மெய்யான சுவிசேஷகனுடைய அறுவடை
வில்லியம் R. ப்ரெளண் முதன்முதலில் ஆப்பிரிக்காவுக்கு 1923-ல் சென்றார். தன்னுடைய மனைவியோடும் பிள்ளையோடும்கூட, அவர் காம்பியா, கானா, லைபீரியா, நைஜீரியா மற்றும் சயரா லியோனில் ‘சுவிசேஷகனுடைய வேலையைச் செய்’தார். (2 தீமோத்தேயு 4:5) அவருடைய வேலையின் பலன் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
மேற்கு இந்தியவாசியாகிய இவர் கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகள் ஒன்றில் அங்கத்தினராக இல்லை, இவர் நிச்சயமாகவே அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. மாறாக, யெகோவாவின் பெயரையும் அரசுரிமையையும் அறிவிப்பதன் மூலம், இயேசுவையும் அவருடைய அப்போஸ்தலர்களையும் பின்பற்றினார். மீட்கும்பொருளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார். (மத்தேயு 9:35; 20:28; யோவான் 17:4-6) வில்லியம் R. ப்ரெளண் எப்பொழுதும் பைபிளை உபயோகித்து கோட்பாடு மற்றும் விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களின்பேரில் இறுதியான அதிகாரம் உடையதாக அதை சுட்டிக்காட்டினார். (2 தீமோத்தேயு 3:16) இதை அவர் அவ்வளவு வற்புறுத்தியபடியால் அவர் பைபிள் ப்ரெளண் என்று அறியப்பட்டார்.
யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு, பைபிள் ப்ரெளண் விதைத்த விதைகள் தளிர்த்து வளர்ந்தன. இன்று, அவர் வழிகாட்டிச்சென்ற தேசங்களில், ஏறக்குறைய 2,00,000 ஆப்பிரிக்கர்கள் தங்கள் சிருஷ்டிகருக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, இன்னும் மற்றவர்களுக்கு ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்துவருகிறார்கள். (மத்தேயு 24:14; 1 கொரிந்தியர் 3:6-9) இந்தச் சுறுசுறுப்புள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுடைய நேர்மைக்கும் நம்பத்தக்கத்தன்மைக்கும் எல்லா இடங்களிலும் பேர்போனவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவுக்கு சாட்சிகளாகவும் ஆளுகைசெய்துகொண்டிருக்கும் ராஜாவாகிய கிறிஸ்துவின் பிரஜைகளாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறார்கள்.
இத்தகைய ஓர் அறுவடை, மெய் கிறிஸ்தவ சுவிசேஷ ஊழியத்தின் பலனாகும். இதேப் போன்ற ஓர் அறுவடை குடியிருக்கப்பட்ட ஒவ்வொரு கண்டத்திலும் உலகம் முழுவதிலும் அறுக்கப்பட்டுவருகிறது. 200-க்கும் மேற்பட்ட தேசங்களில், நாற்பது லட்சத்துக்கும் அதிகமான சாந்தஇருதயமுள்ள ஆண்களும் பெண்களும் “அறுவடை” செய்யப்பட்டிருக்கிறார்கள், இவர்கள் சுவிசேஷ வேலைசெய்யும் தேவதூதனின் வார்த்தைகளை மற்றவர்களுக்குத் திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள்: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புகொடுக்கும் வேளை வந்தது.” (வெளிப்படுத்துதல் 14:7) உண்மையில், கடவுளிடமாகத் திரும்பி அவருடைய ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படுத்துவதே தொல்லைகள் நிறைந்த நம்முடைய காலத்தில் நம்பிக்கையை கண்டடைய ஒரே வழியாகும். (w92 9/1)