‘இரும்பை இரும்பு கருக்கிடுவது போல’
பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில், “பண்டைய எகிப்திய மரபினரான கிறிஸ்தவர்” என்று விவரிக்கப்பட்டிருந்த ஆன்த்தனி என்ற பெயர்கொண்ட ஆர்வமிக்க இளம் மனிதர் ஒருவர் உலகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதற்கென்று 20 வருடங்கள் தனிமையாக பாலைவனத்தில் செலவழித்தார். ஏன்? கடவுளை சேவிப்பதற்கு அவருக்கு இதுதான் சிறந்த வழி என்று அவர் நினைத்தார். அவர் கிறிஸ்தவமண்டலத்தின் முதலாவது செல்வாக்குமிக்க துறவியாக அல்லது ஒதுங்கி வாழும் ஒரு நபராக இருந்தார்.
இன்று, கிறிஸ்தவமண்டலம் வெகு சில துறவிகளையே கொண்டிருக்கிறது. ஆனால் அதிகம் அதிகமான நபர்கள் மற்றொரு விதத்தில் தனிமையை நாடிச் செல்கின்றனர். அவர்கள் மற்றவர்களிடம் மதத்தைப் பற்றி பேச மறுக்கின்றனர், ஏனென்றால் அப்படிப்பட்ட பேச்சு, கருத்து வேறுபாடுகளுக்கும் சண்டைகளுக்கும் வழிநடத்தும் என்று நினைக்கின்றனர். தங்கள் அயலாருக்கு எந்தத் தீங்கும் செய்யக்கூடாது என்பது அவர்களுடைய வணக்கத்தில் முக்கியமாய் அடங்கியுள்ளது.
தங்கள் அயலாருக்கு எந்தத் தீங்கும் செய்யக்கூடாது என்பது மெய் மதத்தின் ஒரு பாகம் என்பது உண்மைதான், ஆனால் அதைவிட அதிகம் தேவைப்படுகிறது. ஒரு பழங்கால நீதிமொழி சொல்கிறது: “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” (நீதிமொழிகள் 27:17) உண்மை என்னவெனில், கிறிஸ்தவர்கள் தங்களை உலகத்திலிருந்தோ மற்ற கிறிஸ்தவர்களிடமிருந்தோ முழுவதுமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுகூடி வரும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (யோவான் 17:14, 15) அது சொல்கிறது: ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலை நாம் விட்டுவிடாமல் இருப்போமாக.’ (எபிரெயர் 10:24, 25) யெகோவாவின் சாட்சிகள் அந்த புத்திமதியைப் பின்பற்றுகின்றனர். ஒரு வாரத்தில் பல தடவைகள் அவர்கள் ‘ஒருவர் முகத்தை ஒருவர் கருக்கிட’ ஒன்றுகூடி வந்து, உடன் விசுவாசிகளின் விசுவாசத்தைக் கட்டியெழுப்புகின்றனர். பைபிளை உண்மை மனதோடு வெளிப்படையாக கலந்தாலோசிப்பது சண்டைகளுக்கு வழிநடத்துவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். மாறாக, அது இணக்கத்திற்கும் சமாதானத்துக்கும் வழிநடத்துகிறது. அது மெய் வணக்கத்தின் முக்கியமான பாகம்.