கடவுளின் பெயர் தாங்கிய நாணயங்கள்
இங்கே காட்டப்பட்டுள்ள வெள்ளி நாணயங்களை உற்றுப்பாருங்கள். அவை ஜெர்மானிய பேரரசன் வில்ஹெல்ம் V, 1627-லிருந்து 1637-வரை அரசாட்சி செய்த சமயத்தில் அவரால் அச்சிடப்பட்டவை. அந்தச் சமயத்தில் மத்திய ஐரோப்பா, கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே நடந்த போராட்டமான முப்பதுவருடப் போரில் ஈடுபட்டிருந்தது. வில்ஹெல்ம் V புராட்டஸ்டன்ட் இயக்கத்தைத் தழுவினார். சண்டையின் பெரும் செலவை சமாளிப்பதற்காகத் தன்னுடைய வெள்ளியையெல்லாம் எடுத்து நாணயங்களாக அச்சிட்டார்.
அக்கறையைத்தூண்டும் விதத்தில், அநேக நாணயங்களில் உள்ள உருவங்கள், எபிரெய டெட்ரக்ராமட்டனின் வடிவில் யெகோவா என்னும் கடவுளுடைய பெயர் சூரியன் சூழ இருப்பதைப்போல் காட்டுகின்றன. அதில் பனை வகையைச் சார்ந்த ஒரு மரமும்கூட உள்ளது, அது பலத்தைச் சித்தரித்தது. அதனால் உணர்த்தப்பட்டது என்னவென்றால், மரம் காற்றால் வளைக்கப்பட்ட போதிலும், கடவுளுடைய பாதுகாப்பின்கீழ் முறிக்கப்படாமல் நிலைத்திருக்கும் என்பதே. நாணயத்தில் பொறிக்கப்பட்ட லத்தீன் வாசகம் யெகோவா என்னும் பெயரையும் அவரின் பாதுகாக்கும் செயலில் நம்பிக்கையையும் வெளிக்காட்டுகிறது.
கடவுளுடைய பாதுகாப்பிற்காக வேண்டுதல் செய்வதற்கு மாறாக, அவ்விதம் கடவுளின் பெயரை உபயோகித்தது உண்மையிலேயே வீணாகும். ஏனென்றால் மனிதவர்க்கத்தின் வன்முறையான சண்டைகளில் யெகோவா எந்த சாராரையும் ஆதரிப்பதில்லை. நிச்சயமாகவே, இந்த முப்பதுவருடப் போர் கடவுளின் அங்கீகாரத்தை அடைந்திருக்க முடியாது. “மிதமான கணக்கெடுப்பின்படி, பாதிக்கும் குறையாத ஜெர்மன் மக்கள் போரின்போது மாண்டார்கள். எண்ணிலடங்கா மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் பண்ணைகள் பூண்டோடு அழிக்கப்பட்டன. சுமார் மூன்றில் இரண்டு பங்கு ஜெர்மனியின் தொழில், விவசாய, வாணிப வசதிகள் பாழாகிக்கிடந்தன,” என்று ஃபன்க் அண்ட் வெக்னால்ஸ் நியூ என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது.
இந்த நாணயங்களில் யெகோவா என்னும் பெயரின் உபயோகம், “உன் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவினுடைய,” NW] நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக,” என்று இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளையை நினைவிற்குக் கொண்டுவருகிறது. (யாத்திராகமம் 20:7) எனினும், ஜெர்மானிய மக்கள் நீண்ட காலமாகவே கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதை அறிந்துள்ளனர் என்பதற்கு இந்த நாணயங்கள் சாட்சி பகருகின்றன. அந்தப் பெயரைத் தாங்கியிருக்கிற கடவுளைப் பற்றி எவ்வளவு நன்றாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்?