மற்றவர்களுக்கு முன்பாக மனத்தாழ்மையுள்ள இருதயத்துடன் ஜெபம் செய்தல்
இஸ்ரவேலின் சரித்திரத்தில் மகிழ்ச்சி மிகுந்த ஒரு நாள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டி புதிய தலைநகராகிய எருசலேமுக்குக் கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாட்டை செய்திருந்தான் தாவீது அரசன். பேரானந்தத்துடன் எல்லா மக்களுக்கும் முன்பாக அவன் யெகோவாவைத் துதித்தான். பின்வரும் இருதயப்பூர்வமான வார்த்தைகளடங்கிய ஜெபத்துடன் அந்தத் துதியை முடிக்கிறான்: “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரத்திற்குரியவர்.” அதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் முழு இருதயத்தோடு, “ஆமென் என்றும் யெகோவாவைத் துதியுங்கள் என்றும் சொன்னார்கள்.”—1 நாளாகமம் 16:36, தி.மொ.
இந்த விதத்திலே பூர்வகாலத்தில் கடவுளுடைய மக்களிடையில் தகுதிவாய்ந்த ஒருவர் மற்றவர்களை ஜெபத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் காரியம் வழக்கத்திற்கு மாறியதாக இருக்கவில்லை, இன்றும் யெகோவாவின் சாட்சிகளுக்கிடையே இதே பழக்கம் இருந்துவருகிறது. கிறிஸ்தவ கூட்டங்களிலும், மாநாடுகளிலும், குடும்பமாக உணவருந்தும் வேளைகளிலும், வீட்டு பைபிள் படிப்புகளிலும், மற்றும் சில சந்தர்ப்பங்களிலும் கிறிஸ்தவ ஆண்கள்—சில சமயங்களில் பெண்கள்—ஜெபத்தில் மற்றவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்புடையவர்களாயிருந்தனர். (1 கொரிந்தியர் 11:4, 5) பலன் என்ன? தாவீதின் நாளில் இருந்ததுபோல, ஜெபத்தைக் கவனமாக செவிகொடுத்துக் கேட்டு “ஆமென்” என்று சொல்லுபவர்கள் பக்திவிருத்தி அடைவதோடு, யெகோவாவோடு தங்களுடைய உறவு பலப்படுவதை உணரமுடிகிறது.
ஜெபத்தில் மற்றவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வது ஒரு பலமான உத்தரவாதம். ஜெபம் செய்யும் நபர் அதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் இருதயங்களிலுள்ளவற்றை சரியான விதத்தில் பிரதிபலிக்கும் கருத்துக்களைச் சொல்லுகிறவராக இருக்க வேண்டும். அவருடைய ஜெபம் அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையைப் பாதிக்கிறது. எனவே இந்த ஒரு சிலாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள் தாவீதின் விண்ணப்பத்தை எதிரொலிப்பது நல்லது: “என் விண்ணப்பம் உமக்கு முன்பாக தூபம்போன்று ஆயத்தம் செய்யப்பட்டதாக இருக்கக்கடவது.“—சங்கீதம் 141:2, NW.
நம்முடைய ஜெபங்கள் யெகோவாவுக்கு முன்பாக சுகந்தவாசனை கொண்ட தூபம் போன்றிருப்பதற்கு நாம் எப்படி ஆயத்தம் செய்யலாம்? இதில் நம்மை வழிநடத்த யெகோவா நமக்கு அளித்திருக்கும் காரியங்களின் வெளிச்சத்தில் நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதை முன்னதாகவே யோசித்துப் பார்ப்பதன் மூலம் ஆயத்தம் செய்யலாம். பைபிளில் அருமையான மாதிரி ஜெபங்களும், ஜெபத்தின் பேரில் ஏராளமான அருமையான ஆலோசனைகளும் காணப்படுகின்றன. இந்தக் காரியங்களைக் கவனிப்பதுதானே மற்றவர்கள் கேட்கும்படியாகவும் மற்றவர்களுடைய சார்பிலும் ஜெபம் செய்யும்போது உதவியாக இருக்கும் முக்கியமான நியமங்களை நமக்குப் போதித்திடும்.