அவர் தாழ்மையோடு யெகோவாவை சேவித்தார்
“நீங்கள் எங்குச் சேவிக்கிறீர்கள் என்பது அவ்வளவு முக்கியமல்ல, ஆனால் யாரைச் சேவிக்கிறீர்கள் என்பதுதான் உண்மையிலேயே முக்கியம்.” இவ்வார்த்தைகளைச் சொல்வதில் ஜான் பூத்திற்கு மிகவும் விருப்பம், அதற்கேற்பவே அவரும் வாழ்ந்தார். அவருடைய பூமிக்குரிய வாழ்க்கை, திங்கட்கிழமை, ஜனவரி 8, 1996-ல் முடிவுற்றது, அது அவர் யாரைச் சேவிக்க தெரிவுசெய்தார் என்ற கேள்விக்கே இடமளிக்கவில்லை.
1921-ல் ஓர் இளம் மனிதராக ஜான் பூத் வாழ்க்கையின் நோக்கத்தைத் தேடிக்கொண்டிருந்தார். டச் ரிஃபார்ம்டு சர்ச்சின் சன்டே ஸ்கூலில் போதித்து வந்தார், ஆனால் ஓர் ஊழியக்காரராவதற்கான பயிற்சி எடுக்கும் எண்ணத்தைப் புறக்கணித்தார், ஏனென்றால், குருமார் தன்னலமான வாழ்க்கை வாழ்வதாக அவர் உணர்ந்தார். “இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் இறப்பதில்லை” என்ற தலைப்பையுடைய பேச்சின் விளம்பர சுற்றறிக்கையை அவர் கண்டபோது, அதில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த பிரசுரத்தை வரவழைக்க காலதாமதம் செய்யவில்லை. அவர் எதைப் படித்தாரோ அதனால் கவரப்பட்டவராக, அன்று பைபிள் மாணாக்கர்கள் என்று அறியப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு விரைவிலேயே சைக்கிளில் 24 கிலோமீட்டர் தூரம் செல்ல துவங்கினார். 1923-ல் அவர் முழுக்காட்டப்பட்டார், வீட்டுக்கு வீடு ஊழியத்தை நியூ யார்க்கிலுள்ள வால்கில் பிரதேசத்தில் செய்ய துவங்கினார், அங்கு அவருடைய குடும்பம் ஒரு பால் பண்ணையை வைத்திருந்தது.
ஏப்ரல் 1928-ல் சகோதரர் பூத் முழுநேர சேவையில் சேர்ந்தார். அவருடைய சொந்த பிராந்தியத்திலும் தென் மாகாணத்தின் கிராமப்புறங்களிலும் அவர் பிரசங்கித்தார், பைபிள் பிரசுரங்களை உணவுக்காகவும் உறைவிடத்துக்காகவும் பரிமாற்றம் செய்தார். துப்பாக்கி முனையால் அச்சுறுத்தும் சட்டவிரோதமான மதுபான தொழிற்சாலை சொந்தக்காரர்களை எதிர்ப்படுதல் போன்ற இடர்களை அவர் சந்தித்தார். அவர்களில் ஒருவன் ஜான் பூத்தின் சக பயனியரை சுட்டு காயப்படுத்தினான். 1935-ல் சகோதரர் பூத் ஒரு பிரயாணக் கண்காணியாக நியமிக்கப்பட்டார், நாடெங்கிலும் இருந்த சபைகளையும் சிறு தொகுதிகளையும் விஜயம் செய்ய ஆரம்பித்தார். அவர் மாநாடுகளை ஏற்பாடு செய்து, எதிர்ப்பின் மத்தியிலும் விடாமுயற்சியுடன் இருக்க சகோதர சகோதரிகளுக்கு உதவினார். கோபத்தோடு வரும் கலகக்கும்பலை எதிர்ப்படுதல், நீதிமன்றத்தில் நிலைநிற்கை எடுத்தல், சிறைத் தண்டனையால் துன்பப்படுதல் ஆகிய அனைத்தும் சகோதரர் பூத்திற்கு வழக்கமான நிகழ்வுகள் ஆயின. “அந்தக் குதூகலமான காலங்களின் விவரங்களை அளிக்கவேண்டுமென்றால், ஒரு புத்தகமே தேவைப்படும்” என்று ஒருமுறை அவர் எழுதினார்.
1941-ல், அப்போதைய உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்டாக இருந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்ட், சகோதரர் பூத்தை, நியூ யார்க்கிலுள்ள இத்திகாவுக்கு அருகே, ராஜ்ய பண்ணையில் பணிபுரிய நியமித்தார். அங்கே 28 வருடங்களுக்கு உண்மையோடு சேவைசெய்தார். ஊழியத்தில் அவருக்கிருந்த அன்பு தணியவேயில்லை, மிஷனரிகளைப் பயிற்றுவிக்கும் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் ஆயிரக்கணக்கான மாணாக்கர்களுடன் கூட்டுறவு கொள்வதை பல வருடங்களாக அனுபவித்தார், அந்தப் பள்ளி 1961 வரை ராஜ்ய பண்ணையில் அமைந்திருந்தது. 1970-ல் நியூ யார்க்கிலுள்ள வால்கில்லிலிருந்த உவாட்ச்டவர் பண்ணைகளில் சேவிக்கும்படி சகோதரர் பூத் கேட்டுக்கொள்ளப்பட்டார், எனவே, சுமார் 45 வருடங்களுக்கு முன், தான் பயனியர் சேவை ஆரம்பித்த பகுதிக்கே அவர் வந்து சேர்ந்தார்.
நியூ யார்க், புருக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஓர் அங்கத்தினராக சகோதரர் பூத் 1974-ல் நியமிக்கப்பட்டார். 93-ம் வயதில் மரணத்தை தழுவும் வரை, அதே ஸ்தானத்தில் உண்மையோடு சேவித்தார். ஜான் பூத், அவருடைய ஆழ்ந்த தாழ்மைக்காகவும் தயவான கிறிஸ்தவ தன்மைக்காகவும் நேசிக்கப்படத்தக்கவராக இருந்தார். அவருடைய ஆரோக்கியமும் பலமும் குன்றும் வரை, வீட்டுக்கு வீடும், நகரங்களின் தெருக்களிலும் உண்மையோடு பிரசங்கித்தார்.
அவரது மறைவால், உடன் சேவைசெய்தோர் துக்கித்தாலும், அத்தகைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதனாலும், “அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்” என்ற பைபிளின் வாக்குறுதியினாலும் ஆறுதல் அடைகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:13; 1 கொரிந்தியர் 15:51-54) பரலோகம் உண்மையிலேயே ஒரு புதிய சூழலாக இருக்கும், ஆனால் ஜான் பூத் யெகோவாவை என்றென்றுமாகச் சேவிக்கமுடிகிற ஒன்றாக அது இருக்கும்!
[பக்கம் 32-ன் படம்]
ஜான் பூத் 1903-1996
[பக்கம் 32-ன் படம்]
HERALD-AMERICAN, ANDOVER 1234
76 Jehovites Jailed in Joliet
[படத்திற்கான நன்றி]
Chicago Herald-American