புகையிலையும் மதகுருக்களும்
மருத்துவரான ஜான் கெளஅன் என்பவர் 115-ற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு, புகையிலையின் உபயோகத்திற்கு எதிராக தூய்மை, கற்பு, மற்றும் நல்ல ஆரோக்கியம் [The Use of Tobacco vs. Purity, Chastity and Sound Health] என்ற தலைப்பை உடைய புத்தகத்தை எழுதினார். சமீப வருடங்களில் அதன் கேடான விளைவுகளைப் பற்றி நாம் கற்றிருப்பவற்றின் நோக்குநிலையில், மதகுருக்களால் அது உபயோகிக்கப்படுவதைப்பற்றிய அவருடைய ஆய்வுகள் கூர்நோக்குடையதாகவும் இன்று கடவுளைச் சேவிக்க நாடும் எவருக்கும் பொருந்துவதாகவும் இருக்கும். புகையிலை உபயோகத்தின் ஒழுக்கரீதியிலான பாதிப்பைக்குறித்து சிந்திக்கையில் 4-ம் அதிகாரத்தில், டாக்டர் கெளஅன் குறிப்பிட்டார்:
“புகையிலையை உபயோகிப்பது உடல்சம்பந்தமாக தவறாக இருந்தால்—தெளிவாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறபடி—அது நிச்சயமாக ஒழுக்கப்பிரகாரமாகவும் தவறாக இருக்கவேண்டும்; ஏனென்றால், ‘எதுவெல்லாம் உடலை சீரழிக்கிறதோ அல்லது உறுத்துகிறதோ, அதன்விளைவாக நரம்புமண்டல அமைப்பையும் சீரழிக்கிறது; அதன்மூலமாக மூளையையும் அதன் விளைவாக மனதையும் சீரழிக்கிறது,’ என்பது உடலியக்கம் சார்பான சட்டமாக இருக்கிறது. ஒரு மனிதனின் மனது—அவனுடைய எண்ணங்கள், அவனுடைய உணர்ச்சி வெளிப்பாடுகள், அவனுடைய செயல்கள், ஆகியவை அவன் தன்னுடைய உடல் இயல்பை பிரயோகிப்பதை அல்லது துர்ப்பிரயோகிப்பதைச் சார்ந்து இருக்கிறது. புகையிலை என்பது, தன்னுடைய பெயரில்தானேயும் அதோடு தொடர்புடையவற்றிலும், அருவருப்பானது; அப்படியிருக்க—அது செய்யும் கேடுகளைக் கவனிக்காவிட்டாலும்கூட—எப்படி சுத்தமான, தூய்மையான, நியாயமான, ஒழுக்க உணர்ச்சிகளும் செயல்களும் தோன்ற அல்லது மனதில் வளர்க்கப்பட முடியும். கிறிஸ்து, பூமியில் ஒரு சிறந்த முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்கையில்—தூய்மை, கற்பு, அன்பு மற்றும் உதவிசெய்தலைப்பற்றி பிரசங்கித்தும் போதித்துக்கொண்டும்—புகைத்து, உறிஞ்சுகொண்டு, மென்றுகொண்டு இருந்ததாக—அப்படி ஒரு காரியத்தை எண்ணிப்பார்க்க முடியுமானால்—எண்ணிப்பாருங்கள். அப்படிப்பட்ட ஓர் எண்ணம்தானே மதிப்பைக்குலைப்பதாய் இருக்கிறதல்லவா? இருந்தபோதிலும் ஊழியர்கள்—அவருடைய சட்டத்தையும் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்கள், பிரசங்கிப்பவர்கள், விளக்குபவர்கள்—இந்த அருவருப்பான விஷ களையால் தங்கள் உடல்களை அழுக்காக்கி, தங்கள் ஆத்துமாக்களைக் கறைப்படுத்துகின்றனர். அத்தகைய ஆட்கள் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்கள், கிறிஸ்துவைப்போன்ற—உயர்ந்த, ஒழுக்கமுடைய வாழ்க்கைகளை—நடத்தமுடியுமா? முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
“ஒரு பெருந்தீனிக்காரனை, ஒரு களிமகனை, அல்லது ஒரு புகையிலை உபயோகிப்பவனை, இருதயத்தின் பரிசுத்தத்தோடு தொடர்புபடுத்தி உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? அவ்விதமான கருத்துத் தொடர்பில் இயற்கைக்கு மாறான, திடுக்கிடச்செய்யும், வெறுப்பூட்டும் ஏதோவொன்று இருக்கிறது. உடல் சம்பந்தமான விருப்பங்களும் வெளிப்படையான உணர்ச்சிகளும் சீரழிகிறதுபோலவே, உள்ளான மனிதனும், ஒழுக்க இயல்பும் கீழ்த்தரமாகிவிடுகிறது. சுத்தமான ஆவி ஓர் அருவருப்பான வீட்டில் தங்காது, தங்கவும் முடியாது. ஒன்றின் பண்புகள் மற்றொன்றின் இயல்பைக் குறிப்பிடும் அளவிற்கு, உடல்சம்பந்தமான காரியங்களுக்கும் ஆவிக்குரியவற்றிற்கும் இடையில் ஓர் இயற்கையான தொடர்பு இருக்கிறது. மதத்தின் பேராசிரியரும் புகையிலையின் அடிமையுமான ஒருவர் . . . புகையிலையை உபயோகித்தல் நாசகரமான ஒரு பழக்கம் என்று அவர் எல்லா நேர்மையோடும் உண்மையோடும் ஒத்துக்கொள்ளக்கூடும்; இருந்தாலும், இந்தப் பழக்கத்தைத் தொடரும்படி மனநிறைவு செய்யமுடியாத விருப்பங்களால் தூண்டும் செயற்கையாக உற்பத்திசெய்யப்படும் ஓர் உந்துவிப்பு, தன்னுடைய அவயவங்களில் இருக்கும் பாவப்பிரமாணம் தனக்குள் இருப்பதைக் காண்கிறான்; இந்தச் செயற்கை சட்டம், அவனுடைய இயற்கையான பகுத்தறிவு மற்றும் மனச்சாட்சியும் சேர்ந்து செயல்படுவதைவிடவும் பலமானதாக இருக்கக்கூடும். புகையிலை உபயோகம், நம்முடைய உடலமைப்பில் பதித்து வைக்கப்பட்டுள்ள கடவுளுடைய சட்டங்களில் ஒன்றின் எளிதில் புலப்படும் சட்டமீறுதலாக இல்லையா? கடவுளுடைய சட்டங்களில் ஒன்றின் வரம்பைக் கடத்தல், மீறுதல் அல்லது பாவம் இல்லையா? மேலும், ஒருவன் பழக்கமாக கடவுளுடைய சட்டத்தில் ஒன்றை மீறி வாழ்ந்து வந்தால், மற்ற சட்டங்களை மீறும்படியாக மாறுவது எளிதாகவும் இயல்பானதாகவும் இருக்கும் அல்லவா? மேலும் கடைசியாக, தன்னுடைய சொந்த நடத்தையில், தன் சொந்த உடல்சார்ந்த சட்டங்களைக்குறித்ததில், தொடர்ச்சியான சட்டமீறுதல்களைப் பரிந்துரை செய்யும் ஒருவர் எவ்வாறு ஓர் ஒழுக்க போதகராகக் கருதப்பட முடியும்?”