நினைவுகூரவேண்டிய ஓர் இரவு
இஸ்ரவேலர் நினைவுகூரப்படவேண்டிய ஒரு நாளில், 3,500-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு, யெகோவா தேவன், அவர்கள் ஓர் ஆட்டைக் கொன்று அதன் இரத்தத்தைத் தங்கள் வீட்டுவாசல்களின் நிலைக்கால்களிலும் மேற்சட்டங்களிலும் தெளிக்கும்படிச் செய்தார். அந்த இரவில்தானே, கடவுளின் தூதன், இந்தவிதமாக அடையாளம் குறிக்கப்பட்ட வீடுகளை கடந்துசென்றார்; ஆனால் எல்லா எகிப்தியரின் வீடுகளிலுமுள்ள முதற்பேறான மகன்களைக் கொன்றுபோட்டார். பின்னர் இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டனர். அப்போது முதற்கொண்டு, அந்தச் சம்பவத்தின் ஆண்டு நிறைவு நாளன்று யூதர்கள் பஸ்காவை ஆசரித்தனர்.
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலருடன் தமது கடைசி பஸ்காவை ஆசரித்து முடித்தவுடனே, தம்முடைய பலிக்குரிய மரணத்தை நினைவுகூரக்கூடிய ஒரு போஜனத்தை நிறுவினார். அவர் தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் அப்பத்தைக் கொடுத்து, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது.” பின்னர் ஒரு திராட்சரச பாத்திரத்தையும் அவர்களிடம் கொடுத்து, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.” இயேசு இவ்வாறும் சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (மத்தேயு 26:26-28; லூக்கா 22:19, 20) ஆகவே இயேசு தம்முடைய மரணத்தின் இந்த ஆசரிப்பை ஆசரிக்கும்படி தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் கட்டளையிட்டார்.
இயேசுவுடைய மரணத்தின் இந்த நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதில் தங்களைச் சேர்ந்துகொள்ளும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை அனலோடு அழைக்கிறார்கள். உங்கள் வீட்டிற்கு மிக அருகாமையிலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு நீங்கள் செல்லலாம். உங்களுடைய பிராந்தியத்திலுள்ள சாட்சிகளிடம் சரியான நேரத்தையும் இடத்தையும் கேட்டுக்கொள்ளுங்கள். 1994-ல் இந்த ஆசரிப்பிற்கான தேதி, மார்ச் 26, சனிக்கிழமை; அப்பமும் திராட்சரசமும் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் பரிமாறப்படும்.