பிரிட்டனின் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்கள்
தி இக்கானமிஸ்ட் பத்திரிகையில் சொல்லியுள்ளபடி, பிரிட்டனின் 560 லட்ச மக்களில் 10 சதவீதத்துக்கும் குறைந்தவர்களே தற்போது ஆர்வமுள்ள கிறிஸ்வர்களாக இருக்கின்றனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில், 40 லட்சத்துக்கும் குறைவான மக்களே சர்ச் ஆராதனைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில், 11 லட்சம் பேர் மாத்திரமே ஆங்கிலிக்கர்கள். எனினும், கடவுள் இருப்பதைப்பற்றிய அறியொணாமைக் கொள்கை விரிவாய்ப் பரவியிருந்தும், இங்கிலாந்தின் சர்ச், அரசாங்க மதமாக அதன் நிலைநாட்டப்பட்ட பாகத்தைத் தொடர்ந்து வகிக்கிறது. “பல ஆண்டுகளாக பிரிட்டன் கிறிஸ்தவ சமுதாயமாக இல்லை, ஆனால், அறியொணாமைக் கொள்கையுடையதென ஒப்புக்கொள்ள மறுக்கிறது, பெரும்பாலும் பழங்கால நாட்டத்தின் காரணமாகவே,” என அதே செய்தி பத்திரிகை வாதிடுகிறது. தற்கால அரசியலாளர்களும் செய்தித்தாள்களும், அரசாங்கத் தொடர்பிலிருந்து சர்ச் நீக்கப்படுவதை, அதாவது, சர்ச்-அரசாங்க இணைப்பில் ஒரு முறிவைக் கேட்பது வியப்பாயில்லை.
“உண்மையில் மதச்சார்பற்றதாயுள்ள ஓர் உலகம், கிறிஸ்தவமாக இருப்பதாக வெளித் தோற்றத்துக்குச் சொல்லிக்கொள்ளும் அது, உலகங்களிலேயே மிக மோசமானது,” என உவால்டர் பாக்ஹாட் ஆகிய தி இக்கானமிஸ்ட் பத்திரிகையின் 19-வது நூற்றாண்டு பதிப்பாசிரியர் புலம்பினார். ஆனால் பொ.ச. முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்து, தம்முடைய சீஷர்கள், ‘தாம் இந்த உலகத்தின் பாகமானோரல்லாததுபோல், அவர்களும் இந்த உலகத்தின் பாகமானோர் அல்லர்’ என்று கூறினார். (யோவான் 17:16, NW) நிச்சயமாகவே, கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதற்கு அவர்களை அவர் உலகத்துக்குள் அனுப்பினார். அவ்வாறே இன்று, யெகோவாவின் சாட்சிகள் ‘வெளியரங்கமாகவும் வீடுகள்தோறும்’ ஆர்வமாய்ப் பிரசங்கிப்போராக உலகமெங்கும் நன்றாய் அறியப்பட்டுள்ளனர்.—அப்போஸ்தலர் 20:20.
ஆங்கிலிக்கர்களோடு ஒப்பிட, பிரிட்டனிலுள்ள 1,26,173 சாட்சிகள் எண்ணிக்கையில் வெகு சிலரே. எனினும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதில் மாதத்திற்கு ஏறக்குறைய 20 மணிநேரங்கள் அவர்கள் செலவிடுகின்றனர். மேலும், நீதியுள்ள புதிய உலகத்தை சீக்கிரத்தில் நிலைநாட்டவிருக்கிற, கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதில், 1992-ம் ஆண்டின்போது ஒவ்வொரு சாட்சியும் மாதத்திற்குச் சராசரி 16 மணிநேரங்கள் கூடுதலாகச் செலவிட்டனர். (மத்தேயு 24:14; 2 பேதுரு 3:3) அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் உங்கள் வீட்டுக்கு வருகையில், அவர்களுடைய தனிப்பட்ட தெளிவான செய்திக்கு நீங்கள் செவிகொடுத்துக் கேட்டு, அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் உள்நோக்கம் என்னவென கண்டுபிடிப்பீர்களா?