ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
பெரும் மாற்றங்கள் செய்யவல்ல கடவுளுடைய வார்த்தை
“நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்” என்று அவரே ஒப்புக்கொண்டார். (1 தீமோத்தேயு 1:13) ஆனால் அவர் மாறினார்! அப்போஸ்தலனாகிய பவுல் செய்த மாற்றங்கள் அவ்வளவு பெரியதாக இருந்ததால் அவர் பின்னால் இவ்வாறு அறிவிக்க முடிந்தது: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.”—1 கொரிந்தியர் 11:1.
இன்று உலகமுழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான உண்மை மனதுள்ள வணக்கத்தார் அதேபோன்ற மாற்றங்களைச் செய்துவருகின்றனர். அவ்வாறு செய்வதற்கு எது அவர்களுக்கு உதவுகிறது? அவர்கள் கடவுளுடைய வார்த்தையின் அறிவை மனதில் ஏற்றுக்கொண்டு அதை தங்கள் வாழ்க்கையில் பொருத்துகின்றனர். பெரும் மாற்றங்கள் செய்வதற்கு கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை பின்வரும் அனுபவம் சிறப்பித்துக் காண்பிக்கிறது.
ஸ்லோவீனியாவில், வயதான தம்பதியினர் ஒரு கிராமத்துக்கு வெளியே தனிமையில் வசித்து வந்தனர். கணவர் ஜோஸ் சுமார் 60 வயதுள்ளவராய் இருந்தார், அவருக்கு மிகவும் மோசமான குடிவெறி பழக்க பிரச்சினை இருந்தது. இருந்தபோதிலும், அவர் நோயுற்றிருந்த தன் மனைவி லியூட்மிலாவை கவனித்துக்கொண்டார். ஒருநாள் ராஜ்ய அறிவிப்பாளர்கள் இருவர் ஜோஸை அணுகினர். அவர் சாட்சிகளை தன் வீட்டுக்குள் அழைத்தார், அவர்கள் அங்கே அவருடைய மனைவியை சந்தித்தனர். ராஜ்ய செய்தியைக் கேட்டவுடன் லியூட்மிலாவின் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ஜோஸும்கூட தான் கேட்டவற்றைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார், அநேக கேள்விகளைக் கேட்டார். சில பைபிள் பிரசுரங்களை தம்பதியிடம் அளித்த பிறகு, சாட்சிகள் அவ்விடத்தை விட்டுச்சென்றனர்.
ஒரு மாதத்திற்குப் பிறகுதான் சாட்சிகளால் திரும்பிவர முடிந்தது, அவர்கள் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் மேசையின்மீது இருப்பதை கவனித்தனர். அதை அவர் எங்கிருந்து பெற்றுக்கொண்டார் என்று கேட்டபோது, ஜோஸ் சொன்னார்: “நீங்கள் என்னிடம் விட்டுச்சென்ற பத்திரிகைகள் ஒன்றின் கடைசி பக்கத்திலிருந்த விளம்பரத்தை நான் பார்த்தேன். ஆகையால் நான் ஜாக்ரெப்பில் இருந்த உங்கள் அலுவலகத்துக்கு எழுதி அந்தப் புத்தகத்தை அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன்.” அவர் காண்பித்த அக்கறையின் காரணமாக, ராஜ்ய மன்றத்தில் நடக்கவிருந்த கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பில் ஆஜராக அவர் அழைக்கப்பட்டார். சாட்சிகள் மகிழ்ச்சியடையும் வகையில் அவர் அக்கூட்டத்துக்கு வந்தார்!
விரைவில் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, நல்ல முன்னேற்றம் செய்தனர். உதாரணமாக, “ஒரு சொரூபத்தையாகிலும் . . . நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்” என்று பைபிளிலிருந்து ஜோஸுக்கு எடுத்துக் காண்பிக்கப்பட்டபோது, அவர் உடனடியாக படங்கள் உட்பட வீட்டிலிருந்த மதசம்பந்தமான சொரூபங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி அவற்றை வீசி எறிந்தார்.—யாத்திராகமம் 20:4, 5.
ஆவிக்குரிய சத்தியத்துக்காக ஜோஸுக்கிருந்த தாகம் திருப்தியடைந்தது. ஆனால், விசனகரமாக, அவருக்கு மற்றொரு தாகம் தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. சுமார் 18 வருடங்களாக அவர் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து லிட்டர் ஒயின் அருந்தி வந்தார். அவருடைய குடிப்பழக்கத்தின் காரணமாக அவர் தன் தனிப்பட்ட தோற்றத்துக்கு அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் மதுபான துர்ப்பிரயோகத்தின் பேரில் கடவுளுடைய எண்ணத்தை கற்றறிந்த பின்பு, அவர் மாறுவதற்கு தீர்மானமாயிருந்தார்.
அவர் தன் குடிப்பழக்க பிரச்சினையை படிப்படியாக மேற்கொள்வதற்கு முயற்சி செய்தார், அவர் ஒவ்வொரு நாளும் எவ்வளவு குடித்தார் என்பதை குறித்து வைத்திருந்தார். அதற்குப் பிறகு விரைவில் அவர் ஒயினுக்கு அடிமைப்பட்டவராய் இருக்கவில்லை. மெய்க் கிறிஸ்தவர்கள் நல்ல தனிப்பட்ட சுத்தத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும்கூட அவர் பைபிள் படிப்புகளில் கற்றுக்கொண்டார். ஆகையால் அவர் சாட்சிகளிடம் பணம் கொடுத்து இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்தவ கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் நன்கு தோற்றமளிப்பதற்கு எனக்குத் தேவையான ஆடைகளை வாங்கி வாருங்கள்!” என்று கூறினார். உள் உடுப்புகள், சாக்ஸ், ஷூக்கள், ஷர்ட்டுகள், சூட்டுகள், டைகள், பிரீஃப் கேஸ் ஆகியவற்றை சாட்சிகள் வாங்கிக்கொண்டு வந்து தந்தனர்.
ஒரு வருடம் பைபிளை படித்து முடித்த பிறகு, ஜோஸும் லியூட்மிலாவும் வீட்டுக்கு வீடு பிரசங்க ஊழியத்தில் சாட்சிகளோடு செல்வதற்கு தகுதி பெற்றனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு ஒன்றில் அவர்கள் கடவுளுக்கு தங்கள் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்திக் காண்பித்தனர். வயோதிபம், உடல்நலமின்மை ஆகியவற்றின் மத்தியிலும் ஜோஸ் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் தவறாமல் பங்குகொண்டார், 1995 மே மாதம் மரிக்கும் வரையாக சபையில் உதவி ஊழியராக உண்மையுடன் சேவித்தார். மனத்தாழ்மையுள்ள இந்த மனிதரின் வாழ்க்கையிலும் அவருடைய மனைவியின் வாழ்க்கையிலும் நல்ல பலன்கள் ஏற்பட்டதானது, பெரும் மாற்றங்கள் செய்வதற்கு கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமைக்கு சாட்சி பகருகிறது!