ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
உண்மைத் தவறாமைக்கு ஒரு வெகுமதி
இத்தாலியில் 15 ஆண்டுகளுக்கு முன்பாக, அப்போது 15 வயதிலிருந்த திருமதி B——க்கு சத்தியம் கிடைத்தது. என்றபோதிலும் அவள் முன்னேறாமலே இருந்ததால் அவள் ஒரு அவிசுவாசியை விவாகம் செய்துகொண்டாள். ஆனால் சத்தியத்தின் விதைகள் அவள் இருதயத்தில் நிலை கொண்டிருக்க, ஒரு ஆண்டுக்கு முன்பாக, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்கவும் கூட்டங்களுக்குச் செல்லவும் ஆரம்பித்தாள். அவளுடைய கணவனோ இதை தீவிரமாக எதிர்த்து அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவதாக மிரட்டினான். மருத்துவ உதவி தேவைப்படும் அளவுக்கு அவன் அவளை அத்தனை பலமாக அடிப்பதுண்டு. ஒரு நாள் மாலை, அவன் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் ராஜ்ய மன்றத்துக்குள் நுழைந்து ஒரு சகோதரரை அடித்து, கதவின் கண்ணாடியை உடைத்து கோபா வேசத்தோடு கத்தினான்.
அவள் வீடு திரும்பியபோது, அவளை வெளியே விட்டு, கணவன் வீட்டை பூட்டிவிட்டான். தைரியத்தை இழந்துவிடாமல் அவள் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைப் பற்றிய தகவலை தெரிவித்துவிட்டு அவளுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்கு தூங்கச் சென்றுவிட்டாள். இரண்டு நாட்களுக்குப் பின்பு வீட்டுக்குள் வர கணவன் அனுமதி கொடுத்தான்.
கணவன் அந்த பட்டணத்திலுள்ளவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவனாயிருந்தான் யெகோவாவின் சாட்சிகள் தன்னுடைய குடும்பத்தை பாழாக்கிவிட்டதாக சொல்வதன் மூலம் அவன் யெகோவாவின் சாட்சிகளை பகிரங்கமாக எதிர்க்க ஆரம்பித்தான். சாட்சிகளுக்கு எதிராக அவன் மேற்கொண்ட போராட்டத்தில் மதகுருமார்கள் அவனை ஆதரித்தார்கள். பின்வரும் வார்த்தைகளுள்ள ஸ்டிக்கர்களுக்கு ஒரு பாதிரியார் ஏற்பாடு செய்தார்: “யெகோவாவின் சாட்சிகள்: இந்த குடும்பத்தின் சமாதானத்தைக் குலைத்துவிடாதீர்கள். நன்றி!” அந்த நகரிலுள்ள மக்களின் வீட்டுக் கதவுகளில் இவைகளை ஒட்ட அவர் ஏற்பாடு செய்தார். எல்லோரும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி பேசவும் அவர்களை ஏளனமாக கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள். இதன் மத்தியிலும் சகோதரர்கள் தைரியங்கொண்டு முன்னைவிட அதிகமான வைராக்கியத்தோடு ஊழியத்துக்குச் சென்று வந்தார்கள். பெரும்பாலான குடும்பங்கள், இந்த ஸ்டிக்கர்களை தங்களுடைய வீடுகளில் ஒட்டுவதை விரும்பவில்லை. பாதிரியார் அனுப்பிவைத்திருந்த இந்த பையன்களுக்கு கதவுகளில் ஒட்டுவதற்கு 100 லையர் பணம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் திரு. B——, சட்டப்பூர்வமாக பிரிந்து வாழ்வதற்கு தான் ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், அவள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதாக