மனிதனின் வழிநடத்துதல் தோல்வியடைந்திருக்கிறதா?
சகலத்தையும் உண்டாக்கியவர் யார்? உங்களுடைய பதில் “கடவுள்” என்றால், பைபிளின் கடவுளாகிய சிருஷ்டிகரில் நம்பிக்கை வைக்கும் பல லட்சக்கணக்கானோரோடு நீங்கள் ஒத்திருக்கிறீர்கள்.
எனினும், கடவுளில் நம்பிக்கை வைக்கும் அநேகர், மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அவர் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார் என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரச்னை உடையவர்களாயிருக்கின்றனர். மனிதவர்க்கத்திற்கு துயர்த்தீர்ப்பைக் கொண்டுவரும் ஒரு திட்டத்தைக் கடவுள் வைத்திருக்கிறார் என்று நினைப்பது உண்மையாக இருக்கக்கூடுமா? இது அவ்வாறு இருக்கிறது என்பதற்கு அநேகர் நியாயமான சான்றைக் காண்கிறதில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தீர்வுகளைக்காணும் நோக்கத்தில் மனிதர்கள், கடவுளைவிட்டுவிட்டு, எண்ணற்ற சுய உதவி முறைகளை முயற்சிசெய்திருக்கிறார்கள். ஆனால் மனிதர்கள் தீர்வுகளைக் கண்டிருக்கிறார்களா? அல்லது பிரச்னைகள் அதிக வினைமையானதாக, தீர்க்கப்படுவதற்குக் கடினமானதாகிக் கொண்டிருக்கின்றனவா? இன்றைய உலகில் அவசர பிரச்னைகளை மனிதன் எப்படிக் கையாண்டு வருகிறான்?
ஒரு வல்லுநர் இவ்வாறு சொல்கிறார்: “தொழில் புரட்சி ஆரம்பித்ததிலிருந்து, வளர்ச்சியடைந்த நாடுகள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்துதல் தாக்குப்பிடிக்க முடியாத முறைகளின்மூலம் வளரும் நாடுகளுக்கு நட்டத்தை உண்டாக்கும்வகையில் உலகின் இயற்கை வளங்களை அதிகமாகப் பாழ்ப்படுத்தி, பூமியளாவிய சுற்றுச்சூழலுக்கு சேதத்தை உண்டாக்கியிருக்கின்றனர்.”
மனிதன் தொடர்ந்து பூமியைக் கெடுத்துக்கொண்டிருக்கிறான். அர்ஜன்டினாவின் செய்தித்தாள் க்ளாரின் குறிப்பிட்டது: “இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், பொருளாதார பேராசை, எச்சரிப்பற்றத் தன்மை, அசட்டைமனப்பான்மை பேராபத்துக்களுக்குக் காரணங்களாக இருந்தன. அவை மனித உயிர்களைப் பலியாக்கியது மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் பெரும்பாலும் கணிக்கமுடியாதளவிற்கு சீர்கேடடையச் செய்தன.”
நவீன சமூகத்தில் நிரந்தரமாக இருக்கப்போவதாய் கொடிய வறுமை இப்போது தோன்றுகிறது. உலகத்தின் பணக்கார நாடுகள் என்றழைக்கப்படுபவையும்கூட வறுமையின் மட்டுமீறிய பளுவால் தளர்ச்சியடைந்து கொண்டுவருகின்றன. கனடாவிலுள்ள டோரன்டோவின் தி க்ளோப் அண்ட் மெய்ல் பிரகாரம், “கனடாவிலுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கானோர் அவர்களுடைய வேலைசெய்யக்கூடிய வயதின்போது வறுமையை எதிர்ப்படுவர்” என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்தச் செய்தித்தாள் தொடர்ந்து, “வறுமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, குடும்பப் பிளவு, மேலும் இப்படிப்பட்ட போக்கு சமீப ஆண்டுகளில் அதிகமாகியிருக்கிறது” என்று குறிப்பிடுகிறது.
சீரழிந்துவரும் சமூகத்திற்கு மற்றொரு அடையாளம் போதைப்பொருள் துர்ப்பிரயோகம். மனிதவர்க்கம் அதைப் பற்றி என்ன செய்யமுடியும்? தெளிவாகவே, மொத்தத்தில் மிகமிகக் குறைவானதையே செய்யமுடியும். லட்சக்கணக்கானோர் தங்களுடைய மயக்கமருந்துகளின் துர்ப்பிரயோகத்தால் வந்த நேரடியான விளைவின் காரணமாக, உடல், மனம், ஒழுக்க சீரழிவைத் தொடர்ந்து அனுபவிக்கின்றனர். கூடுதலாக, பிரச்னை காட்டுத்தீபோல் பரவிவருகிறது.
அறிவியல் வல்லுநர்கள், நோய்க்கு எதிரான யுத்தத்தில் தோல்வியடைவதுபோல் தோன்றுகிறது. உண்மையாகவே, நவீன தொழில்நுட்பம் பல போராட்டங்களை வென்றிருக்கிறது. எனினும், சில அறிவியல் செய்முறைகள் தாமே, மருந்துகளை எதிர்த்துப் போராடும் புதிய விஷக்கிருமிகள் உண்டாவதற்கு வழிநடத்தியிருக்கின்றன.
மனித உரிமைகளின் மீறுதல்கள் பரவியிருப்பதை மனித அரசாங்கங்கள் நிறுத்தமுடியாது. உதாரணமாக, அடிமைத்தனத்தைத் தவிர்ப்பதற்காக அநேக உறுதிமொழிகளும், சட்டங்களும் முறைப்படுத்தப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் பத்து கோடி மக்களுக்கு அதிகமானோர் கேடுகெட்ட அடிமைத்தனத்திற்குச் சமமான நிலைமைகளில் வேலைசெய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால் ஏன் மனிதனின் வழிநடத்துதல் தோல்வியடைந்திருக்கிறது? இந்தக் காரணிகளைக் கவனியுங்கள். மனித வழிநடத்துதல் மக்களிடமிருந்து—கடுமையான வரம்புக்குட்பட்டிருக்கிற மக்களிடமிருந்து—வருகிறது. வாழ்க்கையில் அவர்களுடைய அனுபவம் ஓரளவிற்கு குறைவானது; மேலும் பொதுவாக குறிப்பிட்ட கலாச்சாரங்கள் அல்லது சுற்றுச்சூழல்களால் வரம்புக்குட்படுத்தப்பட்டதாய் இருக்கிறது. அவர்களுடைய அறிவும் வரம்புக்குட்பட்டதுதான். அவர்கள் கொடுக்கும் எந்த வழிநடத்துதலும் அப்படிப்பட்ட வரம்புகளைப் பிரதிபலிக்கின்றன. அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி, ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.’—ரோமர் 3:23.
மனிதவர்க்கத்தின் பெரும்பாலோர் உட்படும் பிரச்னைகள், கஷ்டங்கள், உண்மையில், கடவுளுடைய வழிநடத்துதலை அசட்டைசெய்ததன் நேரடியான அல்லது மறைமுகமான விளைவாகும். ஆயினும், அப்படிப்பட்ட வழிநடத்துதல் எங்குக் கண்டடையப்படலாம்? இன்று கடவுள் எப்படி நமக்கு வழிநடத்துதலைத் தருகிறார்? பின்வரும் கட்டுரை பதில்களைக் கலந்தாலோசிக்கும்.