பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மரண பின்விளைவுகளை விட்டுச்சென்றிருக்கின்றன
பிறந்தநாள் கொண்டாட்டம், இன்று அநேக மக்களால் தீங்கற்ற ஒரு பழக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பாரம்பரியத்தைக் குறித்து பைபிள் சாதகமானவிதத்தில் சித்தரிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியரில் எவரும் பிறந்தநாள் கொண்டாடியதாக வேத எழுத்துக்களில் எவ்வித குறிப்பும் இல்லை.
பைபிள் குறிப்பிடக்கூடிய இரண்டே பிறந்தநாட்கள், கடவுளுக்கு பகைவராய் இருந்த ஆட்சியாளர்களுடையன ஆகும். ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு கொலையை உட்படுத்தியது; இந்த விதத்தில், அரசனுக்கு வெறுப்பூட்டியிருந்த ஒருவரின் மரணத்தின்மீது, விருந்தாளிகள் அவல மகிழ்ச்சியடைய முடிந்தது. முதல் சம்பவத்தில், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன், தன்னுடைய சுயம்பாகிகளின் தலைவனைக் கொன்றுபோட்டான். (ஆதியாகமம் 40:2, 3, 20, 22) அந்த எகிப்திய ஆட்சியாளன் தன்னுடைய வேலையாளிடம் கோபமடைந்திருந்ததால், அந்த விருந்தின்போது அவ்வாறு செய்தான். இரண்டாம் சம்பவத்தில், கலிலேயாவின் ஒழுக்கங்கெட்ட ஆட்சியாளனாகிய ஏரோது, அந்த விருந்தில் நடனம் செய்து தன்னைச் சந்தோஷப்படுத்திய பெண்ணுக்குப் பரிசளிப்பதற்காக முழுக்காட்டுபவராகிய யோவானைச் சிரச்சேதம் செய்தான். எவ்வளவு வெறுப்பூட்டுகிற காட்சிகள்!—மத்தேயு 14:6-11.
என்றாலும் மிகவும் தனிச்சிறப்புவாய்ந்த இரண்டு பிறந்தநாட்களில் பைபிள் கவனம் செலுத்தியிருக்கிறதல்லவா? உண்மையில் அவ்வாறல்ல. இந்த நிகழ்வுகள் அசாதாரணமானவை அல்ல என்பதாக பண்டைய யூத சரித்திராசிரியரான ஜொஸீஃபஸ் வெளிப்படுத்துகிறார். பொழுதுபோக்கிற்காகச் செய்யப்பட்ட பிறந்தநாள் கொலைகளின் பழக்கத்தைப்பற்றிய மற்ற சம்பவங்களை அவர் பதிவு செய்கிறார்.
உதாரணமாக, பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவிற்குப்பின் சில சம்பவித்தன; அப்போது 10,00,000 யூதர்கள் அழிந்தனர், 97,000 பேர் சிறைபிடித்துக் கொண்டுபோகப்படும்படி பிழைத்திருந்தனர். ரோமுக்குச் செல்லும் வழியில், ரோம அதிபதியான டைட்டஸ் யூத சிறைக்கைதிகளை அருகேயுள்ள கடற்துறைமுகமாகிய செசரியாவுக்குக் கொண்டுசென்றான்.
ஜொஸீஃபஸ் எழுதுகிறார்: “டைட்டஸ் செசரியாவில் இருந்தபோது, அவன் தன் சகோதரனாகிய டாமிஷனின் பிறந்தநாளை, 2,500-க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை மிருகங்களுடனும் தீயுடனுமான விளையாட்டுகள் மூலமாகக் கொன்று, மிக ஆடம்பரமாகக் கொண்டாடினான். இதற்குப்பின் அவன் பெனிக்கியாவிலுள்ள பெரய்ட்டஸ் [பெய்ரூட்] என்ற ரோம குடியேற்றத்திற்குச் சென்றான்; அங்கு பெரிய கண்காட்சிகளில் இன்னுமதிகமான கைதிகளைக் கொன்று தன் தகப்பனின் பிறந்தநாளைக் கொண்டாடினான்.”—ஜொஸீஃபஸ்: முக்கியமான எழுத்துக்கள் (Josephus: The Essential Writings) என்பதில் பால் L. மேயர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட யூத போர், (The Jewish War) VII, 37.
தி இம்பீரியல் பைபிள்-டிக்ஷனரி இவ்வாறு குறிப்பிடுவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை: “பிற்காலத்து எபிரெயர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விக்கிரக வணக்கத்தின் ஒரு பாகமாக நோக்கினார்கள்; இந்த நாட்களோடு சம்பந்தப்பட்ட பொதுவான பழக்கங்களாக அவர்கள் கண்டவற்றால் மிகுதியாக உறுதிசெய்யப்படும் ஒரு கருத்தாக இது இருக்கும்.”
பைபிளில் அவ்வளவு சாதகமற்ற முறையில் காண்பிக்கப்பட்டிருப்பதும், ரோமர்களால் அவ்வளவு கொடூரமானவிதத்தில் கொண்டாடப்பட்டிருப்பதுமான ஒரு பழக்கத்தில் சேர்ந்துகொள்ளவேண்டும் என உண்மையுள்ள முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குத் தோன்றியிருக்காது. இன்று உண்மை கிறிஸ்தவர்கள், தங்களுடைய போதனைக்காக எழுதப்பட்ட காரியங்களில் பிறந்தநாட்களைப் பற்றிய பைபிள் பதிவுகளும் அடங்குகின்றன என உணர்கின்றனர். (ரோமர் 15:4) அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்கின்றனர்; ஏனென்றால் அப்படிப்பட்ட அனுசரிப்புகள் அந்தத் தனிநபருக்கு மட்டுமீறிய முக்கியத்துவத்தை அளிக்கின்றன. எல்லாவற்றிலும் முக்கியமாக, பைபிளில் பிறந்தநாட்கள் குறித்து சாதகமற்ற முறையில் சித்தரிக்கப்பட்டிருப்பதை யெகோவாவின் ஊழியர்கள் ஞானமாகக் கவனத்தில் கொள்கிறார்கள்.
[பக்கம் 25-ன் படம்]
செசரியாவிலுள்ள காட்சியரங்கு