உங்களுடைய மரித்த அன்பானவர்கள்—எங்கே இருக்கிறார்கள்?
அலக் திணறிப்போனான். ஒரு வாரத்திற்குள், அவன் தன் இரண்டு நண்பர்களை இழந்தான். அவர்களில் ஒருவன் நெவல், துப்பாக்கிச் சூட்டின் காயத்தினால் மரித்தான். மற்றொருவன் டோனி, ஒரு மோட்டார்வண்டி விபத்தில் கொல்லப்பட்டான். முன்பு பாதித்திராத கேள்விகள் இப்போது இந்த 14 வயது தென் ஆப்பிரிக்க பையனை வாதித்தது. ‘மக்கள் ஏன் மரிக்கவேண்டும்? மரணத்துக்குப் பின்பு என்ன நடக்கிறது?’ என்பதைக் குறித்து அவன் வியந்தான்.
நெவலின் சவ அடக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்கையில், இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கும் என்று அலக் உண்மையில் நம்பினான். “ஆனால்,” அவன் நினைவுகூருகிறான், “மதகுரு ஒரு புத்தகத்திலிருந்து சும்மா வாசித்துவிட்டு, நெவல் பரலோகத்துக்குப் போயிருப்பதாகச் சொன்னார். பின்னர் கல்லறையருகிலோ, அவன் உயிர்த்தெழுதலுக்குக் காத்திருப்பதாக அவர் சொன்னார். நான் குழப்பமடைந்தேன். நெவல் பரலோகத்தில் இருந்தால், அவன் எப்படி ஒரு உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கக்கூடும்?”
பின்பு அதே நாளில் அலக், டோனியின் சவ அடக்கத்துக்குப் போயிருந்தான். அவன் புரிந்துகொள்ளாத ஒரு மொழியில் ஈமச் சடங்கு நடத்தப்பட்டது. எனினும், புலம்புபவர்களின் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை ஆறுதல் கிடைக்கவில்லை என்பதை அலக்குவுக்கு உறுதிப்படுத்தியது. “அந்த இரவில்,” அவன் விளக்குகிறான், “நான் அதிக கவலையுற்று இருந்தேன். நான் ஆறுதலற்றவனாய், குழப்பமடைந்தவனாய் உணர்ந்தேன். என் கேள்விகளுக்கு யாராலும் திருப்திகரமான பதிலைக் கொடுக்க முடியவில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக, கடவுள் இருக்கிறாரா என்று உண்மையிலேயே யோசிக்க ஆரம்பித்தேன்.”
ஒவ்வொரு வருடமும் அலக்கைப் போல லட்சக்கணக்கானோர், அன்பானவர்களை மரணத்தில் இழக்கின்றனர். 1992 பிரிட்டானிக்கா புக் ஆஃப் தி இயர், விளக்குகிறது, “உலகமெங்கும், 1991-ல் 5,04,18,000 மரணங்கள் நிகழ்ந்தன.” அப்போதிருந்து இன்னுமதிகமான எத்தனை லட்சக்கணக்கானோர் மரித்திருக்கின்றனர்? அன்பானவர்களை பறிகொடுத்தவர்கள் சிந்தின நதிக்கணக்கான கண்ணீரைக் கற்பனைசெய்து பாருங்கள்! மரணசம்பந்தமான முரண்பட்ட கருத்துக்கள் உண்டாக்கின குழப்பம் அவர்களுடைய துயரத்தைக் கூட்டுவதாக இருக்கிறது.
இவ்வாறு, அலக் போன்ற பலர், நம்பிக்கையிழந்து, மரணத்துக்குப் பின்பு ஓர் எதிர்கால வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கைக்கு ஏதேனும் அடிப்படை காரணம் உண்டோ என்று சந்தேகிக்கின்றனர். என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன்ஸ் சொல்கிற பிரகாரம், “எல்லா சகாப்தங்களிலும், சிந்திக்கும் நபர்கள் ஒரு தனிப்பட்டவருடைய ஆத்துமா அல்லது உயிர் எப்படித் தனிப்பட்டவரின் மூளை மற்றும் உடல் ஆகியவற்றிலிருந்து பிரிந்து வாழ்கிறது என்பதைப் பற்றி சந்தேகித்திருக்கிற பெரிய கூட்டத்திலிருந்து தனித்து நின்று இருக்கின்றனர்.”
