கடவுளின் பெயர் பழைய இடத்தில் திரும்ப வைக்கப்படுகிறது
“யூதர்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களுக்கும்கூட கடவுளாக இருக்கும் ‘JHWH’ என்ற கடவுளின் பெயரை தொடக்கத்தில் ஓவியர் வைத்திருந்த அதே இடத்தில் திரும்பவும் வைப்பதற்கு சுமார் 60 ஆண்டுகள் எடுத்திருக்கின்றன.” இப்படித்தான் தெற்கு ஜெர்மனியில் ஹோர்ப்பிலுள்ள நகர மன்ற கட்டிட முகப்பில் கடவுளுடைய பெயர் பழைய இடத்தில் திரும்ப வைக்கப்பட்டது குறித்து ஜெர்மன் செய்தித்தாள் ஷுவாட்ஸ்வெல்டர் போட்டி குறிப்பிடுகிறது. ஆனால் பெயர் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?
நகர மன்றத்தின் வெளிப்புறம் கட்டிட முகப்பை அலங்கரிக்கும் படக்காட்சிகளால் அலங்காரமாக ஓவியந்தீட்டப்பட்டிருந்தது என்று செய்தித்தாள் அறிவிப்பு செய்கிறது. இதில் கடவுளின் பெயரை உச்சரிக்கும் நான்கு எபிரெய எழுத்துக்களான, திருநான்கெழுத்தும் இடம் பெற்றிருந்தது.
“6,000-க்கும் மேற்பட்ட தடவைகள் பைபிளில் தோன்றும் இந்தப் பெயர் ‘ஜெகோவா’ அல்லது ஜெர்மன் மொழியில் இதை ஒத்த ஒரு பெயராகும்” என்று செய்தித்தாள் தொடர்ந்து சொல்கிறது. “சரியான உச்சரிப்பு தெளிவாக இல்லை, ஏனென்றால் எழுத்து உருவான எபிரெயுவில் மெய்யெழுத்துக்கள் மட்டுமே இருந்தன. உயிரெழுத்து வாசகரால் சேர்க்கப்பட்டன.”
என்றபோதிலும், 1934-ல் நாசி கட்சி பிரதிநிதிகள் திருநான்கெழுத்து, “தற்போதைய கருத்துப் பாங்குக்கு ஏற்றதாக இல்லை” என்றும் அதன் மீது வர்ணம் பூசிவிட வேண்டும் என்றும் தீர்மானித்தனர். சந்தோஷகரமாக திருநான்கெழுத்து இப்பொழுது அதன் பழைய இடத்தில் திரும்ப வைக்கப்பட்டுவிட்டது. செய்தித்தாள் குறிப்பிடுகிறது: “இன்று சரித்திர காட்சிகளாலும், பெருமகனாரின் குடும்ப மரபு சின்னங்களாலும், உருவப்படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள [நகர மன்ற] முகப்பு ஹோர்ப்பில் பார்க்க ‘வேண்டிய’ ஓரிடமாகும்.” (w92 2/15)