பிள்ளைகளைக் கூட்டங்களிலிருந்து தடை செய்வதா?
‘குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் தேவனுடைய வீட்டுக்கு அழைத்துவரப்படக்கூடாது.’ இதுதான் பிரபல பைபிள் விளக்கவுரையாளர் ஆடம் க்ளார்க்கின் கருத்து. என்றபோதிலும் ‘தான் இல்லாதிருக்கும்போது தன் குழந்தையைப் பார்க்க ஒருவருமில்லாத நிலையிலிருக்கும்’ ஏழை தாய்க்கு ஒரு சலுகை அளித்தார். பிள்ளை அழுவது ‘சபைக்கும் சில பாதிரிமார்களுக்கும் அசெளகரியமாக இருக்கும் என்றாலும்,’ அப்படிப்பட்ட தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துவர அனுமதிக்கலாம்.
பிள்ளைகளை அழைத்துவருவதற்கு எதிரான தன்னுடைய ஒரு சார்புக் கருத்தை நெகேமியா 8:2-லுள்ள பைபிள் வசனத்தின் பேரில் அமைத்தார். அது வாசிப்பதாவது: “அப்படியே . . . ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்தான்.” என்றபோதிலும் அப்படிப்பட்ட விளக்கம், “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் . . . கற்றுக்கொண்டு” என்று உபாகமம் 31:12 தெரிவிக்கும் ஆவிக்கு முரணாக இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:15-ஐயும் பார்க்கவும்.
இந்த நோக்குநிலையில் பார்க்கும்போது, இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் எவரையும் தவிர்த்திட வேண்டும் என்ற எண்ணம் நெகேமியாவுக்குக் கிடையாது. மாறாக, தன்னுடைய அழைப்பின் உள்நோக்கம் “கேட்டு அறியத்தக்க அனைவரும்” சேர்க்கப்பட வேண்டும், முழு அளவு பங்குகொள்ளுதலை உற்சாகப்படுத்தவேண்டும் என்பதாகவே இருந்திருக்கும்! பிள்ளைகளைக் கவனிப்பாரின்றி வீட்டில் விட்டுவருவது என்னே ஒரு நியாயமற்ற செயல்!
அக்கறைக்குரிய காரியமென்னவெனில், இன்று யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய குழந்தைகளையும் பிள்ளைகளையும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அழைத்துவரும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர். உண்மைதான், இது சில சமயங்களில் சிறிதளவு தொந்தரவுகளையும் பெற்றோருக்கு ஓரளவு அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும். என்றாலும் தங்களுடைய பிள்ளைகள் அமைதியாக அமர்ந்திருக்க அவர்களைப் பயிற்றுவிக்க முயலுகிறார்கள். காலப்போக்கில் தங்களுடைய குழந்தைகள் “கேட்டு அறியத்தக்க”வர்களாகி ஜீவனளிக்கும் தகவல்களை உட்கிரகித்துக்கொள்வார்கள்.—எபிரெயர் 10:24, 25.
(w87 2⁄1)