உயிர் உங்களுக்கு எவ்வளவு மதிப்புள்ளது?
பருவ வயது பையன் ஒருவன் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் எட்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிர்துறந்தான். ஆபத்தான உயரத்திலிருந்து குதித்து தற்கொலைசெய்து கொள்வது “வலி அல்லது அசெளகரியம் அல்லது பயத்திலிருந்து விடுபட்டதாக இருக்கிறது; மாறாக அது நன்றாக உணரச்செய்கிறது,” என்பதாக விவரித்த ஒரு புத்தகத்தை அவன் வாசித்திருந்தான். ஜப்பானில் பிரசுரிக்கப்பட்ட இப்புத்தகத்தின் நூலாசிரியர் “தற்கொலையை வாழ்க்கையின் தெரிவுகளில் ஒன்றாக” மட்டுமே எடுத்துரைப்பதாக உரிமைபாராட்டினார்.
இன்று உயிருக்கு அவமதிப்பைக் காட்டுவது தற்கொலைசெய்து கொள்பவர்கள் மாத்திரமே அல்லர். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்கள்கூட உயிருக்கு மதிப்பைக் காண்பிக்காதவர்களாக இருக்கின்றனர். சிலர் குடித்துவிட்டும்கூட ஓட்டி சாவுக்கேதுவான விபத்து சம்பவிப்பதைத் துரிதப்படுத்தவும் செய்கிறார்கள்.
மற்றவர்கள் இன்பங்களுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தின் மூலமாக தங்கள் வாழ்க்கையை எவ்வளவு குறைவாக மதிக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறார்கள். புகைபிடிப்பது மரணத்தை உண்டுபண்ணுவதாகவும் அது நிதானமான தற்கொலை என்பதாக அழைக்கப்பட்டபோதிலும் புகைபிடிப்பவர்கள் புகைபிடிப்பதை நிறுத்திவிட மறுக்கிறார்கள். பாலியல் பைத்தியம் பிடித்த இந்த உலகில் கற்புடைமையைக் காத்துக்கொள்வதற்குப் பதிலாக, பெரும்பாலும் மரணத்துக்கு வழிநடத்தக்கூடிய கட்டுப்பாடில்லாத போக்கையே அநேகர் நாடித்தொடருகின்றனர்.
அதைப் பற்றி அறியாமலும்கூட, சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக குடிப்பது, போதுமான உடற்பயிற்சி செய்யாதிருப்பது மற்றும் இன்பங்களை நாடித்தொடருவது ஆகியவற்றின் மூலமாக பல வருடங்கள் உயிரோடிருப்பதை இழந்துபோகிறார்கள். ஜப்பானிய நூலாசிரியர் ஷின்யா நிஷிமாரு இவ்வாறு எச்சரித்தார்: “கட்டுப்பாடில்லாத உணவு பழக்கங்கள் உடலியல் செயற்பாடுகளைக் குலைத்துவிடுகிறது, செளகரியத்தையும் இன்பத்தையும் தவிர வேறு எதையும் நாடாமல் இருப்பது மக்களின் சகித்துக்கொள்ளும் சக்தியை அரித்துவிடுகிறது.” ஒரு சிலர் பண்டைய காலங்களில் பின்வருமாறு சொன்னவர்களுடைய கருத்தை உடையவர்களாக இருக்கின்றனர்: “புசிப்போம் குடிப்போம், நாளைக்கு சாவோம்.”—ஏசாயா 22:13; 1 கொரிந்தியர் 15:32.
ஆம், உயிரை அவமதிப்பது இன்று எங்கும் பரவலாக உள்ளது. ஆகவே, உங்களுக்கு உயிர் எவ்வளவு மதிப்புள்ளதாய் இருக்கிறது என்று கேட்பது பொருத்தமாகவே இருக்கிறது. எது எப்படியானாலும் உயிர் காத்துக்கொள்ளப்பட வேண்டுமா? மேலுமாக நம்முடைய தற்போதைய வாழ்க்கையைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள ஏதாவது ஒன்று இருக்கிறதா?