மதம்—தடை விதிக்கப்பட்ட ஒரு விஷயமா?
“மதம், அரசியல் ஆகிய இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேசவே மாட்டேன்!” யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் பற்றி பிறரிடம் பேசுகையில், அடிக்கடி பிரதிபலிப்பு இவ்வாறுதான் இருக்கிறது. இந்த நோக்குநிலைக்குக் காரணமும் விளங்கத்தக்கதே.
மக்கள் அரசியலைப் பற்றி வாதாடும்போது கோபம் சீற, சண்டையானது பின்தொடரும். அநேகர் வெற்று வாக்குகளினால் ஏமாற்றப்படாமல், அரசியல்வாதிகள் பெரும்பாலும் அதிகாரத்தையும் புகழ்ச்சியையும் செல்வத்தையுமே நாடுவதை கண்டுகொள்கின்றனர். வருத்தகரமாக, அரசியல் பேதங்கள் சில சமயத்தில் வன்முறைக்கு வழிநடத்துகின்றன.
‘ஆனால் மதம் சம்பந்தப்பட்டதிலும் அதுவே வாஸ்தவமாக இருக்கிறதல்லவா? மத வெறி அநேக தற்கால போராட்டங்களை தூண்டிவிட்டு இருக்கிறதல்லவா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். வடக்கு அயர்லாந்தில் ரோமன் கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்டினரும் நீண்ட காலமாக ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்தனர். பால்கன்ஸில், ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் அங்கத்தினர்களும் ரோமன் கத்தோலிக்கரும் மற்றவர்களும் பிராந்தியத்திற்காகச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். விளைவு? அட்டூழியங்களும் நீடித்த காழ்ப்புணர்ச்சியுமே.
மரண அச்சுறுத்தலை எதிர்ப்பட்டவர்களாக, அநேகர் தங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளையும் தங்களுடைய குடும்பத்தினரின் நம்பிக்கைகளையும் மூடிமறைக்கப் பார்க்கின்றனர். ஆப்பிரிக்காவில், கிறிஸ்தவமண்டலத்தினருக்கும் பிற அந்நிய மற்றும் குறிப்பிட்ட ஒரு இனத்தாராலான மதங்களைத் தழுவியவர்களுக்கும் இடையே இருந்துவரும் நூற்றாண்டுக்கணக்கான மதப் பகைமையானது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஓரளவு பாதுகாப்பைத் தரும் இரண்டு பெயர்களை வைக்கும்படி தூண்டியிருக்கிறது, இன்று வரையாக இந்த வழக்கமானது இருந்துவருகிறது. இவ்வாறு ஒரு சிறுவன், ஒரு பெயரைப் பயன்படுத்தி இன்னொரு பெயரைப் பயன்படுத்தாமல் தன்னை ஒரு சர்ச் அங்கத்தினனாகவோ பிற மதத்தைத் தழுவியவனாகவோ வெளிப்படையாகக் காட்ட முடியும். ஒரு நபரின் மத நம்பிக்கைகள் அவருடைய உயிரை இழக்கச் செய்யக்கூடுமென்றால், அவர் மதத்தைப் பற்றி பகிரங்கமாகப் பேசத் தயங்குகிறார் என்பதில் ஆச்சரியமேதுமில்லை.
வேறு சிலருக்கு, தங்கள் உயிர் ஆபத்தில் இல்லாவிட்டாலுங்கூட மதமானது தடை விதிக்கப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. இன்னொரு மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தங்கள் நம்பிக்கைகளைப் பேசுவது அர்த்தமற்ற விவாதத்தில் முடிவடையும் என்று அவர்கள் பயப்படுகின்றனர். இன்னும் ஒருசிலர் எல்லா மதமும் நல்லவைதான் என்று நம்புகின்றனர். ஒரு நபர் தான் நம்புவதோடு திருப்தியுள்ளவராக இருக்கிற வரை, வித்தியாசங்களைக் குறித்துப் பேசுவது வீணான காரியந்தான் என்று அவர்கள் சொல்கின்றனர்.
மதவியல்பில் கருத்தூன்றியிருக்கும் மாணாக்கருங்கூட தங்களுக்குள்ளாகவே ஒத்துப்போவது கிடையாது. “மதங்களைப் பற்றிய ஆய்வும் வகைப்பாடும்” என்ற அதன் கட்டுரையில் தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா ஒப்புக்கொள்கிறது: “அரிதாகவே . . . [மத] இயல்பைப் பற்றி நிபுணர்களிடையே ஒருமனப்பாடு இருந்திருக்கிறது . . . இவ்வாறு இந்த விஷயம் அதன் சரித்திரத்தினூடே சர்ச்சைக்குரிய கூறுகளை உடையதாயிருந்திருக்கிறது.”
“படைப்பாளராகவும் இப்பிரபஞ்சத்தின் அதிகாரியாகவும் அங்கீகரிக்கப்பட்ட அமானுஷ்ய வல்லமையின்பேரில் உள்ள மனித நம்பிக்கைக்கும் பயபக்திக்குமான வெளிக்காட்டே” மதமாகும் என்று ஓர் அகராதி வரையறுக்கிறது. வாழ்க்கையில் மதம் முக்கிய பங்கு வகிப்பதை இது அவசியப்படுத்தும். நிச்சயமாகவே, மனித சரித்திரத்தை உருவமைப்பதில் மதம் சர்வலோக காரணியாக இருந்திருக்கிறது. “ஏதோ ஒரு வகையான மதத்தின் மூலம் வாழ்க்கைக்கு ஒழுங்கையும் அர்த்தத்தையும் அளிக்க, எந்தவொரு சமுதாயமும் நாடாமல் இருந்ததில்லை” என்று ஆங்கிலத்திலுள்ள மக்களும் பண்பாடுகளும் நிறைந்த ஆக்ஸ்ஃபோர்ட் விளக்கப்பட கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. வாழ்க்கைக்கு “ஒழுங்கு” மற்றும் “அர்த்தம்” போன்ற அடிப்படை காரியங்களை உட்படுத்துவதாய், மதம் உண்மையில் விவாதத்தை அல்லது தர்க்கத்தைவிட வேறு ஏதோவொன்றிற்குத் தகுதிபெற்றதாயிருக்கும். மாறாக, ஒரு கலந்தாலோசிப்பிற்கு அது தகுந்தது, அதாவது யாருடனாவது அதை அலசி ஆராய்வதாகும். ஆனால் யாரோடு, இதனால் வரும் பலன் என்ன?