பவழங்களைவிட அதிக விலையேறப்பெற்றது
அதிகரிக்கும் எண்ணிக்கையான பார்வையாளர்கள், சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களில் இந்தக் காட்சிகள் போன்றவற்றால் கிளர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
வானவில் போன்ற வர்ணங்களாலும் நிறக்கலவைகளாலுமான எண்ணற்ற மீன்கள், அந்தத் தெளிவான தண்ணீர்களில் நீந்துவோருக்கு கவர்ச்சியூட்டுவதாய் இருக்கின்றன. ஆனால் இங்கே காணப்படும் வண்ண மீன்களைச் சுற்றி, பகட்டான வண்ணமுள்ள பவழங்கள் உட்பட கடலடியிலுள்ள மற்ற வியப்புகளின் கண்கவரும் காட்சி இருப்பதைக் கவனியுங்கள்.
அந்த அழகிய பவழங்கள் பல வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுவதாய் இருக்கின்றன. நீங்கள் நினைத்துப்பார்க்க முடிந்தபடி, பண்டைய காலங்களில்கூட ஒளிவண்ணமிக்க பவழங்கள் உயர்வாக மதிப்பிடப்பட்டன. அவற்றிலிருந்து கைவினைஞர் அழகிய நகைகளை வடிவமைத்தெடுப்பார்கள்; மேலும் பைபிள் எழுத்தாளர்கள் பவழங்களை, பொன், வெள்ளி, மாணிக்கங்களுடன் சேர்த்து குறிப்பிட்டனர். (நீதிமொழிகள் 3:14, 15, NW; எசேக்கியேல் 27:16, NW) ஆனால் அந்த எழுத்தாளர்கள் பவழங்களின் அழகு மற்றும் மதிப்பிற்கு அப்பால் காண நமக்கு உதவி செய்கின்றனர்.
அவற்றைவிடவும்கூட மதிப்புள்ளவையாய் சில இருக்கின்றன என்றும், நாம் அவற்றை அதிக உயர்வாகப் போற்றவேண்டும் என்றும் அவர்கள் சிறப்பித்துக்காட்டினர். ஒரு நல்ல, திறம்பட்ட மனைவி அவற்றுள் ஒன்றாவாள், ஏனென்றால் நாம் வாசிக்கிறோம்: “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை [பவழங்களைப், NW] பார்க்கிலும் உயர்ந்தது.” (நீதிமொழிகள் 31:10) நீங்கள் திருமணமானவரா? இங்குள்ள எழில்மிக்க பவழங்களைத் திரும்பவும் பார்த்துவிட்டு, உங்கள் மனைவியை அவளுக்கு உகந்த மதிப்புடன் வைத்திருக்கிறீர்களா என்று சிந்தியுங்கள்.
நாம் ஆண்களாகவோ பெண்களாகவோ, திருமணமானவராகவோ திருமணமாகாதவராகவோ, எப்படியிருந்தாலும் சரி, மிகச் சிறந்த பவழங்களைப்பற்றிய ஒரு காட்சி, இன்னுமதிக மதிப்புடைய தெய்வீக ஞானம், பகுத்துணர்வு, அறிவு ஆகியவற்றிற்குப் போற்றுதல் காண்பிக்க நமக்கு உதவ வேண்டும். கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. [பவழங்களைப், NW] பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.”—நீதிமொழிகள் 3:13-15; 8:11, NW.
ஆகவே, நாமாகவே நீந்திச்சென்று பார்த்தாலும் சரி அல்லது புகைப்படங்கள் மூலமாகப் பார்த்தாலும் சரி, சிவந்த சமுத்திரத்தின் பவழங்கள் நமக்கு அழகையும் பயனுள்ள சிந்தனைக்குரிய பொருளையும் உணர்த்தவேண்டும்.