அதிகாரம் 79
ஏன் அவர்களுக்கு அழிவு?
கோரமான இரண்டு சம்பவங்களை வைத்து இயேசு கற்பிக்கிறார்
கூன் விழுந்த பெண் ஓய்வுநாளில் குணமாகிறாள்
தங்களைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்று மக்களை யோசிக்க வைக்க இயேசு பல வழிகளில் முயற்சி செய்துவிட்டார். பரிசேயனின் வீட்டுக்கு வெளியே கூடியிருந்த மக்களிடம் பேசிய பிறகு, இயேசுவுக்கு இதைப் பற்றிக் கற்பிக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது.
அவர்களில் சிலர் ஒரு கோரமான சம்பவத்தைப் பற்றி அவரிடம் சொல்கிறார்கள். “பலி கொடுத்துக்கொண்டிருந்த கலிலேயர்களை [ரோம ஆளுநரான பொந்தியு] பிலாத்து கொன்றுபோட்ட” செய்தியை அவரிடம் சொல்கிறார்கள். (லூக்கா 13:1) அது என்ன சம்பவம்?
எருசலேமுக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்காக பிலாத்து ஒரு கால்வாயைக் கட்டினான். அதற்குத் தேவையான பணத்தை ஆலயத்தின் பொக்கிஷ அறையிலிருந்து எடுத்தான். ஆலய அதிகாரிகளின் உதவியோடு பிலாத்து இந்தப் பணத்தை எடுத்திருக்கலாம். ஆயிரக்கணக்கான யூதர்கள் இதை எதிர்த்தார்கள். ஒருவேளை, அந்தச் சமயத்தில் இந்த கலிலேயர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்ட கலிலேயர்கள் மோசமான பாவங்களைச் செய்திருப்பார்கள் என்று இயேசுவிடம் பேசிக்கொண்டிருக்கிற மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இயேசு அதை மறுக்கிறார்.
இயேசு அவர்களிடம், “அந்த கலிலேயர்களுக்கு இப்படி நடந்ததால் மற்ற எல்லா கலிலேயர்களையும்விட அவர்கள் பெரிய பாவிகள் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்கிறார். இல்லவே இல்லை என்பதுதான் அவருடைய பதில். ஆனால், இந்தச் சம்பவத்தை வைத்து யூதர்களை இயேசு எச்சரிக்கிறார். “மனம் திருந்தவில்லை என்றால் நீங்கள் எல்லாரும் அதுபோலவே கொல்லப்படுவீர்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார். (லூக்கா 13:2, 3) அதற்குப் பிறகு, கோரமான இன்னொரு சம்பவத்தை இயேசு குறிப்பிடுகிறார். அது சமீபத்தில் நடந்திருக்கலாம். ஒருவேளை, அதுவும்கூட அந்தக் கால்வாயைக் கட்டுகிற விஷயத்தோடு சம்பந்தப்பட்டிருக்கலாம்.
“சீலோவாம் பக்கத்தில் கோபுரம் இடிந்து விழுந்தபோது செத்துப்போன 18 பேர், எருசலேமில் குடியிருக்கிற மற்ற எல்லாரையும்விட பெரிய குற்றவாளிகள் என்று நினைக்கிறீர்களா?” என்று இயேசு கேட்கிறார். (லூக்கா 13:4) ஏதோ பாவம் செய்ததால்தான் அவர்கள் இறந்துபோனார்கள் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அப்படி இல்லை என்று இயேசு சொல்கிறார். “எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள்” நடக்கின்றன என்பது அவருக்குத் தெரியும். இந்தக் கோரமான சம்பவத்துக்கும் இதுதான் காரணமாக இருந்திருக்கலாம். (பிரசங்கி 9:11) ஆனால், மக்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். “மனம் திருந்தவில்லை என்றால் நீங்கள் எல்லாரும் அவர்களைப் போலவே அழிந்துபோவீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 13:5) இயேசு ஏன் இப்போது இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்?
