்பிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 7:9, 14) உதாரணமாக, 1935-ல் நடைபெற்ற நினைவு ஆசரிப்பின்போது 63,146 பேர் ஆஜராயிருந்தனர், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என வெளிப்படையாக காண்பித்து நினைவுச் சின்னங்களில் பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை 52,465 ஆகும். முப்பது வருடங்களுக்குப் பிறகு, அல்லது 1965-ல், ஆஜராயிருந்தவர்களின் எண்ணிக்கை 19,33,089 எனவும் பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை 11,550 எனவும் குறைந்தது. அதிலிருந்து 30 வருடங்களுக்குப் பிறகு நம் நாளுக்கு வருகையில் 1995-ல் ஆஜரானவர்களின் எண்ணிக்கை 1,31,47,201 என உயர்ந்தது, ஆனால் 8,645 பேர் மட்டுமே அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொண்டனர். (1 கொரிந்தியர் 11:23-26) தெளிவாகவே, பல வருடங்கள் கடந்த பிறகு, மீதியானோரைச் சேர்ந்தவர்கள் என்று வெளிப்படையாக அறிவித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது—1935-ல் சுமார் 52,400 பேர்; 1965-ல் 11,500 பேர்; 1995-ல் 8,600 பேர். இருப்பினும், பூமிக்குரிய நம்பிக்கையுடையோர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுடைய எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான நினைவு ஆசரிப்பு அறிக்கை 1995-ஆம் ஆண்டுக்குரியதாகும், ஆஜரானவர்கள் மற்றும் பங்குகொண்டவர்களின் விகிதம் உண்மையில் குறைந்தபோதிலும் முந்தின வருடத்தைக் காட்டிலும் 28 பேர் கூடுதலாக பங்கெடுத்தனர் என்று அது காண்பிக்கிறது. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்க்கையில், நினைவுச் சின்னங்களில் பங்குகொள்ள கூடுதலாக இன்னும் சிலர் தெரிந்துகொண்டதைக் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பல வருடங்களாக, புதிதாக முழுக்காட்டப்பட்டவர்களும்கூட திடீரென பங்கெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அநேகருடைய விஷயங்களில், சிறிது காலத்துக்குப் பிறகு, அது தவறான செயல் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஒருவேளை உடல் சம்பந்தமான அல்லது மன சம்பந்தமான அழுத்தத்தினால் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வமான பிரதிபலிப்பின் காரணமாக தாங்கள் பங்குகொண்டதாக சிலர் கண்டுணர்ந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்படவில்லை என்பதை இறுதியில் அறிந்துகொண்டனர். கடவுள் அதை இரக்கத்தோடு புரிந்துகொள்ளும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். பூமியில் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வர் என்ற நம்பிக்கையோடு அவர்கள் சிறந்த, உண்மைத்தன்மையுள்ள கிறிஸ்தவர்களாக அவரை தொடர்ந்து சேவித்து வருகின்றனர்.

ஒரு நபர் நினைவுச் சின்னங்களில் பங்கெடுக்க ஆரம்பிக்கும்போதோ அல்லது பங்கெடுப்பதை நிறுத்திவிடும்போதோ அதைக் குறித்து நம்மில் எவரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எவராவது ஒரு நபர் உண்மையில் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பது நம்முடைய பொறுப்பல்ல. இயேசுவின் உறுதியான நம்பிக்கையை நினைவுபடுத்திப் பாருங்கள்: “நானே நல்ல மேய்ப்பன், நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்.” அதைப் போன்ற உறுதியோடு, ஆவிக்குரிய குமாரர்களாக தாம் தேர்ந்தெடுத்திருக்கும் நபர்களை யெகோவா அறிந்திருக்கிறார். வயதாகிக்கொண்டே செல்வதும் எதிர்பாராத சம்பவங்களும் அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருகையில் அபிஷேகம் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே செல்லும் என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது. இருப்பினும், மெய்யாகவே அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும் நபர்கள் மரணம் வரை உண்மையுள்ளவர்களாக நிரூபித்து ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ள ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறபோது, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்களான வேறே ஆடுகள் வரப்போகும் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக ஆவலோடு எதிர்பார்க்கலாம்.—2 தீமோத்தேயு 4:6-8; வெளிப்படுத்துதல் 2:10.

[அடிக்குறிப்பு]

a காவற்கோபுரம் (ஆங்கிலம்), மார்ச் 15, 1965, பக்கங்கள் 191-2-ஐப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்