அதிகாரம் 87
ஞானமாக, முன்கூட்டியே திட்டமிடுங்கள்
அநீதியுள்ள நிர்வாகி பற்றிய உவமை
செல்வங்களை வைத்து ‘நண்பர்களைச் சம்பாதியுங்கள்’
காணாமல் போன மகனைப் பற்றிய உவமையை இயேசு அப்போதுதான் சொல்லி முடித்திருந்தார். மனம் திருந்துகிற பாவிகளை மன்னிக்க கடவுள் தயாராக இருக்கிறார் என்ற பாடம் அங்கிருந்த வரி வசூலிக்கிறவர்களுக்கும், வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் நன்றாகப் புரிந்திருக்கும். (லூக்கா 15:1-7, 11) இப்போது, இயேசு தன் சீஷர்களுக்கு ஒரு உவமையைச் சொல்கிறார். அது ஒரு பணக்காரரையும் அவருடைய வீட்டு நிர்வாகியையும் பற்றிய உவமை. அவன் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அந்தப் பணக்காரர் கேள்விப்படுகிறார்.
அந்தப் பணக்காரரின் பொருள்களை அவன் வீணாக்குவதாக அவருக்குப் புகார் வருகிறது. அதனால், வேலையிலிருந்து அவனை நிறுத்தப்போவதாக அவர் சொல்கிறார். அப்போது அந்த நிர்வாகி, “வீட்டை நிர்வகிக்கும் வேலையிலிருந்து எஜமான் என்னை நீக்கப்போகிறார், இப்போது என்ன செய்வேன்? மண்ணைக் கொத்தி வேலை செய்ய எனக்குச் சக்தி இல்லை, பிச்சையெடுக்கவும் வெட்கமாக இருக்கிறது” என்று சொல்லிக்கொள்கிறான். பிறகு, “எனக்கு ஒரு யோசனை வருகிறது! எஜமான் என்னை வேலையிலிருந்து நீக்கும்போது மற்றவர்கள் என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் ஒன்று செய்யப்போகிறேன்” என்றும் சொல்லிக்கொள்கிறான். எஜமானிடம் கடன் வாங்கியிருந்த ஒவ்வொருவரையும் உடனடியாகக் கூப்பிட்டு, “என் எஜமானிடம் நீங்கள் எவ்வளவு கடன் வாங்கினீர்கள்?” என்று கேட்கிறான்.—லூக்கா 16:3-5.
முதல் ஆள், ‘100 குடம் ஒலிவ எண்ணெய்’ என்று சொல்கிறார். அது கிட்டத்தட்ட 2,200 லிட்டர் எண்ணெய்க்குச் சமம். கடன் வாங்கியவருக்கு ஒரு பெரிய ஒலிவத் தோட்டம் இருந்திருக்கலாம், அல்லது எண்ணெய் விற்கிற வியாபாரியாக அவர் இருந்திருக்கலாம். அந்த நிர்வாகி அவரிடம், ‘இதோ, உங்களுடைய கடன் பத்திரம். உட்கார்ந்து 50 [1,100 லிட்டர்] என்று சீக்கிரம் எழுதுங்கள்’ என்கிறான்.—லூக்கா 16:6.
பின்பு அடுத்து வந்தவரிடம், “நீங்கள் எவ்வளவு கடன் வாங்கினீர்கள்?” என்று கேட்கிறான். அதற்கு அவர், “100 கலம் கோதுமை” என்று சொல்கிறார். அது 22,000 லிட்டருக்குச் சமம். அப்போது அவன், “இதோ, உங்களுடைய கடன் பத்திரம். 80 என்று எழுதுங்கள்” என்று சொல்கிறான். இப்படி, அவருடைய கடனில் 20 சதவீதத்தைக் குறைக்கிறான்.—லூக்கா 16:7.
