விசுவாசம் அவரை செயல்படும்படி செய்தது
இஸ்ரவேல் தேசத்தை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து செல்லுமாறு மோசேயிடம் யெகோவா உத்தரவிட்டபோது, தன்னை விட்டுவிடும்படி மோசே இவ்வாறு முதலில் கூறினார்: “ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்.” (யாத்திராகமம் 4:10) ஆம், அப்படிப்பட்ட ஒரு மிகப் பொறுப்புள்ள நியமிப்பிற்கு தான் தகுதிபெற்றிருப்பதாக மோசே உணரவில்லை.
அதேவிதமாக இன்று, யெகோவாவின் ஊழியக்காரர்களில் அநேகர் தங்களுக்கு நியமிக்கப்படும் கடமைகளை நிறைவேற்ற தகுதியற்றவர்களாக சிலசமயம் உணருகின்றனர். உதாரணத்திற்கு, தியடார் என்ற பெயரைக்கொண்ட ஒரு கிறிஸ்தவ கண்காணி இவ்வாறு விவரிக்கிறார்: “செய்யவேண்டுமென்று யெகோவா எனக்கு கட்டளையிட்டிருக்கும் எல்லா காரியங்களிலும் வெளி ஊழியம்தான் மிகவும் கடினமானது. நான் இளைஞனாயிருந்தபோது, எவரும் கேட்கவோ அல்லது என்னைப் பார்க்கவோ மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு, வேகமாக கதவின் அருகே சென்று, மணியை அடிப்பதுபோல் நடித்து, சப்தமில்லாமல் நடந்து சென்றுவிடுவேன். எனக்கு வயதான பிறகு, அதைச் செய்வதை நிறுத்திவிட்டேன், ஆனால் வீட்டுக்கு வீடு செல்வதன் எண்ணம் என்னை சரீரப்பிரகாரமாக சுகமில்லாமல் செய்தது. இந்த நாள் வரையாக, ஊழியத்துக்கு வெளியில் செல்வதற்கு முன்பாக குமட்டல் உண்டாகும், ஆனாலும் நான் செல்வேன்.”
அப்படிப்பட்ட பயத்தை சமாளிப்பதற்கு மோசேக்கும் தியடார் போன்ற நவீன-நாளைய சாட்சிகளுக்கும் உதவியது எது? பைபிள் பதிலளிக்கிறது: “விசுவாசத்தினாலே அவன் [மோசே] அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து . . . எகிப்தைவிட்டுப் போனான்.”—எபிரெயர் 11:27.
உண்மையில், யெகோவாவின்மீது விசுவாசம் வைப்பதன் மூலமாக, தான் தகுதியற்றவன் என்ற உணர்வுகளை மேற்கொண்டு, ஒரு நியாயாதிபதியாகவும், தீர்க்கதரிசியாகவும், தேசத்தலைவராகவும், நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும், உத்தரவிடுபவராகவும், சரித்திராசிரியராகவும், பைபிள் எழுத்தாளராகவும் தன்னுடைய நியமிப்புகளை நிறைவேற்ற மோசேயினால் முடிந்தது.
அதேவிதமாக, மோசேயைப் போன்ற விசுவாசத்தை நாம் கொண்டிருக்கும்போது, ‘அதரிசனமானவரை பார்ப்பதுபோல்’ நாம் நடப்போம். அப்படிப்பட்ட விசுவாசம் தைரியத்தை ஏவுகிறது, நாம் தகுதியற்றவர்களாக ஒருவேளை உணரும் சமயத்திலும்கூட நம்முடைய கிறிஸ்தவ உத்தரவாதங்களைக் கையாள நமக்கு உதவுகிறது.