அவர் இப்போது ஊழியம் செய்கிற இடம்தான் அதற்குக் காரணம். இயேசு இது சம்பந்தமாக ஒரு உவமையைச் சொல்கிறார். “ஒருவர் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். பழம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வந்தபோது அதில் ஒன்றுகூட இல்லை. அதனால் தோட்டக்காரரிடம், ‘இந்த அத்தி மரத்தில் பழம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க மூன்று வருஷங்களாக வருகிறேன். ஆனால் இதில் ஒரு பழத்தைக்கூட பார்க்கவில்லை. அதனால், இதை வெட்டிப்போடு! இது ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். அதற்கு அந்தத் தோட்டக்காரர், ‘எஜமானே, இந்த மரம் இன்னும் ஒரு வருஷம் இருக்கட்டும். இதைச் சுற்றிலும் கொத்திவிட்டு எரு போடுகிறேன். வருங்காலத்தில் இது கனி கொடுத்தால் நல்லது. இல்லையென்றால், இதை வெட்டிப்போடுங்கள்’ என்று சொன்னான்” என்கிறார்.—லூக்கா 13:6-9.
மூன்று வருஷங்களுக்கும் மேலாக, யூதர்களுடைய விசுவாசத்தை வளர்க்க இயேசு முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஆனால், சிலர் மட்டும்தான் அவருடைய சீஷர்களாக ஆகியிருக்கிறார்கள். அவருடைய வேலைக்குக் கிடைத்த பலன் இவர்கள்தான். இப்போது அவருடைய ஊழியத்தின் நான்காவது வருஷத்தில் இன்னும் தீவிரமாக முயற்சி செய்கிறார். அத்தி மரத்தைச் சுற்றிலும் கொத்திவிட்டு எரு போடுவதுபோல், யூதேயாவிலும் பெரேயாவிலும் அவர் பிரசங்கிக்கிறார், கற்பிக்கிறார். ஆனால், ஒருசில யூதர்கள்தான் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். மொத்தத்தில் பார்த்தால், அந்தத் தேசம் திருந்த மறுக்கிறது, அழிவதற்குத் தயாராக இருக்கிறது.
பெரும்பாலான மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இதற்குப் பிறகு நடந்த இன்னொரு சம்பவம் காட்டுகிறது. ஓய்வுநாளில், ஒரு ஜெபக்கூடத்தில் இயேசு கற்பித்துக்கொண்டிருக்கிறார். கொஞ்சமும் நிமிர முடியாதளவு கூன் விழுந்த ஒரு பெண்ணை அங்கே பார்க்கிறார். பேய் பிடித்திருந்ததால் 18 வருஷங்களாக அவள் இப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். இயேசு அவளைப் பார்த்து இரக்கப்பட்டு, “பெண்ணே, உன் உடல்நலப் பிரச்சினையிலிருந்து நீ விடுதலை பெற்றாய்” என்று சொல்கிறார். (லூக்கா 13:12) இயேசு அவள்மேல் தன்னுடைய கைகளை வைத்தவுடனே அவள் நிமிர்ந்து நின்று கடவுளைப் புகழ ஆரம்பிக்கிறாள்.
அதைப் பார்த்து ஜெபக்கூடத் தலைவன் கோபப்படுகிறான். “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் இருக்கிறதே; அந்த நாட்களில் வந்து குணமடையுங்கள், ஓய்வுநாளில் கூடாது” என்று சொல்கிறான். (லூக்கா 13:14) குணமாக்குகிற சக்தி இயேசுவுக்கு இல்லை என்று அவன் சொல்லவில்லை. குணமாவதற்காக ஓய்வுநாளில் அவரிடம் வருகிற மக்களைத்தான் அவன் கண்டிக்கிறான். அப்போது இயேசு, “வெளிவேஷக்காரர்களே, ஓய்வுநாளில் நீங்கள் யாரும் உங்களுடைய காளையையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துப்போய் அதற்குத் தண்ணீர் காட்ட மாட்டீர்களா? அப்படியானால், சாத்தான் 18 வருஷங்களாகக் கட்டி வைத்திருந்த ஆபிரகாமின் மகளான இந்தப் பெண்ணை இந்தக் கட்டிலிருந்து ஓய்வுநாளில் விடுதலை செய்யக் கூடாதா?” என்று கேட்கிறார்.—லூக்கா 13:15, 16.
இதைக் கேட்டதும் அவரை எதிர்க்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போகிறார்கள். ஆனால், கூட்டத்தார் எல்லாரும் அவர் செய்த அற்புதமான செயல்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். பிறகு, அரசாங்கத்தைப் பற்றிய இரண்டு உவமைகளை யூதேயா மக்களுக்கு இயேசு சொல்கிறார். அவை எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றிய உவமைகள். முன்பு, கலிலேயா கடலில் ஒரு படகில் உட்கார்ந்து கற்பித்த சமயத்தில் இயேசு இவற்றைச் சொல்லியிருந்தார்.—மத்தேயு 13:31-33; லூக்கா 13:18-21.