“நாம் கேலிசெய்வதற்குமுன் அதிகம் வாசிப்போமாக”
அப்படித்தான் நியூ ஜீலாந்திலிருந்து ஒருவர், நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் காவற்கோபுரம் பத்திரிகையைப் பற்றி சொன்னார். எசேக்கியேல் அதிகாரம் 1-ல் விவரிக்கப்பட்டுள்ள கடவுளின் பரம ரதத்தைப் பற்றிய ஒரு கட்டுரையைக் குறித்து, அந்த நபர் எழுதினார்:
“இந்த நான்கு உயிர் ஜீவன்களும், அல்லது கேருபீன்களும் நான்கு இறகுகளையும் நான்கு முகங்களையும் உடையதாக இருந்தன. யெகோவாவின் நீதியைக் குறிக்கிற ஒரு சிங்க முகம்; கடவுளின் வல்லமையைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு காளை முகம்; அவருடைய ஞானத்தைக் குறிக்கிற ஒரு கழுகின் முகம்; யெகோவாவின் அன்பைச் சுட்டிக்காட்டுகிற ஒரு மனித முகம் ஆகியவற்றை அவை கொண்டிந்தன.
“இதைத் திரும்பத் திரும்ப வாசித்தப் பின்பு, என் இருதயத்திற்குள் ஒரு கனிவான உணர்ச்சியடைந்தேன். என் கண்கள் ஆனந்தக் கண்ணீர்விட ஆரம்பித்தன. என்னுடைய நினைவுகள் உடனே, ‘யெகோவாவே, நீர் எவ்வளவு அழகும் பூரிப்பும் உடையவராக இருக்கவேண்டும்!’ உலகப்பிரகாரமான ஆளாக இருக்கிற நான்கூட, பல வருடங்களாகக் கேலிசெய்துவந்த இந்த யெகோவா தேவனைப் பற்றிய இந்தப் புதிய உணர்வுகளைப் பெறுவது என்னை மிகவும் ஸ்தம்பிக்கச்செய்கிறது. ‘உங்களுக்கு நன்றி’ என்று யெகோவாவின் சாட்சிகளிடம் நான் சொல்கிறேன். மேலும் என்னைப் போன்ற அநேகருக்கு நான் சொல்வதாவது, ‘நாம் கேலிசெய்வதற்குமுன் அதிகம் வாசிப்போமாக.’”