வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
எருசலேம்—பைபிள் சம்பவங்கள் நடைபெற்ற முக்கிய இடம்
பெரும்பாலான தேசங்கள், ஒரு தலைநகரத்தை, அரசாங்கத்தின் ஆசனத்துக்கு இடமாயிருக்கும் ஒரு முக்கிய நகரத்தைக் கொண்டிருக்கையில், பைபிள் மாணாக்கர்கள் எருசலேமை மனிதவர்க்கத்தின் தலைநகரமாக எண்ணிக்கொள்ளலாம். இது ஏனென்றால், அங்கு நடைபெற்ற பெருஞ் சிறப்பு வாய்ந்த சம்பவங்கள் நம் அனைவருக்குமே முக்கியமாக இருக்கின்றன.
மேலே, எருசலேமுக்குத் தெற்கே நீங்கள் மேடான ஓர் இடத்தில் நின்றால், இந்தக் காட்சியை நீங்கள் காணலாம்.a கரும் பச்சை நிற மரங்கள் திட்டாகத் தெரியும் இடத்தில் இரண்டு பள்ளத்தாக்குகள் சந்திக்கின்றன. வலதுபுறத்திலிருந்து கெதரோன் பள்ளத்தாக்கு கீழே வருகிறது; மேற்கே அல்லது இடதுபுறத்திலிருப்பது பைபிள் பெயராகிய கெஹன்னாவுக்கு காரணமாயிருந்த இன்னோம் பள்ளத்தாக்கு. (மத்தேயு 10:28; 23:33) இரண்டுக்குமிடையே தான் (இப்பொழுது காணப்படும் மதில்களுக்கு முன்னால் சூரிய ஒளியில் தெரிகிற திட்டு) பூர்வ தாவீதின் நகரம் கட்டப்பட்டிருந்தது. மதில்களுக்கு உள்ளே, வரலாற்றுப் புகழ்ப் பெற்ற இடத்தில் இரண்டு குறிப்பிடத்தக்க முகமதியக் கட்டடங்கள் இருக்கின்றன. மதிலுக்கு அருகாமையில் இருப்பது ஒரு மசூதியின் வெள்ளி–நீல மாடமாகும். அதற்குப் பின்னாலிருப்பது பாறை மாடத்தின் பெரிய தூபி மாடமாகும்.
ஆனால் ஏன் எருசலேம், குறிப்பாக இப்பொழுது இரண்டு குவிமாடமுள்ள கட்டடங்கள் நின்றுக்கொண்டிருக்கும் அந்தச் சமனான நிலப்பரப்பு உங்களுக்கு முக்கியத்துவமுடையதாக இருக்க வேண்டும்? சரி, புதரிலே சிக்கிக் கொண்ட ஓர் ஆட்டுக்கடாவைப் பற்றிய பைபிள் பதிவு உங்களுக்கு எதை நினைவுபடுத்துகிறது? ஒருவேளை ஆபிரகாமை நினைவுபடுத்தலாம். ஆம், நீங்கள் காணும் இரண்டு மாடங்களுள்ள பாறையான மேட்டுத்திடலில் அல்லது அதற்கு அருகாமையில் இருந்த மோரியா மலைக்கு அவன்தானே தன்னுடைய மகன் ஈசாக்கோடு பிரயாணப்பட்டுப் போனான். ஆபிரகாம் விசுவாசத்தில் தன்னுடைய பிரியமான மகனைப் பலி கொடுக்க மனமுள்ளவனாக இருந்தான், ஆனால் ஒரு தேவதூதன் அவன் கையை தடுத்துவிட்டான். பின்பு ஆபிரகாம் “புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக்” கண்டு “அதைத் தன் குமாரனுக்குப் பதிலாக தகனபலியிட்டான்.” ஆகவே எருசலேமை காண்பது, மனதில் பதியும் இந்தச் சம்பவத்தை மனதுக்குக் கொண்டுவரக்கூடும்.—ஆதியாகமம் 22:1–13.