அக்கறையைத் தூண்டும்விதமாகவே, அழியாத ஆத்துமா உடலிலிருந்து தனித்திருக்கும் என்ற மதக் கோட்பாடு பைபிளில் ஆதரிக்கப்படவில்லை என்று மேற்குறிப்பிடப்பட்ட என்ஸைக்ளோப்பீடியா ஒத்துக்கொள்கிறது. ஒருசில இடங்களில், பைபிள் ஒரு நபரின் “ஆத்துமா” வெளியேறுவதுபோலவும், மரித்த உடலுக்குள் மீண்டும் வருவதுபோலவும் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால் இந்த இடங்களில், “ஆத்துமா” என்பது “உயிர்” இழக்கப்படுவது அல்லது மீண்டும் பெறப்படுவது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. (ஆதியாகமம் 35:16-19; 1 இராஜாக்கள் 17:17-23) மாம்சமும் ரத்தமும் உள்ள காணக்கூடிய சிருஷ்டிகளை, ஆம், உயிருள்ள சிருஷ்டிகளை விளக்குவதற்கு, பைபிள் மிகவும் அடிக்கடி “ஆத்துமா” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. (ஆதியாகமம் 1:20, NW; 2:7) இவ்வாறு, பைபிள் மீண்டும் மீண்டுமாக ஆத்துமா மரிக்கிறது என்று குறிப்பிடுகிறது. (எசேக்கியேல் 18:4, 20; அப்போஸ்தலர் 3:23, NW; வெளிப்படுத்துதல் 16:3, NW) ஆத்துமாக்கள் மரித்தபின்பு, அவர்கள் ‘ஒன்றும் அறியார்கள்,’ என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது.—பிரசங்கி 9:5, 10.
மறுபட்சத்தில், இறந்தவர்கள் மறுபடியும் உயிருக்குக் கொண்டுவரப்படுவதைப் பற்றிய பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. லாசருவின் விஷயத்தில், லாசரு இறந்து நான்கு நாட்கள் கழிந்தபின்பு இது நடந்தது. (யோவான் 11:39, 43, 44) என்றபோதிலும், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இறந்துபோனவர்களுக்கு என்ன நடக்கும்? எதிர்கால வாழ்க்கைக்கான அவர்களுடைய எதிர்பார்ப்பு, அவர்கள் மரித்தபோது கொண்டிருந்த அதே உடலைக் கடவுள் உயிர்த்தெழுப்புவார் என்பதை அவசியப்படுத்துகிறதா?
இல்லை. அப்படிப்பட்ட சிந்தனையானது, இறந்துபோன ஓர் உடலிலுள்ள அணுக்களுக்கு என்ன நடக்கிறது என்பதற்கு பொருந்தாததாக இருக்கிறது. காலப்போக்கில், இந்த அணுக்களில் சில தாவரங்களால் உறிஞ்சியெடுக்கப்படுகின்றன. அவை பின்னர் மற்ற சிருஷ்டிகளுக்கு இரையாகி, அவற்றின் உடல்களின் பாகமாக மாறிவிடுகின்றன.
முற்காலத்தில் மரித்தோருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. நம் பரந்த சர்வலோகத்தையும் படைத்தவர், ஆச்சரியத்தில் ஆழ்த்தும், வரம்பற்ற நினைவாற்றலையுடையவராக இருக்கிறார். அவருடைய பரிபூரண நினைவாற்றலில், அவர் நினைவுக்குக் கொண்டுவர விரும்பும் இறந்துபோன எந்த மனிதனின் ஆளுமையையும், மரபியல் பண்புகளையும் மறவாதுவைத்திருக்கும் திறமையை உடையவராக அவர் இருக்கிறார். மேலுமாக, முன்பு உயிர் வாழ்ந்த நபரை இம்மி பிசகாமல் அதே மரபியல் குறியீட்டோடு மறுபடியும் சிருஷ்டிக்கக்கூடிய வல்லமையை யெகோவா தேவன் உடையவராயிருக்கிறார். மேலும் அவர், ஆபிரகாம் போன்ற தாம் நினைவில் கொண்டிருக்கும் நபரின் ஆளுமையை அதற்குள் வைக்கமுடியும்.
ஆபிரகாமின் மரணத்திற்குப் பின் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, இயேசு கிறிஸ்து இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப் பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.” (லூக்கா 20:37, 38) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மட்டுமல்லாமல் மரித்த மற்ற லட்சக்கணக்கானோர் கடவுளின் ஞாபகத்தில் உயிருடன் இருக்கிறார்கள், வரப்போகும் உயிர்த்தெழுதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று” பைபிள் உறுதிசெய்கிறது.—அப்போஸ்தலர் 24:15.
அலக் தன் அன்பானவர்களை இழந்தநிலைக்குள்ளாகி ஒருசில வாரங்கள் கழித்து, அவனுடைய கேள்விகளுக்கு விடைகளைக் கண்டடைந்தான். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவனுடைய வீட்டுக்கு வந்து, கடவுளுடைய வார்த்தை மரணத்தைப் பற்றியும், உயிர்த்தெழுதல் பற்றியும் என்ன சொல்கிறது என்பதை எடுத்துக் காண்பித்தார். இது அலக்கை ஆறுதல்படுத்தியது. அவனுடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை அளித்தது.
உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிள் அடிப்படையிலான நம்பிக்கை என்ன என்று கூடுதலாக அறிய நீங்களும் விரும்புகிறீர்களா? உதாரணமாக, பெரும்பாலான உயிர்த்தெழுதல்கள் பரலோகத்தில் நடக்குமா அல்லது பூமியில் நடக்குமா? மேலும் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவும், மரித்த அன்பானவர்களோடு மீண்டும் மக்கள் ஒன்றுசேர்ந்துகொள்ளும் அவருடைய ஆச்சரியமான வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அனுபவிக்கவும் ஒரு நபர் என்ன செய்யவேண்டும்?