கிபியோனியர்—அவர்கள் சமாதானத்தை நாடினார்கள்
மேலே இருக்கும் மலைஉச்சிப் பட்டணம் எருசலேமுக்கு வடக்கே சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் பூர்வ கிபியோன் இருந்த இடமாக கருதப்படுகிறது.
யோசுவா இஸ்ரவேலை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்திச் சென்று எரிகோவை தோற்கடித்த பின்பு கிபியோன் முக்கியத்துவம் பெற்றது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். கிபியோனின் கானானியர்கள் வெளிப்படையாக தெய்வீக ஆதரவைக் கொண்டிருந்த இஸ்ரவேலை எதிர்த்து நிற்க இயலாது என்பதை உணர்ந்தனர். என்ன செய்வது? தந்திரமாக உபாயம் செய்து கிபியோனியர் தூர தேசத்திலிருந்து வந்த பிரயாணிகள் போல பாவனைச் செய்த பிரதிநிதிகளை அனுப்பினர். சமாதானத்தின் பொருட்டு செய்யப்பட்ட இந்த முயற்சி வெற்றிபெற்றது, ஏனென்றால் இஸ்ரவேலர் அவர்களோடு ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டனர். அவர்களுடைய சூழ்ச்சி தெரிவந்த போது, கிபியோனியர் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் ஆனார்கள்.
சமாதானத்தை நாடிய இந்த மக்களோடு கடவுள் சினமடைந்திருக்க மாட்டார். கிபியோனியரை ஐந்து ராஜாக்கள் வந்து தாக்கிய போது யோசுவா செய்த தற்காப்பு போரை அவர் ஆதரித்தார். அந்த யுத்தத்துக்காக பகல்வெளிச்சம் நீடித்திருக்கும்படி அவர் அற்புதத்தையும்கூட நடப்பித்தார்.—யோசுவா 9:3-27; 10:1-14.
நில அகழ்வாய்வாளர்கள் இந்த மண்மேட்டில் உறுதியான பாறையாக வெட்டப்பட்ட ஓர் ஆழமான குழி அல்லது சிறுகுளத்தைக் கண்டனர். கிபியோன் குடிகள் படிகட்டுகள் வழியாக இதற்குள் இறங்கி நிலத்துக்கு அடியிலுள்ள அறையிலிருந்து தண்ணீர் பெற்றுக்கொள்ள முடியும். இது 2 சாமுவேல் 2:13-ல் குறிப்பிடப்பட்ட “கிபியோனின் குள”மாக இருக்கக்கூடுமா? புதைப்பொருள் ஆய்வாளர்கள் பாறைகளாக வெட்டப்பட்ட நிலவறைகளையும் திராட்சரசம் செய்யும் கருவிகளையும் கண்டெடுத்திருக்கின்றனர். ஆம், கிபியோன் திராட்சரசம் செய்வதற்கு ஒரு மையமாக இருந்ததாகத் தெரிகிறது.
தாவீதின் காலத்தில் மெய்க்கடவுளின் கூடாரம் அல்லது வாசஸ்தலம் இங்கே இடம் பெற்றிருந்தது. சாலொமோன் ராஜா பலிகளைச் செலுத்த இங்கு வந்தார். யெகோவா சாலொமோனுக்கு ஒரு சொப்பனத்திலே தோன்றி அவருக்கு “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை”யும் ஐசுவரியத்தையும்கூட கொடுப்பதாக வாக்களித்தார். (1 இராஜாக்கள் 3:4-14; 2 நாளாகமம் 1:3) இந்தப் பிரதியில் பக்கங்கள் 12-17-லுள்ள கட்டுரை, இங்கே கிபியோனில் தங்கியிருந்த மக்களின் சந்ததியார் பிற்காலங்களில் கடவுளுடைய ஜனத்தின் மத்தியில் விசேஷித்த சிலாக்கியம் பெற்றவர்களாக இருந்தனர் என்பதைக் காண்பிக்கிறது. எவ்விதமாக என்று உங்களுக்குத் தெரியுமா?