புதிய உலக மொழிபெயர்ப்பு ஒரு அறிஞரின் மனதைக் கவருகிறது
பண்டைய கிரேக்க கலை இலக்கியங்களின் அறிஞர் டாக்டர் ரேகல் டென் காட்டவின் கூற்றின்படி, டச்சு பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் சில பதங்களைச் சரியாக மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்கள். உதாரணமாக, லூக்கா 2-ம் அதிகாரத்தில் இயேசுவின் அடுத்தடுத்த வளர் பருவத்தை விவரிப்பதற்கு மூன்று வெவ்வேறான கிரேக்க பதங்கள் (பிரிஃபஸ், பேயிடியன் மற்றும் பேயாஸ்) பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் அர்த்தத்தில் வித்தியாசத்தைக் கொண்டுள்ளன. என்றபோதிலும், அநேக பைபிள்களில், இந்தப் பதங்களில் இரண்டோ அல்லது எல்லா மூன்று பதங்களும் தெளிவற்று “பிள்ளை,” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எதுதான் சரியான மொழிபெயர்ப்பு?
டாக்டர் டென் காட்ட விளக்கம் தருகிறார், வசனம் 12-ல் உள்ள பிரிஃபஸ் ‘பச்சிளம் குழந்தை, அல்லது சிறு குழந்தையை’ அர்த்தப்படுத்துகிறது. வசனம் 27-ல் உபயோகிக்கப்பட்ட பேயிடியன் என்ற வார்த்தை “சிறு பையன் அல்லது சிறுபிள்ளை,” என்றும் அர்த்தப்படுத்துகிறது, மேலும் வசனம் 43-ல் காணப்படும் பேயாஸ் “பையன்” என்று மொழிபெயர்க்கப்படவேண்டும். “எனக்கு தெரிந்தவரை ஒரு டச்சு மொழிபெயர்ப்புக்கூட இதைத் துல்லியமாக மொழிபெயர்க்கவில்லை. வேறுவிதத்தில் சொன்னால், மூலப்பதத்துடன் முற்றிலும் இசைவாக இல்லை,” என்று மார்ச் 1993 பேபல் யென் வெட்டன்ஷாப் (பைபிளும் அறிவியலும்) இதழில் டாக்டர் டென் காட்ட எழுதினார்.
பிறகு டாக்டர் டென் காட்டவுக்கு பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு காண்பிக்கப்பட்டது. டச்சு மொழி உட்பட 12 மொழிகளில் இது கிடைக்கிறது. அவருடைய பிரதிபலிப்பு? “நான் மிகவும் ஆச்சரியமடைகிறேன். பிரிஃபஸ், பேயிடியன், பேயாஸ் ஆகிய மூன்று கிரேக்கப் பதங்களும் கருத்தில் கொண்டு உபயோகிக்கப்பட்டுள்ள உண்மையிலேயே ஒரேவொரு டச்சு பைபிளாக இது உள்ளது,” என்றார். இந்த வசனங்களைப் புதிய உலக மொழிபெயர்ப்பு கிரேக்க மூலப்பதத்துடன் இசைவாக மொழிபெயர்த்துள்ளதா? “முற்றுலும் இசைவாக மொழிபெயர்த்துள்ளது” என்று பதிலளிக்கிறார் டாக்டர் டென் காட்ட.