ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“சுவிசேஷகனுடைய வேலையைச் செய்”
ஒரு சுவிசேஷகராக இருப்பதன் அர்த்தம் என்ன? இந்தச் சொல் யூயக்கிலிஸ்டெஸ் என்ற கிரேக்கச் சொல்லின் மொழிபெயர்ப்பாகும்; அது, “நற்செய்தி” என்று பொருள்படும் யூயக்கிலியான் என்ற கிரேக்கச் சொல்லோடு மிக நெருங்க சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே, சுவிசேஷகரான ஒருவர், நற்செய்தியைப் பிரசங்கிப்பவராக, அல்லது கொண்டுசெல்பவராக இருக்கிறார்.
உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் சுவிசேஷகர்கள், ஏனெனில் அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை யாவரறிய அறிவிக்கின்றனர். “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்,” என்று மிகப் பொருத்தமாகவே அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறினார். தீமோத்தேயு இந்த வேலையைக் கருத்துடன் ஏற்று செய்ய வேண்டியதாயிருந்தது. ‘எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிருந்து,’ ‘ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றும்படி’ பவுல் அவரை ஊக்குவித்தார்.—2 தீமோத்தேயு 4:5, NW.
சுவிசேஷகர்களாக நாமும் நம்முடைய ஊழியத்தைக் கருத்துடன் ஏற்று ‘மனத்தெளிவுள்ளோராயிருக்கிறோம்,’ அல்லது கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பின்போதும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள விழிப்புள்ளோராக நிலைத்திருக்கிறோம். இவ்வாறு, சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலின் மூலம் யெகோவாவின் சாட்சிகளால் தொடர்புகொள்ளப்பட்ட பலர், யெகோவாவையும் அவருடைய வாக்குகளையும் கற்றறிந்திருக்கின்றனர். பர்பேடாவில் உள்ள சீமோர் என்ற நபருக்கு இதுவே நடந்தது.
சீமோர், பொதுப்பள்ளி ஒன்றில் ஓர் ஆசிரியராக இருந்தார். அதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியரும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருமான சார்ல்ஸ், விழிப்புள்ள சுவிசேஷகராக இருந்தார். இவர் ஒரு முழுநேர ஊழியராக, அல்லது பயனியராக இருந்தார், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்குப் பயன்படுத்தினார். சார்ல்ஸின் சந்தர்ப்ப சாட்சியின் மூலமே சீமோர் ராஜ்ய நற்செய்தியை முதல் தடவையாகக் கேட்டார்.
சீக்கிரத்தில் சீமோரும் தன்னால் கூடியளவாக அதிகம்பேரிடம் பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி தீர்மானித்தார். ஆகையால், தான் வேலைசெய்யும் இடத்திலிருந்த ஆட்களிடம், முக்கியமாய்த் தன் மாணாக்கர்களிடம் சந்தர்ப்ப உரையாடல்களைத் தொடங்கினார். சில நாடுகளில், பொதுப்பள்ளிக்கூடங்களில் மதம் கற்பிக்கப்படக் கூடாதென்று இருக்கிறபோதிலும், இவர் மத மற்றும் ஒழுக்கநெறிகளைக் கற்பிக்கும்படி நியமிக்கப்பட்டார். ஆனால் இந்தக் காரியங்களின்பேரில் சீமோரின் முந்திய கருத்துக்கள், அவர் புதிதாகப் பெற்ற பைபிள் அறிவால் இப்போது மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இடை ஓய்வு சமயங்களில் அவர், புதிய உலகத்தையும் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பையும் குறித்து கடவுள் கொடுத்திருக்கும் வாக்கைப்பற்றி தன் மாணாக்கரிடம் பேசினார்.
பிள்ளைகள் எவ்வாறு செயல்பட்டனர்? யெகோவாவின் ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தியில் பலர் உண்மையான அக்கறை காட்டினர். காலப்போக்கில், சீமோர், தன் மாணாக்கரில் 13 பேரோடு பைபிள் படிப்புகள் நடத்தத் தொடங்கினார். அவர்கள் காண்பித்த அக்கறை அவ்வளவு மிகுந்ததாக இருந்ததனால், வாரத்தில் இரு முறை பைபிளைப் படிக்க அவர்கள் ஏற்பாடு செய்து கொண்டனர். கடைசியாக அவர்களில் பெரும்பான்மையர், அவ்விடத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடந்த கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராகத் தொடங்கினர். இது வரையாக அவர்களில் ஒன்பது பேர் யெகோவாவின், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாகியிருக்கின்றனர். சீமோரைக் குறித்ததில், அவர் இப்போது, நிலையாகத் தொடரும் பயனியராகவும், பர்பேடாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் ஒன்றில் ஒரு மூப்பராகவும் தன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றி வருகிறார்.
உலகமெங்கும் யெகோவாவின் சாட்சிகள், சந்தர்ப்ப சாட்சியில் பங்குகொள்வதன்மூலம், எவ்வாறு ஒரு பாகமாக ‘சுவிசேஷகருடைய வேலையைச் செய்கிறார்கள்’ என்பதற்கு இது ஒரு உதாரணமே. கொலோசெயர் 4:5, 6-ல் காணப்படும் பைபிளின் இந்த அறிவுரையை அவர்கள் பின்பற்றுகிறார்கள், அது சொல்வதாவது: “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”