‘வானங்கள் அறிவிக்கிறது . . . ’
நீங்கள் இப்பொழுது இருக்கின்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சூரியன் ஆகாயத்தில் அனல்கக்கும் பிரகாசத்தோடு ஒளிவீசுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு கடவுளாக வழிபட்டுவரும் நம்முடைய மகத்தான விண்ணுலக அண்டைவீடு, அதன் சிருஷ்டிகராகிய “வானத்தையும் பூமியையும் படைத்த”வரின் வல்லமைக்குச் சான்றாக இருக்கிறது. (சங்கீதம் 115:15) அதன் ஒளியும் வெப்பமும் பூமியின் மீது உயிர்வாழ இன்றியமையாததாகும். அதைப் பற்றி விஞ்ஞானிகள் கற்றுக்கொண்டிருக்கும் உண்மைகள் நம்மை ஆச்சரியத்தால் நிரப்புகின்றன.
சூரியன் மிகப் பெரிய அளவில் ஆற்றலை உற்பத்தி செய்கிறது என்பதாக நாம் சொல்லப்படுகிறோம். அது உற்பத்தி செய்வதில் 50 கோடியில் ஒன்றுக்கும் குறைவான வெப்பமும் ஒளியும் பூமியினால் வழியில் தடுத்து நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இருந்தபோதிலும் அந்தச் சிறுபின்னம் பிரமாண்டாமான 2,40,00,000,00,00,000 குதிரைத்திறனுக்குச் சரியாக இருக்கிறது!
அந்த எல்லா ஆற்றலையும் சூரியன் எவ்வாறு உண்டுபண்ணுகிறது? ஒவ்வொரு விநாடியும் சுமார் 3.6 மில்லியன் மெட்ரிக் டன் நீரகத்தைப் பயன்படுத்தி அதன் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய அணுவுலைக்களம் ஆற்றலை உற்பத்திசெய்கிறது. இந்தச் செயல்முறை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் போய்க் கொண்டிருப்பதற்குச் சூரியனில் போதுமான எரிபொருள் இருப்பது மனிதவர்க்கத்துக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் சில காரியங்கள் மேலுமான கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக, சம்மட்டிக் கொண்டு அடிக்கப்படும் ஓர் உலோக தகட்டைப் போல, சூரியன் இடைவிடாமல் அதிர்ந்துகொண்டிருக்கிறது. ஏன்? இதையும்கூட சிந்தித்துப் பாருங்கள்: சூரியனின் மையத்தில் கொழுந்துவிட்டெறியும் பகுதி அதின் உஷ்ணமான பகுதியாகவும் மையப் பகுதியிலிருந்து மிகுந்த தொலைவிலிருக்கும் அடுக்குகள் குளிர்ச்சியாகவும் உள்ளன. ஆனால் சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான வில்ஒளிவட்டத்துக்கு வரும்போது அது மாறிவிடுகிறது. வில்ஒளிவட்டம், எரிந்துகொண்டிருக்கும் மையப்பகுதிக்கு அருகிலுள்ள அடுக்குகளைவிட அதிக உஷ்ணமாக இருக்கிறது. ஏன்?
மேலுமாக, பூமியைப் போலவே சூரியன் சுழலும்போது, வித்தியாசமான பகுதிகள் வித்தியாசமான வேகங்களில் சுழல்கின்றன. உதாரணமாக மேற்பரப்பு உள்ளடுக்குகளைக் காட்டிலும் வேகமாக சுழல்கின்றது. அது எவ்வாறு சாத்தியமாகிறது? பின்னர் கரும்புள்ளிகள் இருக்கின்றன. சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் இந்தக் கறைகள் 11 வருட காலப்பகுதியைக் கொண்ட ஒழுங்கான சுழற்சிகளில் தோன்றி மறைகின்றன. அவை ஏன் இப்படி ஓர் ஒழுங்கான முறையில் மாறுகின்றன?
சூரியனைப் பற்றி கற்றுக்கொள்ள இன்னும் மிக அதிகம் இருந்தபோதிலும், நமக்கு ஏற்கெனவே தெரிந்த காரியங்கள் அதன் சிருஷ்டிகராகிய யெகோவாவை வியப்போடு நோக்கும்படி நம்மைச் செய்விக்கிறது. நாம் சூரியனைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமும், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது,” என்பது நமக்கு நினைப்பூட்டப்படுகிறது.—சங்கீதம் 19:1.