ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
அவன் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன்னுடைய மனச்சாட்சியைப் பின்பற்றினான்
இஸ்ரவேலின் தாவீது ராஜா பின்வருமாறு சொன்னபோது, யெகோவாவின் உதவிக்காக ஜெபித்தார்: “நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.” (சங்கீதம் 26:11) அவர் தன்னுடைய உத்தமத்தைக் காத்துக்கொண்டதற்காக கடவுள் அவருக்குத் தயவைக் காண்பித்தார். இயேசு தம்முடைய பரலோக தகப்பனின் சித்தத்தைச் செய்ததால், யெகோவா அவரையும் ஆசீர்வதித்தார்; பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன்னுடைய மனச்சாட்சியைப் பின்பற்றி கடவுளுடைய சித்தத்தைச் செய்ய தீர்மானமாயிருந்த கொலம்பியாவைச் சேர்ந்த ஓர் இளைஞனையும் அவர் ஆசீர்வதித்தார். இந்த இளைஞன் இவ்வாறு சொல்கிறான்:
“நான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, ஒரு கத்தோலிக்க பள்ளியில் மாணவனாக இருந்தேன். என்றாலும், நான் பூசைக்குச் சென்றபோது, என் மனச்சாட்சி உறுத்தியது; ஆகவே நான் பள்ளி முதல்வர் (அவர் ஒரு பாதிரியாக இருந்தார்), வழிகாட்டும் ஆலோசகர், என் தொகுதியின் மாணவத் தலைவன் ஆகியோரிடம் சென்று, பூசைக்குச் செல்வதிலிருந்து விலகியிருப்பதற்கு அனுமதி கோரினேன். எனக்கு விலக்கம் அளிக்கப்பட்டபோதிலும், சிலர் என்னை அதற்குச் செல்லும்படி வற்புறுத்தினார்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக நான் முழுக்காட்டப்பட்ட உடனே பிரச்னை அதிகரித்தது. நான் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டால், என்னை வீட்டிலிருந்து விரட்டிவிடுவதாக என் அப்பா மிரட்டினார். நான் ஒரு பல்கலைக்கழக படிப்பையும் ஒரு வாழ்க்கைத் தொழிலையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் மனதில் நினைத்திருந்தார்.
“கத்தோலிக்க கடமைகளை அனுசரிக்கத் தவறுபவர்களைப் பற்றிய எச்சரிப்புகளை முதல்வர் மீண்டும் மீண்டும் கொடுத்தார். அந்த வருடத்தின் முதல் பூசையின்போது, அது முடியும்வரை நான் ஒளிந்திருந்தேன். பின்னர் நான் அந்த ஆசிரியருக்கு (ஒரு பாதிரியார்) பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும் (School and Jehovah’s Witnesses) என்ற சிற்றேட்டின் ஒரு பிரதியைக் கொடுத்து, நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பதால், பூசைக்குச் செல்ல முடியாது என்று கூறினேன். அவர் சொன்னார்: ‘நீ வேறு பள்ளியைப் பார்க்கத் தொடங்குவது நல்லது.’ பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவது, என் தந்தையால் வீட்டிலிருந்து விரட்டப்படுவதைக் குறிக்கும் என்று எனக்குத் தெரியும். என்றபோதிலும், நான் யெகோவாவிடம் ஜெபித்து, தொடர்ந்து என்னுடைய பள்ளி சகாக்களுக்கு ஒரு முழுமையான சாட்சி கொடுத்தேன்.
