அவள் தன்னுடைய விசுவாசத்திற்காகப் போராடினாள்
மூன்று வருடங்களுக்கு முன்பு, ஸ்பெய்னிலுள்ள காடிஸில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான, கேரீடாட் பாஸன் லிஸ்ட்டன் என்பவருக்கு அவசரமாக ஓர் அறுவைசிகிச்சை தேவைப்பட்டது. பித்தக்கற்கள் காய்ச்சலை உண்டாக்கின, அவளுடைய இரத்த ஓட்டத்தையும் விஷப்படுத்திக்கொண்டிருந்தன. அவள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, பைபிள் அடிப்படையிலான அவளுடைய நிலைநிற்கையான, இரத்தமேற்றுதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதை விளக்கினாள். மருத்துவர்கள், இரத்தமேற்றாமல் அறுவைசிகிச்சைசெய்ய சம்மதித்தனர். ஆனாலும், அறுவைசிகிச்சை அறைக்குள் எடுத்துச்செல்லப்படுவதற்கு சற்றுமுன்பு, மருத்துவர்கள் ஓர் ஆவணத்தில் அவளைக் கையெழுத்திடச் சொன்னார்கள். அது, இரத்த சம்பந்தமான அவளுடைய தீர்மானத்தை அவர்கள் மதிக்க விரும்புகிறார்கள் என்றும், ஆனால் ஒருவேளை அவசர நிலை ஏற்பட்டால், தேவைப்படுத்தும் எந்தச் சிகிச்சையையும் அளிப்பதற்கு அவளுடைய அனுமதியை அவர்கள் பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டது.
மருத்துவமனைக்கு வந்திருந்த ஒரு சபை மூப்பரும் கேரீடாடின் மகனும், இவரும் ஒரு சாட்சி, கேரீடாடுக்கு இப்படிப்பட்ட நமுனாவைப் பூர்த்திசெய்வதன் பின்விளைவுகளைப்பற்றி ஆலோசனைக் கொடுத்தனர். அவளுடைய கையொப்பம், மருத்துவர்களை அவசரத் தேவையில் இரத்தம் ஏற்றுவதற்கு உரிமையளித்திருக்கும். மருத்துவ பணியாளர் அறுவைசிகிச்சை அறைக்குள் அவளைக் கொண்டுபோக வந்தபோது, அவள் அந்தத் தாளில் கையொப்பம் இடப்போவதில்லை என்று விளக்கினாள். விசாரணை நடவடிக்கை எடுக்கப்படாமலேயே, அவள் அவளுடைய அறைக்குத் திரும்பிக்கொண்டுவரப்பட்டு, அவளுடைய மனதை மாற்றும்படி கடுமையாக வற்புறுத்தப்பட்டாள்.
பலமுறை பேசினப்பின்பு, அவர்கள் மருத்துவம் சார்ந்த சட்ட நீதிபதியைக் கூப்பிட்டு அவளை மனம் மாற்றலாம் என்று தீர்மானித்தனர், ஆனால் இது எந்தவிதப் பலனையும் தரவில்லை. அவர்கள் அவளுக்கு இரத்தம் கொடுக்க அனுமதித்தால், கடவுளுக்கு முன்பாக அவள் குற்றமுள்ளவளாக இருப்பாள் என்று அவள் உணர்வதாகக் கேரீடாட் விளக்கினாள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின் பிரகாரம், ஒரு பெண் உதவிக்காகக் கூக்குரலிட்டு கத்தி மறுத்தபோதிலும் கற்பழிக்கப்பட்டால், அவள் தவறுசெய்தவளாகக் கருதப்படுவதில்லை என்று குறிப்பிட்டுக் காண்பித்தாள். (உபாகமம் 22:23-27) “என் விருப்பத்தை நிராகரித்து, மருத்துவர்கள் என் மனசாட்சியை மீறிச் செயல்பட முயற்சித்தால்,” அவள் சொன்னாள், “என்னை அவர்கள் கற்பழித்தால் என்ன செய்வேனோ, அதைப்போலவே நான் எதிர்க்க வேண்டும்.”
பல மணிநேரங்கள் கடந்துவிட்டன, இறுதியில் மருத்துவர்கள் இரத்தமேற்றாமல் அவளுக்கு அறுவைசிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டனர். அறுவைசிகிச்சை அறையில், கேரீடாட், யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு அனுமதிக் கேட்டாள். இதை அவள் செய்தாள், அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.
ஆனால் இதற்குப்பின்பு, கேரீடாடின் நிலைமை மிகவும் மோசமாகியது, மருத்துவர்கள் அவளுடைய விருப்பத்திற்கு மதிப்புத் தராமல், இரத்தம் ஏற்றுதலைக் கட்டாயப்படுத்தவேண்டும் என தீர்மானித்தனர். எனவே, ஒரு மருத்துவரும், செவிலியரும் அவளுக்கு இரத்தம் ஏற்றுவதற்கு தயாரானார்கள். தன்னுடைய வலிமையற்ற நிலையிலும், கேரீடாட் தன்னுடைய முழுபலத்தோடு எதிர்த்தாள். அவள் இரத்தம் வந்துகொண்டிருந்த குழாயைக் கடித்துப்போடுமளவிற்கும் சமாளித்துவிட்டாள். இறுதியில் மருத்துவர், அவர்கள் செய்ய முயற்சிசெய்வதைக்குறித்து அவ்வளவு வெட்கப்பட ஆரம்பித்ததால், அவர் அதைக் கைவிட்டார். “நான் இதைச் சகிக்க முடியாது, நான் சரணடைகிறேன்!” என்று அவர் சொன்னார்.
கேரீடாட் அபாயகரமான நிலையிலிருந்து தப்பிப்பிழைத்தாள், மற்ற எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுகமடைந்தாள். மருத்துவர்களும் செவிலியர்களும் அவளுடைய விசுவாசத்தினாலும் தைரியத்தினாலும் ஆழமாகக் கவரப்படாமல் இருக்க முடியவில்லை. இவையெல்லாம் கேரீடாட் 94 வயதாயிருந்தபோது நடந்தது.