இப்பொழுது குவிமாடமுள்ள கட்டடங்கள் இருக்கும் சமனான இடத்தில் சாலொமோன் யெகோவாவுக்கு மகத்தான ஓர் ஆலயத்தைக் கட்டினபோது மற்ற பலிகள் முன்னிலைக்கு வந்தன. (2 நாளாகமம் 3:1) தேசத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருடாந்தரப் பண்டிகைகளுக்காக தங்கள் மிருக பலிகளோடுக்கூட இஸ்ரவேலர் இவ்விடத்துக்கு வருவதைக் கற்பனைச் செய்ய முயற்சி செய்து பாருங்கள். இவைகளில் மிகவும் பவித்திரமானது பாவநிவாரண நாளாகும். அந்த நாளில், வெள்ளாட்டுக்கடா ஒன்று சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருவேளை கெதரோன் பள்ளத்தாக்குக்குக் கீழும், பின்னர் யூதேயா வனாந்தரத்துக்குள் தென்கிழக்கேயும் “போக்காடாக வனாந்தரத்திலே போகவிட”ப்பட்டது. மற்றொரு வெள்ளாட்டுக்கடாவும் காளையும் கொல்லப்பட்டு அவைகளின் இரத்தம் ஆசாரியர்களின் மற்றும் ஜனங்களின் பாவநிவிர்த்திக்காக பலி செலுத்துகையில் பயன்படுத்தப்பட்டது. கொஞ்சம் இரத்தம் திரைக்கு உட்புறமாக ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும்கூட கொண்டு செல்லப்பட்டது. ஆகவே அதை மனதில் கொண்டு நகரத்தின் படத்தை நீங்கள் பார்க்கலாம்.—லேவியராகமம் 16:1–34.
எருசலேமில் செலுத்தப்பட்ட இந்த எல்லாப் பலிகளும் இயேசு கிறிஸ்துவின் பரிபூரணமான பலியினிடமாக சுட்டிக் காண்பித்தது. பூமியில் அவருடைய கடைசி இரவின் போது, முழுநிலா காலமாக இருந்த அந்தச் சமயத்தில், இயேசு செல்லத்தக்கதாக இருந்த கடைசி பஸ்காவை கொண்டாடுவதற்காக தம்முடைய அப்போஸ்தலர்களோடு கூடிவந்தார். இது ஆலயப்பகுதிக்கு இடது பக்கமாக (மேற்கே) நகரத்தின் மேடான ஒரு பகுதியிலிருந்ததாகக் கருதப்படும் மேல் அறையில் செய்யப்பட்டது. இயேசு கர்த்தருடைய இராப் போஜனத்தை துவக்கி வைத்தப் பின்பு, ஆலயத்துக்குக் கிழக்கே (வலது பக்கத்தில்) கெதரோன் பள்ளத்தாக்குக்குக் குறுக்காக உள்ள ஒலிவ மலைக்கு அவர் அப்போஸ்தலர்களை அழைத்துச் சென்றார்.—லூக்கா 22:14–39.
இதை மனதில் கற்பனைச் செய்து பார்க்க உதவியாக, எருசலேமுக்குள்ளிருந்து கிழக்கு நோக்கிய திசையில், அநேகமாக இயேசு கர்த்தருடைய இராப் போஜனத்தை நடத்திய இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்க்கவும். இந்தக் கோணத்திலிருந்து நீங்கள் ஆலைய–மலைப் பகுதியில் மசூதியின் மாடத்தை (நிலா வெளிச்சத்தில் சற்றே நீலநிறமாக) கீழ் இடது பக்கத்தில் பார்க்கிறீர்கள். கிழக்கே மிக தொலைவில் (பார்வைக் கோட்டுக்குக் கீழே) கெதரோன் பள்ளத்தாக்கும் கெத்செமனே தோட்டத்தின் மரங்களும் இருக்கின்றன. மேலே வலது பக்கத்திலிருப்பது ஒலிவ மலையாகும்.
1990 ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதியும்கூட முழுநிலா காயும். அந்தச் சமயத்தில் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் (சூரிய மறைவுக்குப் பின்) இயேசுவினுடைய பலிக்குரிய மரணத்தை நினைவுகூரும் கர்த்தருடைய இராப் போஜனத்துக்காக கூடிவருவார்கள்.b தயவு செய்து அவர்களோடிருக்க திட்டமிடுங்கள். அந்தச் சமயத்தில், இயேசு தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றியதன் தொடர்பாக எருசலேமிலும் அதைச் சுற்றியும் நடந்த கடந்த கால சம்பவங்களில் சிலவற்றை நீங்கள் தியானம் செய்யவும்கூட விரும்பலாம். இவ்விதமாக இயேசு யெகோவாவின் நீதியை நிலைநாட்டி விசுவாசமுள்ள மனிதரை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக் கொண்டார்.—1 கொரிந்தியர் 11:23–26; எபிரெயர் 9:11–28. (w89 3⁄1)
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளுடைய 1989 நாட்காட்டி இந்தப் படத்தைப் பெரிய அளவில் கொண்டிருக்கிறது.
b கர்த்தருடைய இராப்போஜன கொண்டாட்ட சமயத்தைக் கணக்கிடுவதன் சம்பந்தமாக கூடுதலான விவரங்களுக்கு ஆங்கில காவற்கோபுரம், ஜுன் 15, 1977 பக்கம் 383 பார்க்கவும்.
[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
Pictorial Archive (Near Eastern History) Est.