கிறிஸ்தவமண்டலமும் அடிமை வியாபாரமும்
கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் 19-ம் நூற்றாண்டின்போது அடிமை வியாபாரத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்டிருந்தனர். எனினும், அது எப்போதும் அவர்களுடைய நிலைநிற்கையாயிருந்ததில்லை. அடிமை வியாபாரம் கொடிய துன்பங்களை உண்டுபண்ணியிருந்தபோதிலும், அதற்கு முற்பட்ட நூற்றாண்டுகளில், அவர்கள் அதை அங்கீகரித்து அதிலே பங்குகொண்டிருந்திருக்கின்றனர்.
நன்னம்பிக்கை முனையைச்சுற்றி கடல் வாணிபவழி 15-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டப்பின் மிஷனரிகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைக்கு வர ஆரம்பித்தனர். எனினும், மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் மிஷனரி வேலை பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டிருந்தது. ஆப்பிரிக்காவில் மதமாற்றப்பட்டவர்கள் வெகுசிலரேயிருந்தனர். இந்தத் தோல்விக்கு ஒரு காரணம், அடிமை வியாபாரத்தில் கிறிஸ்தவமண்டலத்திற்கிருந்த ஈடுபாடாகும். தி ப்ளாண்டிங் ஆஃப் கிறிஸ்டியானிடி இன் ஆப்பிரிக்கா என்ற ஆங்கில புத்தகத்தில் C. P. க்ரூவ்ஸ் விவரிக்கிறார்:
“கிறிஸ்தவ சமயப்பரப்புக்குழுவை அடிமை வியாபாரத்தில் மும்முர ஈடுபாடு, பின்தொடர்ந்தது. இது தவறெனக் கருதப்படவில்லை. உண்மையிலேயே, இந்தக் கிறிஸ்தவ சமயப்பரப்புக்குழு தங்களுடைய சொந்த அடிமைகளைக்கொண்டிருந்தது; லுவாண்டாவிலுள்ள [லுவாண்டா இப்பொழுது அங்கோலாவின் தலைநகரம்] இயேசுநாதர் சங்கத்தின் ஒரு மடத்திற்கு 12,000 அடிமைகள் வழங்கப்பட்டனர். அங்கோலாவிற்கும் பிரேஸிலுக்குமிடையே அடிமை வியாபாரம் வளர்ந்தபோது, லுவாண்டாவின் பிஷப், கடற்கரையோரம் கல்லிலாலான ஒரு நாற்காலியிலிருந்துகொண்டு, புறப்படவிருக்கும் கப்பலிலிருந்த அடிமைகளுக்கு, புயல்போன்ற தங்கள் வாழ்க்கையின் சோதனைகள் முடிவடைந்தபின் வரும் எதிர்கால நலனை உறுதியளித்து, தனது மேற்றிராணிய ஆசீர்வாதத்தை வழங்கினார்.”
இயேசுநாதர் சங்க மிஷனரிகள் “நீக்ரோ அடிமை வியாபாரத்திற்கெதிராக” எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என ஆப்பிரிக்கா ஃப்ரம் இயர்லி டைம்ஸ் டு 1800 என்ற ஆங்கில புத்தகத்தில் C. R. பாக்ஸர் உறுதிப்படுத்துகிறார். லுவாண்டாவில், ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீசிய குடியேற்றங்களுக்குக் கொண்டுபோகப்படும் அடிமைகள் கப்பலில் ஏறுவதற்குமுன், “அவர்கள் அருகிலுள்ள சர்ச்சுக்கு கொண்டுசெல்லப்பட்டு . . . அங்கு ஒரு சமயத்தில் நூறு நூறு பேராக ஒரு பங்கு குருவினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டனர்,” என்று பாக்ஸர் மேலுமாக கூறுகிறார். பிறகு, “பரிசுத்தத் தண்ணீர்” தெளிக்கப்பட்டப்பின் அடிமைகள் இவ்வாறு சொல்லப்பட்டனர்: “இதோ நீங்கள் ஏற்கனவே கடவுளின் பிள்ளைகளாயிருக்கிறீர்கள்; ஸ்பானியரின் தேசத்திற்கு நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள், அங்கே விசுவாசத்தின் காரியங்களைக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதைப்பற்றி இனியும் நினையாதீர்கள் . . . நட்பெண்ணத்தோடே போங்கள்.”
சந்தேகமின்றி, அடிமை வியாபாரத்தை அங்கீகரித்தது கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் மட்டுமல்ல. “பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி பாதிவரை இது உலகத்தின் பொது போக்காக இருந்தது,” என்று மிஷனரிகள் (The Missionaries) என்ற புத்தகத்தில் ஜஃப்ரி மூர்ஹவுஸ் விளக்குகிறார். நீக்ரோ அடிமைகளுக்கான ஆப்பிரிக்க வியாபாரம் மனித இயல்பின் நியமங்களோடும் வெளிப்படுத்தப்பட்ட மதத்தின் சட்டங்களோடும் ஒத்திருப்பது காண்பிக்கப்பட்டிருக்கிறது (The African Trade for Negro Slaves Shown to Be Consistent With the Principles of Humanity and With the Laws of Revealed Religion) என்ற தலைப்பைக்கொண்ட துண்டுப்பிரதியை எழுதிய தாமஸ் தாம்ப்ஸன் என்ற ஒரு 18-ம் நூற்றாண்டு புராட்டஸ்டன்ட் மிஷனரியின் உதாரணத்தை மூர்ஹவுஸ் சுட்டிக்காட்டினார்.
எனினும், லட்சக்கணக்கான ஆப்பிரிக்க அடிமைகள்மீது சுமத்தப்பட்ட கடுந்துயரத்துக்கான பொறுப்பை அவளுடைய பங்கேற்பினால் கிறிஸ்தவமண்டலம் ஏற்கிறது. “ஆப்பிரிக்காவிலிருந்து கடற்பயணம் மேற்கொள்வதற்கு முன்பே இறந்துபோன அடிமைகளைச் சேர்க்காமல், 12 1/2% மேற்கு இந்தியத் தீவுகளுக்கு போகிற பிரயாணத்தின்போது இழக்கப்பட்டனர்; ஜமைக்காவில் துறைமுகத்திலிருந்தபோதோ அல்லது விற்பனைக்கு முன்போ 4 1/2% இறந்தனர், மற்றும் அடிமைகளாக ‘பக்குவப்படுத்த’ப்படும்போது மூன்றிலொன்றுக்கும் அதிகமானோர் இறந்தனர்,” என்பதாக தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.
அவர்கள் அனுமதித்து, ஆசீர்வதித்தும்கூடவந்த கொடுமையான செயல்களின் இரத்தப்பழிக்காக கிறிஸ்தவமண்டலத்தையும் மற்ற எல்லா பொய்மத அமைப்புகளையும் விரைவில் யெகோவா தேவன் கணக்குக் கேட்பார்.—வெளிப்படுத்துதல் 18:8, 24.
[பக்கம் 8-ன் படம்]
அடிமைக் கப்பலில் அடிமைகளை அடைத்துவைத்த முறையின் வரைபடம்
[படத்திற்கான நன்றி]
Schomburg Center for Research in Black Culture / The New York Public Library / Astor, Lenox and Tilden Foundations