வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு ஒரு விஜயம்
அழகான, அமைதியான சுற்றுச்சூழலின் மத்தியில் ஒரு புத்தம் புதிய வீட்டை—ஒரு பரிசாக—உங்களுக்கென்று வாங்கியிருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார் என வைத்துக்கொள்வோம். ‘அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?’ என்று நீங்கள் யோசிக்கக்கூடும். நீங்கள்தாமே அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக நடந்து சென்று பார்க்கவேண்டும் என்றும், சோதித்துப் பார்க்கவேண்டும் என்றும் ஆவலாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. பார்க்கப்போனால், இது உங்களுடைய புதிய வீடு ஆயிற்றே!
பொ.ச.மு. 1473-ல் பண்டைய இஸ்ரவேல் தேசத்தாருக்கு ஒரு புதிய வீட்டை—அந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை, அளவில் வடக்குத் தெற்காக சராசரி சுமார் 500 கிலோமீட்டரும், 55 கிலோமீட்டர் அகலமும் உடைய நீண்டு குறுகிய பிராந்தியத்தை—யெகோவா கொடுத்தார்.a வளமான பிறைப்பிரதேசம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசம் வாழ்வதற்கு ரம்மியமான ஓர் இடமாக, அதற்கே உரிய பிரத்தியேகமான தனித்தன்மைகளால் அழகுபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால் யாருக்கோ, விசேஷமாக வெகு காலத்திற்கு முன்பு வாழ்ந்த யாருக்கோ கொடுக்கப்பட்ட ஒரு “வீட்டை” பற்றி இன்று நீங்கள் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்? ஏனென்றால், சரித்திரப்பூர்வமான இந்தத் தேசத்தைப்பற்றி அறிவதானது பைபிள் விவரப்பதிவுகளில் உங்களுக்கிருக்கும் மதித்துணருதலை அதிகரிக்கலாம். “பைபிள் தேசத்தில் புவியியலும் வரலாறும் அவ்வளவு ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளதால் ஒன்றின் துணையின்றி மற்றொன்றை உண்மையில் புரிந்துகொள்ள இயலாது” என்று மறைந்த பேராசிரியர் யோஹானான் ஆஹாரொனி எழுதினார். மேலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அதன் மேம்பட்ட நிலையில் இருந்தபோது, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பரதீஸ் என்பது உலகம் முழுவதிலும் மனிதவர்க்கத்திற்கு விரைவில் எதை அர்த்தப்படுத்தும் என்பதற்கு சிறிய அளவில் முன்மாதிரியை அளித்தது!—ஏசாயா 11:9.
இயேசு கிறிஸ்து தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது, இந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் சாதாரண காட்சிகளை நடைமுறையான பாடங்களைக் கற்றுக்கொடுக்க உபயோகித்துக்கொண்டார். (மத்தேயு 13:24-32; 25:31-46; லூக்கா 13:6-9) பண்டைய பலஸ்தீனாவின் சிறப்பு அம்சங்கள் சிலவற்றை ஆராய்வதிலிருந்து நாமும்கூட நடைமுறையான விதத்தில் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். அடையாள அர்த்தத்தில் சொல்வோமானால், வாருங்கள் அதனுடைய அறைகள் சிலவற்றில் நாம் நடந்து சென்று பார்க்கலாம்; பல நூற்றாண்டுகளாக கடவுளுடைய மக்களின் வீடாக இருந்த இந்தத் தேசத்தின் தனித்துநிற்கும் சிறப்பு அம்சங்கள் சிலவற்றைச் சோதித்துப் பார்க்கலாம். நாம் பார்க்கப்போகிற விதமாக, இந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து நமக்குக் கற்றுக்கொள்வதற்கு அதிகம் இருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரைகளில் “வாக்குப்பண்ணபட்ட தேசம்” என்ற உபயோம், அந்த இடத்தில் தற்கால அரசியல்/மதம் சார்ந்த உரிமைபாராட்டள்கள் எதிலு தலையிடாமல், பைபிளில் அறிவிக்கப்பட்டுள்ளவாறே காலங்களின் கண்ணோட்டத்திலிருந்து காரியங்களை நோக்குகிறது
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian