தங்க ஆப்பிள்களைப் போல்
ஆப்பிள்கள்—அவை கண்ணுக்கும் சுவை உணர்வுக்கும் இதமான என்னே ஒரு விருந்து! பைபிள் பின்வருமாறு சொல்லும்போது, இந்தச் சுவைமிக்கப் பழத்தை ஒரு சிந்தனையைத் தூண்டும் உவமையாகப் பயன்படுத்துகிறது: “சரியான நேரத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளி செதுக்குவேலைப்பாடுகளில் உள்ள தங்க ஆப்பிள்களைப்போல் இருக்கிறது.” (நீதிமொழிகள் 25:11, NW) இந்தக் கூற்று எதை அர்த்தப்படுத்துகிறது?
‘வெள்ளி செதுக்குவேலைப்பாடுகளில் உள்ள தங்க ஆப்பிள்கள்’ என்பது தங்கத்தாலான பழத்தை அதில் கொண்டிருக்கும் ஒரு செதுக்கப்பட்ட வெள்ளித் தட்டு போன்ற செதுக்குவேலைப்பாட்டைக் குறிக்கக்கூடும். அந்த அதிகாரத்தின் முந்தின வசனங்கள் ஒரு ராஜாவை அணுகுவதைப்பற்றி குறிப்பிடுவதால், இந்த வசனம் ஓர் ஆட்சியாளருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளை—வெள்ளித்தட்டுகளில் வைக்கப்பட்ட ஆப்பிள்களின் வடிவத்தில் இருக்கும் தங்க நகைகளை—குறிக்கலாம். (நீதிமொழிகள் 25:6, 7) உண்மையில், கொள்ளைகொள்ளும் அழகு!
பொருத்தமான, மதிப்புவாய்ந்த, சமயோசிதமான வார்த்தைகளில், பேசப்பட்டாலும் சரி, எழுதப்பட்டாலும் சரி, அதேபோன்ற அழகு இருக்கிறது. அவை பல வழிகளில் இதமானவையாக, உற்சாகம் அளிப்பவையாக, பயனுள்ளவையாக இருக்கின்றன. விசேஷமாக, தெய்வீக ஏவுதலினால் பைபிளில் இருப்பவை ‘வெள்ளி செதுக்குவேலைப்பாடுகளில் உள்ள அழகிய தங்க ஆப்பிள்களைப்போல்’ இருக்கின்றன.
நீதிமொழிகள் 25:11-லுள்ள சாலொமோன் ராஜாவின் ஞானமான கூற்றில் சித்தரிக்கப்பட்டபடி, அவர் “இதமான வார்த்தைகளைக் கண்டுபிடித்து, சத்தியத்தின் சரியான வார்த்தைகளை எழுதும்படி வகைதேடினார்.” (பிரசங்கி 12:10, NW; நீதிமொழிகள் 25:1) நூற்றாண்டுகளுக்குப்பின், கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) ஆம், மிக நுட்பவேலை கைவினைஞரின் வேலைகளைப் பெரிதும் விஞ்சிநிற்கும் அளவிற்கு, அத்தகைய பகட்டும் அழகும் உடைய பயனுள்ள ஆலோசனைகள், தீர்க்கதரிசனங்கள், வார்த்தை சித்தரிப்புகள், மற்றும் சத்தியங்களை பைபிள் கொண்டிருக்கிறது. மேலுமாக, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து ஞானத்தைப் பெறும் எவரும், ஒரு விலைமதிப்பற்ற சொத்தை அடையப்பெறுகிறார்; நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையையும் அவர் மனதில் பேணலாம்.—நீதிமொழிகள் 4:7-9; யோவான் 17:3.