தன் மனைவியிடம் தெரிவித்தார். ஆனால் அவர் வாழ்ந்து வந்த இடத்தில் நிலைமை மாற ஆரம்பித்தது. உள்ளூர் வானொலி நிலையம் அளித்த ஒரு நிகழ்ச்சியில், இதை “சந்தேகத்திற்கிடமான கீழ்த்தரமான முறையிலமைந்த ஒரு நடவடிக்கை” என்பதாக அறிவிப்பாளர் விவரித்தார். இந்த நிகழ்ச்சியின்போது இந்த ஸ்டிக்கர்கள் பலருடைய வீடுகளில் விருப்பத்துக்கு மாறாக ஒட்டப்பட்டதை நமது சகோதரர்கள் விளக்கினார்கள். யெகோவாவின் சாட்சிகள் சிலருடைய வீட்டுக் கதவுகளிலும், அவர்கள் சந்திப்பதை வரவேற்ற மற்ற குடும்பங்களின் வீட்டுக் கதவுகளிலும் இரவு நேரத்தில் இவை ஒட்டப்பட்டது இதற்கு நிரூபணமாக இருந்தது. வானொலி அறிவிப்பாளர், யெகோவாவின் சாட்சிகளை புகழ்ந்து பேசி, “அவர்கள் உயர்தரமான பண்புகளுள்ள ஆட்கள் என்றும் அவர்கள் மிகவும் தயவோடு நடந்துக் கொள்கிறவர்களென்றும்” சொன்னார்.
கடைசியாக கணவன் விருப்பப்படி, சட்டப்பூர்வமாக இருவரும் பிரிந்து வாழ ஆரம்பிப்பதற்காக நீதிபதிக்கு முன் வர வேண்டிய அந்த சமயமும் வந்தது. பிரிந்து வாழ திருமதி B—— விரும்பாததைப் பாராட்டிப் பேசிய நீதிபதி, உரிமை கோரிக்கை வழக்குக்காக அவள் காத்துக்கொண்டிருக்கையில், பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை அவளிடமாக ஒப்படைத்தார். அவர்கள் தொடர்ந்து அதே வீட்டில் வாழலாம் என்றும் கணவன் மாதம் அவளுக்கு 250,000 லையர் பணம் கொடுக்க வேண்டுமென்றும் முடிவாயிற்று. கணவன் இதை ஏற்கவில்லை. “வீடு என் அம்மாவின் சொத்தாக இருப்பதால் என் மனைவி அங்கே இருக்கமுடியாது” என்று அவன் சொன்னான். “நீ எப்பொழுதும் கணவனாகவும் தலைவனாகவும் இருக்க விரும்புகிறாய். உன் மனைவி எப்பொழுதும் ஆம் என்று உனக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமென்கிறாய், ஒரு தரம் மாத்திரம் அவள் இதற்கு இடங்கொடுக்கவில்லை என்பதற்காக முழு நகரத்தையும் அமளி பண்ணிவிட்டாய். உன்னுடைய மனைவி உனக்கு உண்மையற்றவளாக இருந்திருந்தால் அதை என்னால் புரிந்துக்கொள்ள முடியும். ஆனால் அவள் ஏதோ ஒரு விசுவாசத்துக்குப் பதிலாக மற்றொன்றை பின்பற்றுகிறாள் என்றால் அது அவளுடைய சொந்த விஷயம்” என்பதாக நீதிபதி பதிலளித்தார்.
திருமதி B—— இப்பொழுது மகிழ்ச்சியோடு யெகோவாவை சேவித்து வருகிறாள். (மத்தேயு 5:10) இந்தப் பட்டணத்திலுள்ள ஆட்கள், அவர்களுடைய மனநிலையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். இப்பொழுது மகத்தான பைபிள் கலந்தாலோசிப்புகள் அங்கு நடைபெறுகின்றன. குடும்ப சமாதானத்தைக் குலைப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகள் அல்ல என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இன்னும் கதவுகளில் இந்த ஸ்டிக்கர்கள் இருக்குமேயானால், அவை இனிமேலும் எந்த விதத்திலும் அர்த்தமுள்ளவையாக இல்லை. (w87 5⁄1)