நிறைவேற்றமடைந்துவரும் தீர்க்கதரிசனம்
கிறிஸ்து இயேசு ராஜ்ய வல்லமையில் காணக்கூடாத விதத்தில் வந்திருப்பதற்கான அடையாளத்தை பற்றி அவருடைய சீஷர்கள் அவரைக் கேட்டபோது, “அக்கிரமம் மிகுதியா”கும் என்று இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:3, 12) இத்தீர்க்கதரிசனம் நம்முடைய நாளில் நிறைவேற்றமடைந்து வருகிறதா?
உண்மையிலேயே அது நிறைவேற்றமடைந்து வருகிறது! அக்டோபர் 1991-ல் ஐ. நா. பிரசுரித்த தி யுனைட்டெட் நேஷன்ஸ் அன்ட் கிரைம் ப்ரிவென்ஷன் என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “வினைமையான குற்றச்செயல் உலகின் பெரும்பான்மையான தேசங்களுக்கு இயல்புமீறிய கடும் பிரச்னையாக உள்ளது. உள்நாட்டுக் குற்றச்செயல் பெரும்பாலான தனிப்பட்ட தேசங்களின் கட்டுப்பாட்டை மீறியிருக்கிறது. தேசீய எல்லைகளைத் தாண்டி செய்யப்படும் குற்றச்செயல், தற்போதைய சர்வதேச சமுதாயத்தின் திறமைக்கு மேல் அதிகரித்திருக்கிறது . . . குற்றவாளி கும்பல் ஏற்பாடு செய்து செயல்படுத்தும் குற்றச்செயல் அச்சந்தரும் அளவுக்கு பெருகியிருக்கிறது. குறிப்பாக அவை சரீர சம்பந்தமான வன்முறை, அச்சுறுத்தல்கள், பொது அலுவலர்களின் ஊழல் போன்ற வினைமையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பயங்கரவாதம் பத்தாயிரக்கணக்கான குற்றமற்ற ஆட்களின் உயிரை இழக்கச் செய்திருக்கிறது. போதை தரும் மயக்கமருந்துகளை வியாபாரம் செய்து கொள்ளையடிப்பது, உலகமுழுவதும் பெரும் சேதம் தரும் காரியமாக ஆகியிருக்கிறது. குற்றதண்டனைக்குரிய விதத்தில் கவனமின்றி சுற்றுச்சூழலை அழிப்பது, அச்சம்தரும் வடிவங்களையும் மிகப்பெரிதான அளவுகளையும் எடுத்துக்கொண்டிருப்பதால், உலகத்துக்கே எதிரான குற்றச்செயல் என்று அது கருதப்படுகிறது.”
தாக்குதல்கள்: 1,00,000 ஜனங்களுக்கு 150 தாக்குதல்கள் என்று 1970-ல் இருந்த எண்ணிக்கை, 1,00,000 ஜனங்களுக்கு ஏறக்குறைய 400 தாக்குதல்கள் என 1990-ல் அதிகரித்தது.
களவு: 1,00,000 ஜனங்களுக்கு 1,000 என்று 1970-ல் இருந்த எண்ணிக்கை, 1,00,000 ஜனங்களுக்கு 3,500 என 1990-ல் அதிகரித்தது.
வேண்டுமென்றே செய்யப்பட்ட மனிதக் கொலைகள்: வளர்ந்து வரும் நாடுகளில் 1975-லிருந்து 1985 வரை 1,00,000 ஜனங்களுக்கு 1-லிருந்து 2.5 என அதிகரித்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அதே காலப்பகுதியில் 3-க்கும் குறைவாக இருந்த எண்ணிக்கை 3.5 என அதிகரித்தது.
போதைபொருள்-சம்பந்தமான குற்றச்செயல்: அப்புத்தகம் கூறுவதாவது: “போதை மருந்து கடத்தும் பெரிய கும்பல்கள் பண பலத்திலும், தாக்கி அடிக்கும் திறனிலும் சிறு தேசங்களின் அரசாங்கங்களை விட மிஞ்சியவர்களாகவும், தொழில் வளமிக்க தேசங்களின் கட்டுப்பாடுகளையும் சட்டப்பூர்வ முயற்சிகளையும் இதுவரை தடுத்து தப்பித்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருந்து வருகின்றனர்.”
மொத்தமாக குற்றச்செயல் வீதம்: 1,00,000 ஜனங்களுக்கு 4,000 என்று 1985-ல் இருந்தது, 2000 வருடத்தில் 8,000 என்று இருமடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகமுழுவதிலும் குற்றச்செயல் அதிகரித்திருப்பது, “காரிய ஒழுங்குமுறையின் முடிவில்” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் குறிக்கும் இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் ஓர் அம்சமாய் இருக்கிறது. (மத்தேயு 24:3, NW) “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்,” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 21:31. (w92 10/15)