ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘உலகில் ஒளிகளாகப் பிரகாசித்தல்’
யெகோவாவின் சாட்சிகள் தனித்தன்மையுள்ளவர்களாக மேலோங்கி நிற்கின்றனர். இரத்தமேற்றுதல்களை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக அவர்கள் அடிக்கடி மோசமான விளம்பரத்தைப் பெறுகின்றனர். எனினும், இந்த நிலை, பைபிளை உறுதியான ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இரத்தத்தை தவறாக பயன்படுத்துவதை கடவுள் கண்டனம் செய்வதாக அது காண்பிக்கிறது, ஏனென்றால் அவருடைய பார்வையில் இரத்தம் விலைமதிப்புள்ளதாய் இருக்கிறது. (ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:14) இந்தப் பொருளின்பேரில் வேதவாக்கியங்களை ஆராய்ந்ததன் விளைவாக, ‘இரத்தத்திற்கு விலகியிருக்கவேண்டும்’ என்ற பைபிளின் உத்தரவு இரத்தத்தை ஏற்றிக்கொள்வதன் நவீன பழக்கத்தையும் தெளிவாகவே உட்படுத்துகிறதென்பதாக யெகோவாவின் சாட்சிகள் முடிவுசெய்கின்றனர்.—அப்போஸ்தலர் 15:19, 20, 28, 29.
சமீப ஆண்டுகளில் மருத்துவ சமுதாயத்தின் அங்கத்தினர்களும், சில நாடுகளிலுள்ள நீதிமன்றங்களும்கூட, இந்த விவாதத்தில் யெகோவாவின் சாட்சிகளை ஆதரிப்பதற்காக முன் வந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு, டென்மார்க்கில் இரத்தத்தைக் குறித்த பைபிளின் கருத்தை அறிந்திருந்த ஒரு இளம் தாய் ஒரு மோட்டார் வண்டியின் விபத்தின் விளைவாக மரித்துவிட்டாள். இரத்தத்தை ஏற்றிக்கொள்ள அவள் மறுத்ததன் காரணமாக, யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக விரோதமுள்ள ஒருமாதகால விளம்பரத்தை செய்தித்துறை செய்யும்படி அவளுடைய மருத்துவர்கள் தூண்டிவிட்டனர்.
அந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள் விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஏப்ரல் 1994-ல் டென்மார்க்கில் நோயாளிகளின் புகார்களுக்கான குழுவினால் ஒரு தீர்மானம் அறிவிக்கப்பட்டது. அந்த நோயாளி இரத்தத்தை மறுத்ததன் காரணமாக அல்ல, ஆனால் ஒழுங்கற்ற மருத்துவத்தின் காரணமாகவேதான் மரித்துவிட்டாள் என்பதாக அது குறிப்பிட்டது. மருத்துவச் சார்பான சட்ட ஆய்வுத்துறையின் நிர்வாக சபை மற்றும் உடல்நலத்துறை அதிகாரக்குழுக்களுடைய புலன் விசாரிப்பின் அடிப்படையில் அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. டென்மார்க்கில் உள்ள எல்லா உடல்நல மேற்பார்வை நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், யெகோவாவின் சாட்சிகள் இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுப்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு, கிடைக்கக்கூடிய சிறந்த மாற்றுசிகிச்சையை அவர்களுக்கு அளிக்க மருத்துவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று தேசிய உடல்நலக் குழுமம் குறிப்பிட்டது.
மற்றொரு வழக்கு, வெள்ளணுப்புற்றுநோயினால் மரித்துவிட்டிருந்த டான் என்ற ஒரு 15-வயது சாட்சியை உட்படுத்தியது. இந்த வழக்கில் இரத்தமேற்றிக்கொள்வதை மறுத்த டான்னின் தைரியமான தீர்மானத்தை மருத்துவர்கள் மதித்தனர். இது விஸ்தாரமான பத்திரிகை விளம்பரத்தில் விளைவடைந்தது. இதில் செய்தித்துறை டான்னினுடைய மரணத்திற்கு மருத்துவர்களை குற்றஞ்சாட்டியது. எனினும், அநேகர், இந்த எதிர்மறையான பிரசாரத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
உதாரணத்திற்கு, டான் சென்றுகொண்டிருந்த பள்ளியினுடைய தலைமை ஆசிரியர் சவ-அடக்கப் பேச்சிற்காக ராஜ்ய மன்றத்தில் ஆஜராயிருந்தார். டான்னினுடைய மரணத்தைக் குறித்து பரப்பப்பட்ட நியாயமற்ற செய்தியைக் குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்தார். யெகோவாவின் சாட்சிகளைக் குறித்த அநேக கேள்விகளுடன் உடன்வேலைசெய்பவரான ஒரு சாட்சியை அணுகிய பிற்பாடு, யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அமைப்பு (ஆங்கிலம்) என்ற வீடியோவின் ஒரு பிரதியை ஏற்றுக்கொண்டார். அந்த வீடியோ அவரை அவ்வளவாய் கவர்ந்ததன் காரணமாக பள்ளியிலுள்ள எல்லா ஆசிரியர்களும் அதை பார்க்கும்படி ஏற்பாடுசெய்தார். பின்பு, எல்லா மாணவர்களுக்கும், ஒவ்வொறு வகுப்பாக, அந்த வீடியோ காண்பிக்கப்பட்டது.
டென்மார்க்கின் உடல்நலத்துறை அமைச்சரும்கூட டான்னின் மருத்துவர்கள் பெற்றுக்கொண்ட மோசமான விளம்பரத்தை ஒப்புக்கொள்ளவில்லை. டான்னினுடைய முதிர்ச்சியுள்ள தீர்மானம் மற்றும் ஸ்திரமான விசுவாசத்தை மதித்ததன்மூலமாக மருத்துவர்கள் சரியானதைச் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிதலைக் காண்பிக்கும் இலட்சக்கணக்கான ராஜ்ய அறிவிப்பாளர் இருக்கிறார்கள். அவர்களுடைய கீழ்ப்படிதலின் காரணமாக, ‘உலகில் ஒளிகளாகப் பிரகாசிப்பதில்,’ அவர்கள் மேலோங்கி நிற்கின்றனர்.—பிலிப்பியர் 2:12, 15, NW.