“விடுமுறை சமயம் வந்தது. பின்னர், விடுமுறைக்குப்பின் திரும்பவும் பள்ளியில், மீண்டும் பூசைக்கான நேரமாக இருந்தது. முதல்வரும் மற்ற பாதிரிமார்களும் கோயிலுக்கு வெளியே, பாவ அறிக்கைகளைக் கேட்பதற்குத் தயாராக இருந்தனர். ஏறக்குறைய பயம் என்னை சூழ்ந்துகொண்டது. நான் உள்ளே சென்று உட்கார்ந்தேன், ஆனால் என் மனச்சாட்சி என்னைத் தொந்தரவு செய்தது. பாட்டு ஆரம்பித்தபோது, ‘இங்கே நான் என்ன செய்கிறேன்? யெகோவா என் தேவன். நான் ஒரு கோழையாக இருந்து அவரை ஏமாற்றக் கூடாது. நான் அவரை விட்டுவிடக் கூடாது. அவர் என்னைக் கைவிடமாட்டார்,’ என்று நான் நினைத்தேன். நான் தைரியத்திற்காக ஜெபித்தேன். பின்னர், நான் கோயிலுக்கு வெளியே சென்று, பாவ அறிக்கைக்கான வரிசையில் நின்றேன். முதல்வரிடம் சென்றபோது, நான் சொன்னேன்: ‘டீச்சர், நான் பாவ அறிக்கை செய்ய வரவில்லை.’ அவர் சொன்னார்: ‘நான் அப்படித்தான் நினைத்தேன்.’ ஆனால் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என்னுடைய மனச்சாட்சி பூசையில் கலந்துகொள்ள என்னை அனுமதிக்கவில்லை என்றும் நான் அதன் விளைவுகளை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும், அவரிடம் சொன்னேன். நான் பைபிளிலிருந்து கற்றிருந்த காரியங்களுக்கு விரோதமாகச் செல்ல என்னால் முடியவில்லை.
“அவர் என்னை உற்று நோக்கி, புன்முறுவல் செய்து, இவ்வாறு சொன்னார்: ‘நான் உன்னைப் பாராட்டுகிறேன். சாட்சிகளாகிய நீங்கள் எல்லாரும் மெச்சத்தக்கவர்கள். உங்களுக்கு, கடவுளே முதலாவதாக இருக்கிறார்; என்ன நடந்தாலும் சரி, அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். தொடர்ந்து அதையே செய்யுங்கள். நீ செய்கிறது மிக நல்ல காரியம். எல்லா கத்தோலிக்கரும் உன்னைப்போல், அவ்வளவு வைராக்கியத்தையும், கடவுளுக்கு அவ்வளவு அன்பையும் காண்பித்தால் நன்றாக இருக்கும். இப்போது முதல், நீ எங்களுடைய மத ஆராதனைகளில் பங்கெடுப்பதிலிருந்து விலக்கமளிக்கப்பட்டிருக்கிறாய்.’ நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்! பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என்னுடைய மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிவதற்கான என்னுடைய தீர்மானத்தை யெகோவா ஆசீர்வதித்திருந்தார்.
“மறுநாள், முதல்வர் மாணவர்களிடம் கூறினார்: ‘மற்ற மதங்கள் நமக்கு முன்னாகச் செல்கின்றன. நாம் ஏன் அவர்களைப் போல, வைராக்கியமாகவும் கடவுளுக்கு ஆழ்ந்த அன்புடனும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரைச் சேவிப்பதற்கான விருப்பத்துடனும் இருக்கிறதில்லை? இது நம்முடைய உள்ளங்களில் இருக்கவேண்டிய ஒரு காரியம்.’
“முடிவாக அந்த முதல்வர் ரோமிற்கு மாற்றலாகிச் சென்றார்; புதிய முதல்வர் நான் கலந்துகொள்ளாமல் இருப்பதை வெறுமனே கவனிக்காமல் விட்டார். படிப்பு முடிந்ததும் முழு நேர ஊழியமாகிய என்னுடைய இலக்கை நான் அடைவதற்கு வசதியாக, என் தந்தை வீட்டைவிட்டு மாறிச் சென்றார்.”
பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியைப் பின்பற்றின இந்த இளைஞனை யெகோவா ஆசீர்வதித்தார். அதேவிதமாகவே தம்முடைய சித்தத்தைச் செய்ய நாடும் எல்லாரையும் அவர் ஆசீர்வதிப்பார்.—நீதிமொழிகள் 3:5, 6.