அப்பாவி பலியாட்களுக்கு விடுதலை
மனிதனால் இழைக்கப்பட்டவற்றிலேயே அதிக வெறுப்பூட்டும் குற்றச்செயல் இது—சடங்குமுறையாக பிள்ளைகளை பலியிடுதல். அப்படிப்பட்ட படுமோசமான பழக்கம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை சிலர் நம்புவதில்லை. ஆனால் பினீசிய வணக்கத்தின் அடையாளச் சின்னமாக இருக்கும் இதை எண்ணற்ற புதைபொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் உறுதிசெய்துள்ளது.
உயர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் டானிட், பால்-ஹேம்மன் போன்ற கடவுட்களுக்கு நெருப்பில் பலியாக செலுத்தப்பட்டனர். கார்த்தேஜ்-ல் இளம் பலியாட்கள் க்ரோநஸ் என்ற தெய்வத்தின் வெண்கலச் சிலைக்கு பலியாக எரிக்கப்பட்டனர். பிள்ளையின் உறவினர் அழுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று பொ.ச.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திர ஆசிரியர் டையடோரஸ் சிக்கலஸ் என்பவர் சொல்கிறார். கடும் துயரத்தால் சிந்தப்படும் கண்ணீர், பலியின் மதிப்பைக் குறைத்துவிடும் என்று ஒருவேளை அப்போது நம்பப்பட்டிருக்கலாம்.
இதைப் போன்ற ஒரு சடங்கு எருசலேமுக்கு அருகே இருந்த பண்டைய தோப்பேத்தில் ஒருசில காலத்துக்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிள்ளையை மோளேகின் வெப்பமான சூளை-வயிற்றுக்குள் தூக்கி எறிகையில் அதன் அழுகை கேட்கப்படாதபடி செய்வதற்கு அங்கிருந்த வணக்கத்தார் நடனமாடிக்கொண்டு முரசு கொட்டுவர்.—எரேமியா 7:31.
பிறருடைய வேதனைக்கு தங்கள் காதுகளை இரக்கமற்ற விதத்தில் மூடிக்கொள்பவர்களிடமாக யெகோவா பெரும் கோபம் கொள்கிறார். (நீதிமொழிகள் 21:13-ஐ ஒப்பிடுக.) பிள்ளைகள் மீது இரக்கம் காண்பிக்கும் கடவுளாக யெகோவா இருப்பதனால், அவர் நிச்சயமாக அப்படிப்பட்ட அப்பாவி பலியாட்களை ‘நீதிமான்கள் மற்றும் அநீதிமான்களின் உயிர்த்தெழுதலில்’ சேர்த்துக்கொள்வார்.—அப்போஸ்தலர் 24:15; யாத்திராகமம் 22:22-24.