“அவ்விதமாகத்தான் மெய்க் கிறிஸ்தவர்கள் நடந்துகொள்ள வேண்டும்”
ஆஷ்விட்ஸில் உயிர்தப்பிய டெபோர் வோல் என்பவர் வேலை உங்களைக் கொல்லுகிறது—ஆஷ்விட்ஸில் இளமையான ஆண்மைப்பருவம் (Arbeit macht tot—Eine Jugend in Auschwitz) என்ற தன்னுடைய 1990 புத்தகத்தில் அவர் ஒட்டுக்கேட்ட இரண்டு சக கைதிகளுக்கிடையே நடந்த சம்பாஷணையைப் பற்றி ஆதாரத்தோடு எழுதுகிறார். ஒருவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர், தான் ஓர் “அவிசுவாசி” என்று உரிமைபாராட்டியவர். என்றபோதிலும், கருஞ்சிவப்பு முக்கோண அடையாளத்தை அணிந்திருந்த—முகாமில் பைபிள் மாணாக்கர்கள் என்றழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளை—கைதிகளை அவர் புகழ்ந்துப்பேசினார்.
“அவர்கள் போருக்குச் செல்லமாட்டார்கள்,” என்பதாக ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் தன்னுடைய நண்பனிடம் சொன்னார். “வேறு ஒருவரைக் கொல்வதைவிட அவர்கள் கொல்லப்படவே விரும்புவார்கள். என்னுடைய கருத்தில் மெய்க் கிறிஸ்தவர்கள் அவ்விதமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும். அவர்களோடு எனக்கு ஏற்பட்ட மிகவும் சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைப் பற்றி நான் உனக்குச் சொல்லவேண்டும். ஸ்டர்ட்ஹாஃப் முகாமில் நாங்கள் யூதர்களோடும் பைபிள் மாணாக்கர்களோடும் ஒரே கட்டடத்தில் தங்கி இருந்தோம். அந்த நாட்களில் பைபிள் மாணாக்கர்கள் கடுமையான குளிரில் திறந்த வெளியில் கடினமாக வேலைசெய்யவேண்டும். அவர்கள் எப்படி உயிர்பிழைத்திருந்தார்கள் என்பதை எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. யெகோவா தங்களுக்குப் பலத்தைக் கொடுத்ததாக அவர்கள் சொன்னார்கள். அவர்கள் பட்டினியாய் இருந்ததால் அவர்களுக்கு தங்களுடைய ரொட்டி மிகவும் தேவையாய் இருந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் தங்களிடம் இருந்த எல்லா ரொட்டிகளையும் சேர்த்து, பாதியை எடுத்துக்கொண்டு, அடுத்தப் பாதியை மற்ற முகாம்களிலிருந்து கடும்பசியோடு வந்த தங்களுடைய சகோதரர்களுக்கு, ஆவிக்குரிய சகோதரர்களுக்குக் கொடுத்தனர். இவர்கள் அவர்களை வரவேற்று முத்தஞ்செய்தார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக ஜெபித்தார்கள், அதற்குப் பின்பு அவர்களுடைய முகங்கள் மகிழ்ச்சியினால் பிரகாசித்தன. எவரும் இனிமேலும் பசியாயில்லை என்பதாக அவர்கள் சொன்னார்கள். ஆகவே, ‘இவர்கள்தான் மெய்க் கிறிஸ்தவர்கள்’ என்பதாக எனக்கு நானே யோசித்துக்கொண்டேன். அவர்கள் அவ்விதமாகத்தான் இருக்கவேண்டும் என்று நான் எப்போதும் கற்பனைச் செய்திருந்தேன். இங்கே ஆஷ்விட்ஸில் இப்படிப்பட்ட ஒரு வரவேற்பை வறுமையிலிருக்கும் தோழர்களுக்குக் கொடுப்பது எத்தனை நன்றாக இருக்கும்!”