மூன்று சாஸ்திரிகள்—உண்மையா அல்லது கற்பனையா?
“C + M + B”
இந்த எழுத்துகள் உங்களுக்கு எதையாவது அர்த்தப்படுத்துகிறதா? ஜெர்மன் கூட்டரசு குடியரசின் ரோமன் கத்தோலிக்க பிராந்தியத்திற்குள் நீங்கள் வாழ்ந்து வருவீர்களேயானால், அவை அவ்விதமாக இருக்கக்கூடும். அங்கே வாயிற்கதவின் மீது வருடத்தோடுகூட எழுத்துகள் சுண்ணக்கோலால் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் அநேகமாகக் காண்பீர்கள். ஏன் அப்படி?
இந்த எழுத்துகள் ஜெர்மானிய மொழியில் மூன்று சாஸ்திரிகள் அல்லது “ஞானிகள்” என்பதாக அழைக்கப்படுகிறவர்களின் முதலெழுத்தாக இருக்கிறது என்பது பிரபலமான பழங்கதையாகும். காஸ்பர் (ஜெர்மன், கேஸ்பர்), மல்கர் மற்றும் பால்தஸார்.a சாஸ்திரிகளின் எலும்புகள் 1164-ம் ஆண்டில் கால்னிக்கு இடம் மாற்றப்பட்டு பின்னால் நகரத்தின் கத்தீட்ரலில் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்விதமாக கால்னி அவைகளின் வணக்கத்துக்கு மையமானது. ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதியில்—மூன்று பரிசுத்த ராஜாக்களின் நினைவு விழா என்றழைக்கப்படும் நாளன்று—பூர்வீக ராஜாக்களைப் போல உடுத்திய இளைஞர்களின் குழு, வீட்டுக்கு வீடு சென்று வாயிற்கதவுகளில் இந்த எழுத்துகளை சுண்ணக்கோலால் எழுதுகின்ற வழக்கத்தின்படி, இது வீட்டுக்காரர்களுக்கு இன்னல்களிலிருந்து பாதுகாப்பை அளிக்கிறது.
மதசம்பந்தமான கலையும் பாரம்பரியமும், மூன்று சாஸ்திரிகள் அல்லது “ராஜாக்கள்” இயேசு பிறந்த இடத்துக்கு ஒரு “நட்சத்திரத்தால்” வழிநடத்தப்பட்டார்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது. இந்த “ராஜாக்களுக்கு” அளிக்கப்படும் கனம், பக்தியையும்கூட முன்னிட்டுப் பார்க்கையில், இந்த நம்பிக்கைக்கு வேதஆதாரமிருக்கிறதா என்ற கேள்வி எழும்புகிறது.
இந்தப் பார்வையாளர்களைக் குறித்து குறிப்பிடும் ஒரே சுவிசேஷம் மத்தேயு. (2:1–12) ஆனால் மத்தேயு இவர்கள் மூவர் என்றும் அவர்கள் ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டு, அவர்கள் பெயர்களைப் பதிவு செய்கிறானா? கத்தோலிக்க செய்தித்தாள் [Kirchenzeitung fur das Bistum Aachen] ஒப்புக்கொள்வதாவது: “மூன்று பரிசுத்த ராஜாக்கள் பைபிளில் அவ்விதமாக குறிப்பிடப்படுவதில்லை. ஆறாவது நூற்றாண்டிலிருந்து, ஞானிகள் . . . மூன்று ராஜாக்களாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள். . . . வானசாஸ்திரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், . . . மத்தேயு எந்த விவரத்தையும் கொடுப்பதில்லை. . . . ஒன்பதாவது நூற்றாண்டில் அவர்கள் முதல் முதலாக காஸ்பர், மல்கர் மற்றும் பால்தஸார் என்ற பெயர்களில் தோன்றினார்கள்.” மேலுமாக கத்தோலிக்க குறிப்புரை அகராதி [Lexikon fur Theologie und Kirche] கிரேக்க வார்த்தையாகிய மேகாய் ராஜாக்களை அல்ல, ஆனால், மாறாக “வானசாஸ்திரம் பற்றிய இரகசிய அறிவுடையவர்களை” அர்த்தப்படுத்துவதாக குறிப்பிடுகிறது. ஜஸ்டின் மார்டியர், ஆரிகென் மற்றும் டெட்ரூலியன் ஆகிய ஒவ்வொருவரும் வார்த்தை “வானசாஸ்திரி”யை அர்த்தப்படுத்துவதாக புரிந்துகொண்டனர். நவீன பைபிள் மொழிபெயர்ப்புகளும்கூட மத்தேயு 2:1, 7-ல் “வானசாஸ்திரிகளையே” அர்த்தப்படுத்துகின்றன.—தி லிவிங் பைபிள்; ஓர் அமெரிக்க மொழிபெயர்ப்பு.
