கடவுளைத் தேடுவதற்குரிய காலம்
இந்தப் பக்கத்திலுள்ள படம், ஆதன்ஸ் நகரின் உள்ளரணாகும். இது ஒருசமயம் அநேக தேவர்கள் மற்றும் தேவதைகளின் வணக்கத்துக்குரிய மையமாக இருந்தது. உள்ளரணுக்குக் கீழே இருப்பது மார்ஸ் மேடையாகும். இது பண்டையக் காலங்களில் நீதிமன்றம் இருந்த இடம் என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில்தானே, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போஸ்தலனாகிய பவுல் நின்று உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக இருந்த ஒரு பேச்சைக் கொடுத்தார். அவர் சொன்னவற்றில் சில பின்வருமாறு:
“மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”—அப்போஸ்தலர் 17:26-28.
பொதுவில் மனிதவர்க்கம் பவுலின் வார்த்தைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தால் சரித்திரம் எத்தனை வித்தியாசமாக இருந்திருக்கும்! மனிதர்கள் கர்த்தராகிய ஆண்டவர் யெகோவா சிருஷ்டித்த ஒரே மனிதனின் சந்ததியாக தங்கள் பொதுவான அக்கறையை மதித்துணர்ந்திருந்தால் எத்தனை போர்கள், எத்தனை வேதனைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
இன்று, மனிதவர்க்கம் தேசீயம், வகுப்பு வேறுபாடுகள், இன பகைமைகள், சமுதாய நேர்மையின்மைகள் ஆகியவற்றால் பிளவுற்றிருக்கிறது. என்றபோதிலும், பவுலின் வார்த்தைகள் இன்னும் பொருந்துகின்றது. நாம் அனைவருமே கடவுள் படைத்த அந்த ஒரே மனிதனின் சந்ததியாக இருக்கிறோம். நாம் அனைவருமே, இந்தக் கருத்தில், சகோதர சகோதரிகளாக இருக்கிறோம். மேலும் கடவுளைக் கண்டுபிடிக்க முடிகையில் அவரைத் தேடுவது இன்னும் மிகவும் பிந்திவிடவில்லை.
பவுலுடைய பேச்சின் கடைசி வார்த்தைகளை நாம் சிந்தித்துப்பார்க்கையில் அவருடைய வார்த்தைகள் இன்னும் அதிகமாக கருத்தூன்றி கவனிக்கப்படத்தக்கவையாக ஆகின்றன. அவர் சொன்னார்: “ஒரு நாளைக் [கடவுள்] குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதன் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”
இயேசுவின் உயிர்த்தெழுதல் சரித்திரப்பூர்வமான உண்மையாகும், பவுல் காண்பிக்கிறவண்ணமாகவே, மனிதவர்க்கத்துக்கு ஒரு நியாயத்தீர்ப்பு நாள் இருக்கும் என்பதற்கு அது உத்தரவாதமாக இருக்கிறது. எப்போது? ஆம், பவுல் மார்ஸ் மேடையில் நின்று இந்த வார்த்தைகளை பேசியபோது இருந்ததைவிட இப்போது ஏறக்குறைய 2,000 வருடங்கள் அருகாமையில் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையாக, பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றம் அது வெகு சமீபத்தில் இருப்பதைக் காண்பிக்கிறது. என்னே ஓர் அமைதியான எண்ணம்! பவுல் அத்தேனே பட்டணத்தாரிடம், “இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்,” என்று சொன்னதுபோல, நாம் உண்மையுடன் கடவுளைத் தேடுவது எவ்வளவு அவசரமானது!—அப்போஸ்தலர் 17:30, 31. (w92 7/1)