அந்த எஜமானின் பணத்தை அவன்தான் இன்னமும் நிர்வகித்துக்கொண்டிருக்கிறான். அதனால், கடனாளிகள் வாங்கிய கடனைக் குறைக்க அவனுக்கு அதிகாரம் இருக்கிறது. கடனைக் குறைத்து, அந்தக் கடனாளிகளின் நட்பை அவன் சம்பாதிக்கிறான். வேலை போன பிறகு, இவர்கள் தனக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறான்.
அவன் செய்ததெல்லாம் எஜமானுக்குத் தெரியவருகிறது. அவன் செய்த காரியத்தால் அவருக்கு நஷ்டம்தான். ஆனாலும், எஜமான் அவனை மெச்சுகிறார். “அந்த நிர்வாகி அநீதியுள்ளவனாக இருந்தாலும், ஞானமாக நடந்துகொண்டதால்” எஜமான் அவனைப் பாராட்டுகிறார். இயேசு இந்த உவமையைச் சொன்ன பிறகு, “ஒளியின் பிள்ளைகளைவிட இந்த உலகத்தின் பிள்ளைகள் அதிக ஞானமாக நடந்துகொள்கிறார்கள்” என்று சொல்கிறார்.—லூக்கா 16:8.
அந்த நிர்வாகி செய்தது சரி என்றோ, வியாபாரத்தில் தில்லுமுல்லு செய்வது நியாயம் என்றோ இயேசு சொல்லவில்லை. அப்படியானால், அவர் என்ன சொல்கிறார்? “அநீதியான செல்வங்களை வைத்து உங்களுக்காக நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அப்போது, அவை இல்லாமல் போகும்போது அவர்கள் உங்களை என்றென்றும் நிலைத்திருக்கும் வீடுகளில் ஏற்றுக்கொள்வார்கள்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 16:9) முன்யோசனையோடு நடந்துகொள்வதையும் ஞானமாக நடந்துகொள்வதையும் பற்றி இந்த உவமையிலிருந்து கற்றுக்கொள்கிறோம். ‘ஒளியின் பிள்ளைகளான’ கடவுளின் ஊழியர்கள், முடிவில்லாத வாழ்வை மனதில் வைத்து தங்களுடைய பணத்தையும் பொருளையும் ஞானமாகப் பயன்படுத்த வேண்டும்.
யெகோவா தேவனாலும் அவருடைய மகனாலும் மட்டும்தான் ஒருவரைப் பரலோக அரசாங்கத்திலோ, பூஞ்சோலை பூமியிலோ ஏற்றுக்கொள்ள முடியும். அவர்களுடன் நட்பை வளர்த்துக்கொள்ள நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அதற்காக, நம்முடைய பணத்தையும் பொருளையும் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆதரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், தங்கமும் வெள்ளியும் மற்ற செல்வங்களும் ஒன்றுக்கும் உதவாமல் போனாலும், ஏன், அழிந்தேபோனாலும் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.
தங்களிடம் இருக்கிற செல்வங்களைக் கவனித்துக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் உண்மையாக இருக்கிறவர்கள், அவற்றைவிட முக்கியமான விஷயங்களிலும் உண்மையாக இருப்பார்கள் என்றும் இயேசு சொல்கிறார். “அநீதியான செல்வங்களைக் கையாளுவதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லையென்றால், யார் உங்களை நம்பி உண்மையான செல்வங்களை [கடவுள் தன்னுடைய மக்களுக்குக் கொடுக்கிற பொறுப்புகளை] ஒப்படைப்பார்கள்?” என்று கேட்கிறார்.—லூக்கா 16:11.
“என்றென்றும் நிலைத்திருக்கும் வீடுகளில்” ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தன்னுடைய சீஷர்களிடம் நிறைய விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்று இயேசு சொல்கிறார். அவர்கள் கடவுளுக்கும் உண்மையாகச் சேவை செய்துகொண்டு, அநீதியான செல்வங்களுக்கும் அடிமைகளாக இருக்க முடியாது. அதனால், “எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது. ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான். அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று கடைசியாக இயேசு சொல்கிறார்.—லூக்கா 16:9, 13.