குழந்தையாக இயேசுவின் பிறப்பு பற்றிய படங்களில் எப்போதும் “மூன்று ராஜாக்கள்” இடம்பெற்ற போதிலும், அவருடைய பிறப்பின் சமயத்தில் அவர்கள் இருந்தார்களா? அகராதி மேலும் கூறுவதாவது: “மத்தேயு 2:16 இயேசுவின் பிறப்புக்கு ஒன்று அல்லது இரண்டாண்டுகளுக்குப் பின் இவர்கள் வந்தார்கள் என்பதைக் காண்பிக்கிறது.” ஆம், வசனம் 11, அவர்கள் “சிறு குழந்தையைப் பார்த்தது” ஒரு தொழுவத்தில் அல்ல, ஒரு “வீட்டில்” என்றே பேகிறது.—கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு.b
“பரிசுத்த ராஜாக்கள்” என்ற பதத்தைப் பற்றி என்ன? பார்வையாளர்கள் சரியாகவே பரிசுத்தமானவர்கள் என்றழைக்கப்பட முடியுமா? வேதவசனங்கள் ஒருபோதும் அவர்களை அவ்விதமாக வருணிப்பதில்லை. அவர்கள் உண்மையில் தெய்வீக நியமத்தை மீறுகிறவர்களாக இருந்தனர். ஏசாயா 47:13, 14-ல் கடவுள், “ஜோசியரையும் நட்சத்திரம் பார்க்கிறவர்களையும்” கண்டனம் செய்கிறார். (உபாகமம் 18:10 ஒப்பிடவும்.) இந்த வானசாஸ்திரிகள், “கிழக்கிலிருந்து” பெரும்பாலும் அப்பொழுது மாயமந்திர வணக்கத்தின் மையமான, பொய் கடவுட்கள் வழிபாடு இருந்துவந்த பரிசுத்தமற்ற பாபிலோனிலிருந்து வந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் நகரும் “நட்சத்திரம்” என்பதாக தாங்கள் நினைத்துக்கொண்டிருந்த, வேறு எவரும் பார்த்ததாகச் சொல்லப்படாத ஒன்றினால் வழிநடத்தப்பட்டார்கள். மேலுமாக “நட்சத்திரம்” முதலாவதாக, இயேசுவை கொலை செய்ய வகைதேடிய ஏரோது ராஜாவினிடம் அவர்களை வழிநடத்தியதாக மத்தேயு காண்பிக்கிறான்.—மத்தேயு 2:1, 2.
இல்லை, இயேசுவிடமாக அவர்களை வழிநடத்த கடவுள் ஒரு “நட்சத்திரத்தை” அனுப்பவில்லை. கடவுளால் கொடுக்கப்பட்ட தம்முடைய வேலையை நிறைவேற்ற முடிகிறதற்கு முன்னால் இயேசுவை அழித்துவிட தேடிய எவரோ ஒருவரால் அனுப்பப்பட்டிருப்பதே அதிக சாத்தியமாயிருக்கிறதல்லவா?—ஆதியாகமம் 3:15 ஒப்பிடவும்.
கடவுளுடைய வார்த்தையைப் “பாரம்பரியத்தோடு” கலப்பதன் மூலம் அது “அவமாக்கப்படும்” என்பதாக இயேசு எச்சரித்தார். (மத்தேயு 15:6) இந்த நபர்களைச் சுற்றியுள்ள பாரம்பரியங்கள் வேத ஆதாரமற்றவை என்பது தெளிவாக இருக்கிறது. ஆகவே, வானசாஸ்திரிகளை வணங்குவது அல்லது அவர்களைப் பரிசுத்தமாகக் கருதுவது தவறாக இருக்குமென்று நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? (w88 12/15)
[அடிக்குறிப்புகள்]
a குருமார் “கிறிஸ்து இந்த வீட்டை ஆசீர்வதிப்பாராக” என்று பொருள்படும் லத்தீன் சொற்றொடர், கிறிஸ்டஸ் மன்சோனியம் பெனடிகேட்-ஐயும்கூட இதற்கு விளக்கமாகச் சுட்டிக்காண்பிக்கிறார்கள்.
b வானசாஸ்திரிகளின் வருகையைக் குறித்து மேலுமான தகவலுக்கு 1979, டிசம்பர் 15 ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 30 பார்க்கவும்.